குறள் நெறிக் கதை!: புத்தோல் போர்த்திய கழுதை 

அது ஆற்றங்கரையை ஒட்டிய பகுதி. அங்கு சலவை தொழிலாளிகள் பலர் வசித்து வந்தனர்.
குறள் நெறிக் கதை!: புத்தோல் போர்த்திய கழுதை 


அது ஆற்றங்கரையை ஒட்டிய பகுதி. அங்கு சலவை தொழிலாளிகள் பலர் வசித்து வந்தனர். அவர்களிடம் கழுதைகள் பல இருந்தன. அவர்களுள் முனியன் என்பவரிடம் கழுதை ஒன்று இருந்தது. அது மிகவும் வயதானதாக உடல் இளைத்து மெலிந்து காணப்பட்டது. முனியன் அதற்கு தன்னால் இயன்ற அளவு தீவனம் அளித்தார். காரணம் முனியனுக்கு மிக சொற்ப வருமானமே கிடைத்தது.இருந்த பொழுதும் அவர் அந்தக் கழுதையை பராமரித்து வந்தார். 

முனியனின் வீட்டிற்கு அருகே பரமன் என்ற மற்றொரு சலவைத் தொழிலாளி வசித்து வந்தார். முனியன் பரமனை தனது சகோதரன் போல் பாவித்து வந்தார். பரமனிடம் இருந்த கழுதை நல்ல கொழுகொழுவென்று இருந்தது. முனியன் பரமனுக்கு அவ்வப்பொழுது நல்ல கருத்துக்களை வழிகாட்டுதல்களை வழங்கிவந்தார். ஆனால் பரமனோ முனியன் கூறும் கருத்துக்களை அவ்வளவாக ஏற்றுக் கொள்ள மாட்டார். அவருக்கும் முனியனைப் போலவே மிக சொற்ப வருமானமே கிடைத்தது. அப்படி இருந்த பொழுதும் அவரது கழுதை மட்டும் அங்கு பகுதியில் இருந்த எல்லா கழுதைகளையும் விட ஆரோக்கியமாகவும் நல்ல திடகாத்திரமாகவும் இருந்தது. இதைக்கண்டு பிற சலவைத் தொழிலாளிகள் ஆச்சரியமடைந்தனர். ஆனால் அவர்களால் காரணம் கண்டறிய முடியவில்லை. 

கிராமத்தின் மையப்பகுதியில் மிகப்பெரிய கோதுமை வயல் இருந்தது. சில நாட்களாகவே அங்கு விளைந்த கோதுமை பயிர்கள் நாசம் செய்யப்பட்டு வந்தன. விலங்குகள் ஏதோ கூட்டமாக வந்து பயிர்களை சாப்பிட்டது போல் அந்த வயல் காணப்பட்டது. இதன் காரணமாக உழவர்கள் இரவு நேரத்தில் கோதுமை வயலை காவல் காக்க எண்ணினர். தங்களுக்குள் ஒருவர் இரவு நேரத்தில் கோதுமை வயலை காவல் காக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டனர். 

அதன்படி ஒருவர் இரவு நேரத்தில் கோதுமை வயலுக்கு காவல் காக்க சென்றார். பரமன் இரவு நேரத்தில் ரகசியமாக தனது கழுதையை அவிழ்த்து விடுவார். வயலுக்கு செல்லும் கழுதை அங்கிருக்கும் கோதுமை பயிர்களை நன்கு சாப்பிட்டு வந்தது. இதுநாள் வரை இந்த விஷயம் ஒருவருக்கும் தெரியவில்லை. அதனால்தான் பரமனின் கழுதை மற்ற கழுதைகளை விட ஆரோக்கியமாக இருந்தது. அன்றுமுதல் வயலை ஒருவர் காவல் காக்க நிற்கிறார் என்ற தகவல் பரமனுக்கு தெரியாது. வழக்கம்போல் நள்ளிரவு பரமன் தனது கழுதையை அவிழ்த்து விட்டார். நேரே கோதுமை வயலுக்கு வந்த கழுதை மகிழ்ச்சியுடன் கோதுமை பயிர்களை சாப்பிட தொடங்கியது. இதைக்கண்ட காவலுக்கு இருந்தவர் ஒரு மிகப் பெரிய தடியால் கழுதையை தாக்கினார். உயிர் தப்பினால் போதும் என்று கழுதை ஓட்டம் எடுத்து வீட்டுக்கு வந்து சேர்ந்தது. 

பரமனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நடந்த விஷயங்களை ஒருவாறு பரமன் அறிந்துகொண்டார். மறுநாள் வழக்கம்போல் கழுதைகளை ஆற்றங்கரைக்கு சலவைத் தொழிலாளிகள் அழைத்து வந்தனர். 

முனியன் பரமனிடம், ""என்ன நண்பா? ஏன் சோர்வாக இருக்கிறாய்?'' என்று கேட்டான். அதற்கு பரமன் 

""நேற்று என் கழுதை உணவு அருந்தவில்லை!'' என்று கூறினான். 
பரமனின் கழுதை கோதுமை தோட்டத்திற்கு சென்று கோதுமை பயிர்களை நாசம் செய்வது முனியனுக்கு தெரியும். ஆகவே அவன், 

"" நண்பா! இப்படி எல்லாம் ஒரு நாள் நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும்! உன் சக்திக்கு தகுந்தவாறு கழுதைக்கு உணவு அளிக்கலாம்! அதை விட்டு விட்டு இவ்வாறு கள்ளத்தனமாக கோதுமை பயிர்களை உண்பதற்கு அனுப்புகிறாய்! இது மிகவும் தவறான செயல்!'' என்றான். இதைக் கேட்ட பரமன், 

""என்னால் உன்னைப்போல முட்டாளாக இருக்க முடியாது!...கிடைப்பதை சரியாக பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம் ஆகும்!'' என்றான். முனியன் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டான். 

