குறள் நெறிக் கதைகள்!

முன்னொரு காலத்தில் "வீர கேசரி' என்ற அரசன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எல்லா விதத்திலும் துணையாக மந்திரி ஒருவர் வாழ்ந்து வந்தார்
குறள் நெறிக் கதைகள்!

மூவகை மக்கள்
 முன்னொரு காலத்தில் "வீர கேசரி' என்ற அரசன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எல்லா விதத்திலும் துணையாக மந்திரி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரது அறிவுரை இன்றி அரசன் எந்த வேலையையும் செய்ய மாட்டான்.
 இப்படி இருக்கையில் முதுமையினால் அந்த மந்திரி தளர்ந்து கொண்டே வந்தார். எனவே தனக்குப் பிறகு மன்னரையும் இளவரசரையும் வழி நடத்த சரியான ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். எனவே அவர் மன்னரிடம் சென்று சரியான நபரைத் தேர்ந்தெடுக்கத் தான் ஒரு போட்டி வைக்க விரும்புவதாகக் கூறினார்.
 "இதற்குப் போட்டி எதற்கு? நம் ராஜ குருவின் குருகுலத்தில் பயிலும் மாணவர்களில் நன்கு படிப்பவனையே அடுத்த மந்திரியாக நியமிக்கலாமே?'' என்றான் அரசன். அதற்கு மந்திரி, "ஏட்டுக் கல்வி மட்டுமே ஒருவனுக்குப் போதாது! நிர்வாகத் திறமையும், நுண்ணறிவும், சமயோசித புத்தியும், விரைவில் முடிவு எடுக்கக் கூடிய திறமையும் ஒரு மந்திரிக்குத் தேவை!'' என்றார். மன்னரும் இச்சோதனைக்கு ஒப்புக் கொண்டார். அதன் படி ஒரே மாதிரி மூன்று மரப் பொம்மைகள் உருவாகப் பட்டன.
 மந்திரி பதவிக்குத் தேர்ந்து எடுக்கப் பட இருந்த இளைஞர்கள் ஒவ்வொருவராக அழைக்கப் பட்டு அவர்களிடம் அந்த பொம்மைகள் வழங்கப் பட்டன. அவர்கள் அந்த பொம்மைகளைக் கூர்ந்து கவனித்தனர்.
 மந்திரி அவர்களிடம், "இளைஞர்களே! இம்மூன்றில் ஒரே ஒரு பொம்மை மட்டும் சிறந்தது! அது எது என்று கூறுங்கள்?'' என்றார். ஒருவருக்கும் இதற்கான விடை தெரியவில்லை. எனவே ஒருவரும் தேர்வு ஆகவில்லை. ஆச்சரியமடைந்த மன்னன், "என்ன? ஒருவர் கூடத் தகுதியானவர் இல்லையா?'' என்று கேட்டார்.
 அதற்கு மந்திரி "மன்னா! நாம் கல்வி பயில்வோரை மட்டுமே சோதித்து உள்ளோம். கல்வி பயிலாத போதும் அறிவாளிகளாகவும்,மேதைகளாகவும் பலர் உள்ளனர். அவர்களையும் அழைத்து சோதித்து விடுவோம்!' என்றார்.
 "கற்றவர்களே உமது கேள்விக்கு பதில் சொல்லத் திணறும் பொழுது கல்லாதவர் எப்படி பதில் கூறுவர்?பேசாமல் உமது மகனையே அடுத்த மந்திரியாகப் ப்ரகடனம் செய்து விடுவோம்!'' என்றார் மன்னர்.
 ""பொருத்தமே இல்லாதவன் என் மகன்! சற்றுப் பொறுங்கள் மன்னா!'' என்றார் மந்திரி.
 மறுநாள் முதல் நாட்டில் இருந்த எல்லா இளைஞர்களும் அழைக்கப் பட்டு மூன்று பொம்மைகளில் எது சிறந்தது? என்று கேட்கப் பட்டனர். ஒருவருக்கும் பதில் கூறத் தெரியவில்லை.
 ஆனால் ஆனந்தன் என்ற மாடு மேய்க்கும் இளைஞன் ஒருவன் மட்டும் ஒரு பொம்மையைக் காட்டி, "இது தான் சிறந்தது!'' என்றான். வியப்பின் உச்சிக்கே சென்ற மந்திரி, "எப்படி?'' என்று கேட்டார். அதற்கு ஆனந்தன், "அய்யா! நீங்கள் கொடுத்த மூன்று பொம்மைகளிலும் சிறு சிறு துளைகள் காணப்படுகின்றன. ஒரு பொம்மைக்கு ஒரு காதில் இருந்து மற்றொரு காதுவரை துளை உள்ளது . மற்றொரு பொம்மைக்கு ஒரு காதில் மட்டுமே துளை உள்ளது. மூன்றாவது பொம்மைக்கு காதில் உள்ள துளை வாயில் உள்ள துளையோடு இணைக்கப் பட்டுள்ளது.
 மூன்று பொம்மைகளும் மூவகை மனிதர்களைக் குறிக்கின்றன. முதல் வகை பொம்மையைப் போன்ற மனிதர்கள் நல்லதிறமையானவர்கள் அல்லர். ஏனெனில் அந்த பொம்மையைப் போன்ற மனிதர்கள் தம் ஒரு காதில் வாங்கும் செய்திகளைத் தம் மறு காது வழியாக விட்டுவிடுவர்!ஆகவே அத்தகைய அலட்சிய மனப் பான்மை கொண்டவர்களுடன் நாம் நட்புறவு கொள்ளக் கூடாது. மூன்றவது வகை பொம்மையைப் போன்றவர்கள் தம் காதில் விழும் செய்திகளைத் தம் வாயால் பிறருக்குக் கூறி விடுவர். இதன் மூலம் ரகசியங்களைப் பாதுகாக்கும் தன்மை இல்லாமலும் கோள் சொல்லும் தன்மை உடையவர்களாகவும் இருப்பர்! ஆகவே அத்தகையவர்கள் ஆபத்தானவர்கள். இரண்டாம் வகை பொம்மையே சிறந்தது!ஏனெனில் அதில் ஒரு காதில் மட்டுமே உள்ள துளை தொண்டைப் பகுதியிலேயே முடிந்து விடுகிறது. இத்தகைய மனிதர்கள் தம்மிடம் வரும் நன்மை தீமைகளைப் பகுத்து அறிந்து, அதற்கு ஏற்பச் செயல்படுவர். ரகசியத்தை கட்டிக் காப்பர். எனவே இரண்டாம் வகை பொம்மையே சிறந்தது!" என்றான்.
 இதைக் கேட்டு மகிழ்ந்த மந்திரியும் "அடுத்த மந்திரியாகப் பணி புரியத் தகுதியானவன் ஆனந்தன் மட்டுமே!'' என அறிவித்தார்.
 இதையேதான் வள்ளுவரும், "தெரிந்து வினையாடல்'" என்ற அதிகாரத்தில்,
 வினைக்குரிமை நாடிய பின்னை அவனை
 அதற்குரியன் ஆகச் செயல்.
 - என்கிறார்.
 - இதன் பொருள் "இவன் இந்த வேலைக்குத் தகுதியானவன் என்று ஆராய்ந்து கண்ட பிறகே அவனை அத்தொழிலுக்கு உரியவனாகச் செய்ய வேண்டும்!' என்பதாகும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com