விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கருவூலம்: பிகார் மாநிலம்!

கயா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரம் இது. இந்து மதக் கோட்பாடுகளின்படி முக்தி தரும் ஏழு நகரங்களில் கயையும் ஒன்று. கயையில் இந்துக்கள் நீத்தார் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 4:33 pm

கே.பார்வதி

சென்ற இதழ் தொடர்ச்சி....

கயா நகரம்!

கயா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரம் இது. இந்து மதக் கோட்பாடுகளின்படி முக்தி தரும் ஏழு நகரங்களில் கயையும் ஒன்று. கயையில் இந்துக்கள் நீத்தார் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும். பால்கு ஆற்றின் கரையில் இந்நகரம் அமைந்துள்ளது. கயை இந்துக்களுக்கும், பெளத்தர்களுக்கும் முக்கியமான புண்ணியத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள விஷ்ணு பாதம் கோயிலும், பால்கு நதியும் புனிதமானதாகக் கொண்டாடப்படுகிறது.

பால்கு ஆறு!

இந்த ஆறு நிரஞ்சனா ஆறு என அழைக்கப்படுகிறது. மழைக் காலங்களில் மட்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். கோடையில் வறண்டு காணப்படும்.
ஜம்பியா கிராமம்!

ஜமூய் மாவட்டத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது. இங்குதான் ஜைன மதத்தின் 24 - ஆவது தீர்த்தங்கரராகிய வர்த்தமான மகாவீரர் அறிவொளி பெற்றார் என சமண சமய சாத்திரங்கள் கூறுகின்றன. சமணர்களின் புனிதத் தலமாகத் திகழ்கிறது.

தர்பாங்கா நகரம்!

தர்பாங்கா நகரம் விவசாயத்தில் செழிக்கும் இடமாகும். கங்கை நதிக்கும், இமயமலைக்கும் நடுவே உள்ளது. இந்நகரம் பழங்காலத்தில் மிதிலா என்று அழைக்கப்பட்டது. "மதுபானி' பாணி ஓவியங்களுக்குப் புகழ்பெற்றது. மேலும் இசை, நாட்டுப்புறக் கலைகள், ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது.

இங்குள்ள தர்பாங்கா கோட்டை, ஷ்யாமா காளி கோயில், குஷேஷ்வர் அஸ்தான் கோயில், மஜர் மக்தூம் பாபா, புனித ரோஸரி தேவாலயம். சந்திரதாரி அருங்காட்சியகம், ஹராஹாரி குளம் ஆகியவை காணவேண்டியவை.

கைமூர் வனவிலங்கு சரணாலயம்!

விந்திய மலைத்தொடரின் கிழக்குப் பகுதியே கைமூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள 1342 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட வனவிலங்கு சரணாலயம்தான் பிகார் மாநிலத்தில் மிகப் பெரிய வனவிலங்கு சரணாலயமாகும். இங்கு கர்ஹாட், டெல்ஹார் அருவிகளும், சில ஏரிகளும் உள்ளன. உயர்ந்த மரங்களும், தாவர இனங்களும் அடர்த்தியாக இங்கு உள்ளன.
புலிகள், சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், சாம்பார் மான்கள், சீத்தல் மான்கள், ஆண்டிலோப் மான்கள், நீல்கை மான்கள் போன்றவை உள்பட பல்வேறு விலங்கினங்களும், பறவையினங்களும் இங்கு உள்ளன.

படகுச் சவாரி, மீன் பிடித்தல், நீச்சல் அருவிக் குளியல், நீர்விளையாட்டுகள் போன்றவை பிரசித்தமானவை.

பீம்பந்த் வன விலங்குகள் சரணாலயம்!

முங்கர் மாவட்டத்தில் உள்ள சரணாலயம் இது. கராக்பூர் மலைகளில் இப்பூங்கா அமைந்துள்ளது. ஆசியாக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எண்ணற்ற பறவைகள் இங்கு புலம் பெயர்ந்து வருகின்றன. உயர்ந்த மரங்களும், தாவர இனங்களும், விலங்கினங்களும், பறவையினங்களும் இங்கு காணப்படுகின்றன.

பள்ளத்தாக்குகளில் சீதா குண்ட், ரிஷி குண்ட், பீம்பந்த் குண்ட் போன்ற வெந்நீர் ஊற்றுகள் மற்றும் காரக்பூர் ஏரி ஆகிய அழகிய இடங்கள் இங்குள்ளன.

கன்வார் ஏரி பறவைகள் சரணாலயம்!

இங்கு குளிர்காலத்தில் 60 க்கும் மேற்பட்ட பறவையினங்கள் புலம் பெயர்ந்து வருகின்றன. மேலும் இங்கேயே நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் காணப்படுகின்றன. கன்வார் ஏரி சுத்தமான நீரைக் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய லாட அமைப்பு ஏரியாகும்! மிக அழகான இடம்.

விக்கிரமசிங்கா கங்கை ஆற்று டால்பின்கள் (ஓங்கில்கள்) சரணாலயம்!

