ஆட்டிடையனும், அறிஞரும்!

ஸ்ன்னொரு காலத்தில் விதர்ப தேசத்தில் நன்கு படித்த கல்விமான் ஒருவர் இருந்தார். அவர் வேதங்கள், உபநிடதங்கள், சாஸ்த்திரங்கள் என எல்லாவற்றையும் கற்று இருந்தார்.
 ஆட்டிடையனும், அறிஞரும்!

குறள் நெறிக் கதைகள்!
 ஸ்ன்னொரு காலத்தில் விதர்ப தேசத்தில் நன்கு படித்த கல்விமான் ஒருவர் இருந்தார். அவர் வேதங்கள், உபநிடதங்கள், சாஸ்த்திரங்கள் என எல்லாவற்றையும் கற்று இருந்தார். இதனால் மிகப் பெரிய அறிவாளியாகத் திகழ்ந்தார்.
 அவர் பல மொழிகளையும் அறிந்திருந்ததால் தன் வாதத் திறமையால் எப்படிப் பட்ட மனிதரையும் வென்று விடுவார். எதைப் பற்றியும் ஒரு முறை படித்தாலே அதை அப்படியே திருப்பிக் கூறிவிடும் அபாரமான நினைவாற்றலையும் கொண்டிருந்தார்.
 ஆனால் "குறையே இல்லாத மனிதர்கள் உலகில் இல்லை' என்ற கூற்றுக்கு ஏற்ப அவரிடம் ஒரு குறை இருந்தது. "அது தான் "அகம்பாவம்". அவர் எந்த தேசத்திற்குச் சென்றாலும் அ ந் நாட்டு மன்ன்னிடம் தன் திறமைகளைக் காட்டி,' "என்னால் பதில் கூற முடியாத கேள்வி என்று இந்த உலகத்தில் எதுவுமே இல்லை!
 காரணம் நான் மெத்தப் படித்தவன்! அப்படி நான் திகைப்படையச் செய்யும் படியாக ஒரு கேள்வியை யாராவது என்னிடம் கேட்டால் இதுவரை நான் தேடிய செல்வம் அனைத்தையும் அவனுக்கே தந்து விடுகிறேன்!...அவரே என்னை விட மிகச் சிறந்த அறிவாளி என்பதையும் ஒத்துக் கொள்கிறேன்! துரதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு அறிவாளியை இதுவரை நான் சந்தித்தது இல்லை! என் சவாலுக்கு உங்கள் தேசம் தயாரா?'' என்று கேட்பார்.
 அப்படி ஒரு கேள்வியை யாரும் கேட்க முடியாததால் அந்நாட்டு மன்னன் பல பொருள்களையும் பொன்னையும் பரிசாக அளிப்பான். இதனால் பெருஞ்செல்வந்தராகவும் அவர் விளங்கினார்.
 ஒரு நாள் வேறு ஒரு தேசத்திற்குச் சென்ற அந்த அறிஞர் வழக்கம் போலத் தன் பெருமைகளை எல்லாம் கூறிவிட்டு, "என் சவாலுக்கு உங்கள் தேசம் தயாரா?'' என்றார்.இதை சற்றும் எதிர் பாராத அந்நாட்டு மன்னன் திகைப்படைந்தான். ஆனால் இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த அரண்மனை வாயிற் காப்போன் தனக்குள் சிரித்துக் கொண்டான். இதைக் கண்ட மற்றொரு வாயிற் காப்போன் "ஏன் சிரிக்கிறாய்?'' என்று கேட்டான்.
 "இவ்வுலகில் முழுமையாகக் கற்று உணர்ந்தவர் என்று ஒருவரும் இல்லை ! பெரிய கடப்பாரையால் பிளக்க முடியாத பாறையை ஒரு சிறிய உளி தகர்த்து விடும். இந்த அறிஞரைக் கூடிய விரைவில் ஒருவன் வெல்வான்! வல்லவனுக்கு வல்லவன்" இந்த வையகத்தில் உண்டு என்பதை அறியாமல் இவர் தற்பெருமை கொள்கிறார்'' என்றான்.
 கேள்வி கேட்க ஒருவரும் முன் வராததால் அறிஞர் அ ந் நாட்டிலிருந்து ஏராளமான பரிசுப் பொருள்களோடு மன்னரிடமிருந்து விடை பெற்றார். அறிஞரின் தேர் முன்னே சென்றது. அவரை நகர எல்லை வரை வழி அனுப்ப மன்னன், மந்திரியுடன் தன் தேரில் தொடர்ந்து வந்தான்.
 ஒரு குறுகிய பாதையில் ஒரு ஆட்டு இடையன் தன் செம்மறி ஆட்டுக் கூட்டத்தை அழைத்துக் கொண்டு சென்றான். இதனால் அறிஞரின் தேர் செல்லுவதில் இடைஞ்சல் ஏற்பட்டது. தேரோட்டி தேரை சற்று நேரம் நிறுத்தி விட்டான். இதனால் கோபமடைந்த அறிஞர் ஆட்டிடையனை விரட்டும் படித் தன் உதவியளர்களிடம் கூறினார். ஆனால் அந்த இடையனோ மிகப் பொறுமையாகத் தன் ஆடுகளை விரட்டிச் சென்றான். அறிஞர் தன் தேரை விட்டு கீழே இறங்கினார். ஆட்டிடையனை அழைத்தார்.