தனது கழுதைக்கு எவ்வாறு உணவு அளிப்பது என்ற கவலை பரமனுக்கு இப்பொழுது தோன்றிவிட்டது. அவன் யோசிக்க ஆரம்பித்தான். அவனது வீட்டின் பரணில் ஒரு பழைய புலித்தோல் இருப்பது நினைவுக்கு வந்தது. அதை எடுத்து வந்து தனது கழுதையின் உடலின் மேல் வைத்து கட்டினான். கழுதையின் தலைக்குமேல் புலியின் தலை இருக்குமாறு அமைத்தான். இப்பொழுது கழுதை பார்ப்பதற்கு வித்தியாசமாக புலியின் வடிவில் இருந்தது. அதனிடம் சென்ற பரமன் , 

""அன்பு கழுதையே! தினமும் இரவு நேரத்தில் நீ புலித்தோலை அணிந்துகொண்டு கோதுமை வயலுக்கு சென்றால் நிறைய சாப்பிடலாம்! நீ வீட்டுக்கு திரும்பியவுடன் இந்த புலித்தோலை கழட்டிவிடுவேன்!'' என்று கூறினான். அதன்படி அன்றிரவு புலித்தோலை அணிந்துகொண்டு கழுதை கோதுமை வயலுக்கு சென்றது. நன்கு நெருக்கமாக வளர்ந்திருந்த கோதுமை பயிரின் மத்தியில் கழுதை சென்ற பொழுது புலியை போலவே இருந்தது. அங்கு காவலுக்கு வந்தவர் கோதுமை வயலில் புலியை கண்டவுடன் ஓட்டம் எடுத்தார். கிராமத்திலிருந்த மக்களிடம் சென்று கோதுமை வயலில் புலி ஒன்று உலவுவதாக கூறினார். அதைக் கேட்டு ஓடிவந்த மக்களுக்கு தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது புலி ஒன்று கோதுமை வயலில் உலவிக் கொண்டு இருப்பது போல் தோன்றியது. கோதுமை வயலில் மேய வந்திருக்கும் விலங்குகளை அடித்து தின்ன புலி வந்து இருக்கும் என்று மக்கள் நினைத்தனர். இதனால் அன்று முதல் ஒருவரும் கோதுமை வயலை காவல் காக்க முன்வரவில்லை. ஆகவே கழுதை மிக ஆனந்தமாக தினந்தோறும் கோதுமை பயிரை சாப்பிட்டுக் கொண்டு வந்தது. தனது நண்பனாகிய முனியனிடம் நடந்த எல்லா விஷயத்தையும் கூறினான் பரமன். அதைக்கேட்ட முனியன் ""நண்பா! மக்கள் புலியின் வடிவத்தில் இருக்கும் உன் கழுதையை இப்படியே விட்டுவிட மாட்டார்கள். உண்மை ஒருநாள் தெரிய வரும்பொழுது மிகப்பெரிய ஆபத்து ஏற்படும்! உனது கழுதையை நீ இழக்க நேரிடும்! மிகப்பெரிய தவறு செய்கிறாய்! ஆகவே நீ இப்பழக்கத்தை கைவிட்டு விடு!'' என்றான். 

""நண்பா! கழுதைக்கு என்னால் உணவு தேடி இனிமேல் அலைய முடியாது! ஆகவே இப்படியே வாழலாம் என்று முடிவு செய்துவிட்டேன்!'' என்று பரமன் பதிலளித்தான். 

இப்படியாக நான்கு நாட்கள் கழிந்தன. நான்கு நாட்களும் வயலுக்கு வந்த கிராம மக்கள் வயலில் புலி ஒன்று தொடர்ந்து நடமாடுவதையும் ஆனால் பயிர்கள் சேதமடைந்து இருப்பதையும் கண்டு குழப்பம் அடைந்தனர். அதன் அருகே சென்று அதனை விரட்டவும் பயந்தனர். இந்நிலையில் ஒருநாள் கழுதை வழக்கம் போல் புலித்தோலை அணிந்துகொண்டு கோதுமை பயிர்களை சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. அப்பொழுது திடீரென்று வனப்பகுதியில் வேறொரு கழுதை ஒன்று கத்துவது கேட்டது. இதைக் கேட்ட புலி வடிவிலிருந்த கழுதை தன்னை மறந்து கத்தத் தொடங்கியது. அவ்வளவுதான்! புலியை எப்படியாவது வேட்டையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் அங்கு ஆயுதங்களுடன் மறைந்து குழுமியிருந்த கிராமவாசிகள் புலித்தோலை அணிந்து கொண்ட கழுதையை விரட்டி பிடித்தனர். அதை தடியால் அடித்தனர். அடி தாங்க முடியாத கழுதையும் அங்கேயே மாண்டு விழுந்தது. இதைக்கண்ட பரமன் தனது ஆசையாலும் தவறான எண்ணத்தினாலும் தனது கழுதையை இழந்ததை எண்ணி மனம் வருந்தினான். தனது நண்பனின் அறிவுரைகளை கேட்காமல் இருந்ததை எண்ணி வருந்தினான். 

இதே கருத்தையே வள்ளுவரும் நட்பு அதிகாரத்தில், அழிவினவை நீக்கி ஆறுய்த்து அழிவின் கண் அல்லல் உழப்பதாம் நட்பு" என்கிறார். 

இதன் பொருள், "அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி நல்ல வழியில் நடக்கச் செய்வதே நட்பாகும்' என்பதாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com