பிகாரில், பகல்பூர் மாவட்டத்தில் 67 கி.மீ. தொலைவுக்கு ஓடும் கங்கை நதி பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும். இங்குதான் ஓங்கில்கள் சரணாலயம் உள்ளது. இந்த ஓங்கில்கள் என அழைக்கப்படும் ஆற்று டால்பின்கள் பெருமளவில் வேட்டையாடப்படுதல், ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுதல், அதிகரிக்கும் படகுப் போக்குவரத்து, ஆற்று நீர் மாசுபடுதல், ஆகிய காரணங்களால் அழிந்துவருகின்றன. எனவே ஓங்கில்களுக்கு சரணாலயம் அமைத்து அவை இங்கு பாதுகாக்கப்படுகின்றன. ஓங்கில்கள் நன்னீரில் மட்டுமே வாழக்கூடியவை. மேலும் இவை பார்வையற்றவை. கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகளில் காணப்படுகின்றன. இவை தங்கள் இரையை வேட்டையாட எதிரொலி முறையை கையாள்கின்றன.

முங்கர் நகரம்!

இந்நகரம் காசிம் அலிகானின் காலத்தில் வங்காளத்தின் தலைநகரமாக விளங்கியது. வரலாற்றுச் சிறப்பு மிக்க முங்கர் கோட்டை, ராமேஸ்வர் குண்ட் என்னும் வெந்நீர் ஊற்று, கஸ்டஹர்னி படித்துறை, சீதா கந்த் மன் பத்தர் வெந்நீர் ஊற்று போன்றவை புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களாகும்.

வால்மீகி தேசியப் பூங்கா!

இப்பூங்கா மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 900 ச.கி.மீ. பரப்புள்ளது. இதில் 335 ச.கி.மீ. பகுதி புலிகள் காப்பகமாக உள்ளது. பல்வேறு வகையான விலங்கினங்களும், பறவைகளும், ஊர்வன, பூச்சியினங்களும் இங்குள்ளன.

சில முக்கியத் தகவல்கள்!


ஜனபதங்கள்!

கி.மு. 1200 முதல் கி.மு. 600 வரை வடஇந்தியாவில் இருந்த குடியரசுள் மற்றும் முடியரசுகளே ஜனபதங்கள் எனப்படுகின்றன. பாணினியின் சமஸ்கிருத இலக்கண நூலான "அஷ்டாத்யாயி' யிலும், இதிகாசங்கள் மற்றும் புராணங்களிலும் 22 ஜனபத ராஜ்ஜியங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அவைகளில் குறிப்பிடத்தக்கவை குருநாடு, பாஞ்சாலம், விதேகம், கோசல நாடு ஆகியவையாகும்.

மகா ஜனபதம்!

கி.மு. 66 முதல் கி.மு. 300 வரை காணப்பட்ட நாடுகளே மகா ஜனபதம் எனக் குறிப்பிடப்படுகின்றன.

அவை அங்கம், கோசலை, வத்சம், குரு, பாஞ்சாலம், காசி, மகதம், வஜ்ஜி, மல்லம், சேதி, மத்சம், சூரசேனம், அஸ்மகம், அவந்தி, காந்தாரம், காம்போஜம், ஆகிய 16 நாடுகளே மகாஜனபத நாடுகளாகும்.

இந்தியாவின் பல்வேறு இடங்களில் மெளரியப் பேரரசர் அசோகரால் (கி.மு. 273 - கி.மு. 236) நிறுவப்பட்ட தூண்களை அசோகரின் தூண்கள் என அழைக்கின்றனர். அசோகரால் ஏராளமான தூண்கள் நிறுவப்பட்ட போதிலும் இன்று 19 தூண்களே காணப்படுகின்றன. அவைகளில் பல உடைந்த நிலையில் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றில் நான்கு சிங்கங்கள் நான்கு திசைகளிலும் நோக்கியபடி உள்ள சின்னமே இன்று இந்தியாவின் தேசியச் சின்னமாக விளங்குகிறது.

மைதிலி மொழி!

இந்தி வங்காளம் ஆகிய இரு மொழிச் சொற்களையும் கலந்து இந்த மொழி பேசப்படுகிறது. மிதிலையின் ஆட்சி மொழியாக இருந்துள்ளது. சமஸ்திபூர், சீதாமடி, பேட்டியா, பாட்னா மற்றும் நேபாளத்திலுள்ள தேரை என்ற நகரத்திலும் மைதிலி மொழியைப் பேசும் மக்கள் அதிகமாக உள்ளனர்.

தற்போது இந்தியாவின் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் மைதிலி மொழியும் ஒன்று.

சந்திரகுப்த மெளரியர் காலத்தில் இப்பிரதேசத்திற்கு கிரேக்கப் பயணி மெகஸ்தனிஸ் வந்திருக்கிறார். அவரது குறிப்புகள் "இண்டிகா' என்ற நூலில் உள்ளன. பின்பு அசோகரின் காலத்தில் மெகஸ்தனிஸின் மகன் டியோநிசியஸ் இங்கு வந்திருக்கிறார்.

இந்தியாவின் புகழ் பெற்ற கலாச்சாரம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே பல்வேறு பேரரசர்களால் செய்யப்பட்ட மிகச் சிறந்த ஆட்சி முறை, அவற்றின் வரலாற்று அடையாளங்கள், கலை நயமிக்க மதுபனி ஓவியங்கள், மலைகளும், வனங்களும், ஆறுகளும், ஏரிகளும், நீர்வீழ்ச்சிகளும் சூழ்ந்த பிரதேசங்கள், மற்றும் வளமான விவசாயம், பரவசமூட்டும் புத்த மற்றும் இந்துமதப் புனிதத் தலங்கள் போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது பிகார்!

நிறைவு...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.