 ""நான் யார் தெரியுமா? உங்கள் மன்னரே வந்து வழி அனுப்பும் பெருமை மிக்க மகா பண்டிதன்'' என்று ஆரம்பித்துத் தன் பெருமைகளையும் சவாலையும் கூறத் தொடங்கினார்.
 இதற்குள் மன்னரின் காவலர்கள் ஆட்டிடையனை எச்சரித்து, ஆடுகளை சீக்கிரம் விரட்டி விடுமாறு கூறினர். உடனே ஆட்டிடையன் ஏளனத்துடன், "ஏ ஆட்டுக் கூட்டமே! இவரால் பதிலே சொல்ல முடியாத கேள்வி கேட்கும் அளவிற்கு எந்த அறிஞனும் இங்கு இல்லையாம்! ஏன், நான் கேட்கட்டுமா?'' என்றான்.
 உடனே மன்னன் தேரை விட்டு இறங்கி வந்து, ஆட்டிடையனை எச்சரித்தார். எதற்கும் அசராத ஆட்டிடையன், "மஹாராஜா! இந்த மேதாவியை சமாளிக்க உங்கள் தேசத்தில் ஆடு மேய்க்கும் நானே போதும்! இவர் விடும் சவாலுக்கு நான் தயார்! நான் தோற்று விட்டால் இந்த ஆட்டு மந்தை முழுவதும் அவருக்கே சொந்தம்! அப்படி அவர் தோற்று விட்டால் அவர் செல்வம் முழுவதும் எனக்கே சொந்தம்!'' என்றான்.
 "ஏ ஆட்டிடையனே! வந்திருப்பவர் யாரென்று தெரியாமல் மோத நினைக்கிறாயா? இது விளையாட்டால்ல! நம் தேசத்தின் கெளரவம் சம்பந்தப் பட்ட விஷயம்! இங்கிருந்து உடனே வெளியேறு!'' என்று மந்திரியும் எச்சரித்தார். அதற்குள் அங்கு ஒரு பெரும் கூட்டம் கூடிவிட்டது. ஒரு ஆட்டிடையனால் தாம் சவால் விடப் பட்டதை உணர்ந்த அறிஞர் ஆத்திரத்தால் முகம் சிவந்தார்.
 "எங்கே நான் பதிலே சொல்ல முடியாத உன் கேள்வியைக் கேள் பார்போம்!'' என்றார் அறிஞர் வெறுப்புடன்.
 ஆட்டிடையன் "அய்யா! நான் கேட்கும் கேள்விக்கு நீங்கள் "ஆம்' அல்லது "இல்லை' என்று கூறினால் போதுமானது!'' என்று கூறி விட்டு சற்று நேரம் மெளனமானான்.
 அவன் என்ன கேள்வியைக் கேட்கப் போகிறான் என்பதை அறியும் ஆவலில் அனைவரும் சிலை போல் நின்றனர் மன்னன் உட்பட!
 ஆட்டிடையன் அறிஞருக்கு முன் வந்து நின்று அவரை வணங்கினான்.
 "அய்யா! அறிஞர் பெருமானே! இதோ என் கேள்வி! பொய் சொல்லும் பழக்கத்தைத் தாங்கள் விட்டு விட்டீர்களா?'' என்று கேட்டான்.
 இந்த கேள்வியைச் சற்றும் எதிபாராத அந்த அறிஞர் ஒரு பதிலும் கூற முடியாமல் ஸ்தம்பித்து நின்றார். ஏனெனில் "ஆம்' என்றால் ஏற்கெனவே பொய் சொல்லும் பழக்கம் உள்ளவர் என்று கருத்து!... "இல்லை' என்றால் பொய் சொல்லும் பழக்கத்தை இன்னும் விட்டு விடவில்லை என்று கருத்தாகும். இக்கேள்விக்கு எந்த பதிலையும் கூற முடியாத அறிஞர் இடையனின் புத்திக் கூர்மைக்கு த் தலை வணங்கினார். ஆட்டிடையனின் புத்திக் கூர்மையைக் கண்டு அங்கு கூடி இருந்த மக்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்!
 அறிஞர் தன் அகம்பாவத்தை விட்டொழித்தார். ஆட்டிடையனுக்குப் பல பரிசுகள் வழங்கினார்.தன் செல்வம் முழுவதையும் எடுத்துக் கொள்ளும் படி கூறினார். ஆனால் அவன் மறுத்து விட்டான். மனம் நெகிழ்ந்த மன்னனும் பல பரிசுகள் வழங்கினான். இக்கதையில் வரும், "தற்பெருமை கொள்ளக் கூடாது' என்ற கருத்தையே வள்ளுவரும் "குற்றம் கடிதல் "என்னும் அதிகாரத்தில்,
 வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
 நன்றி பயவா வினை "
 என்கிறார்.
 இதன் பொருள் "நன்மை தராத செயல்களைச் செய்யவும் கூடாது;தன்னை எப்பொழுதும் உயர்த்திப் புகழ்ந்து பேசவும் கூடாது' என்பதாகும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com