சாதனைச் சிறுவன்!
கராத்தே, சிலம்பப் போட்டிகளில், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பதினைந்து வயதுச் சிறுவன் ரா. சஞ்சய் சாதனை படைத்து வருகிறார். மடுவின்கரையில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் அவரிடம் பேசியபோது:
''எனக்கு விளையாட்டில் சிறு வயதிலிருந்தே அபரிமிதமான ஆர்வம் உண்டு. எனது பெற்றோர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஏ.ராமமூர்த்தி - இல்லத்தரசியான கலைவாணி. இருவரும் எனது விளையாட்டு ஆர்வத்துக்குத் துண்டுகோலாக இருக்கின்றனர். அவர்கள் கராத்தே, சிலம்பம் போன்ற பயிற்சிகளில் என்னை ஈடுபடுத்தினர். இவற்றில் என் தங்கை தாரிகாவும் பயிற்சி பெறுகிறார். பயிற்சியாளர்கள் டி.முரளி, டி.ஸ்ரீதரன் ஆகிய இருவரும் பயிற்சி அளித்து வழிகாட்டுகின்றனர்.
இதுவரை மாவட்ட, மாநில, தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். பல பரிசுக் கோப்பைகளையும், பதக்கங்களையும் வென்றுள்ளேன். கராத்தேவில் கருப்புப் பட்டை சான்றிதழும், சிலம்பத்தில் தங்க நட்சத்திரமும் பெற்றிருக்கின்றேன். இவ்விரண்டிலும் 5 சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளேன்.
கோவாவில் நவம்பர் மாதத் தொடக்கத்தில் 'மிஷன் ஒலிம்பிக் கேம்ஸ் அசோஷியேஷன் ஆஃப் இந்தியா' எனும் அமைப்பு நடத்திய போட்டியில், 15 வயதுக்கு உள்பட்டோருக்கான சிலம்பப் போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளேன்.
பாரம்பரியக் கலைக்கு 3% இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் ஐ.பி.எஸ். அலுவலராகி, காவல் துறையில் பணியாற்றுவதே எனது லட்சியம்!'' என்கிறார் சஞ்சய்.
-தாம்பரம் மனோபாரதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
