ரீமிக்ஸ் அல்ல ரீமேக்
தமிழில் "ஈசா' என்று ஒரு திரைப்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. அந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் 21 வயதேயான ஓர் இளைஞர். பெயர் ஹரன். ஆறாயிரம் தடவைகளுக்கும் மேல் மெல்லிசை கச்சேரிகள் செய்திருப்பவர் ஸ்ர


தமிழில் "ஈசா' என்று ஒரு திரைப்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. அந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் 21 வயதேயான ஓர் இளைஞர். பெயர் ஹரன். ஆறாயிரம் தடவைகளுக்கும் மேல் மெல்லிசை கச்சேரிகள் செய்திருப்பவர் ஸ்ரீதர் நவராக்ஸ். அவரின் மகன்தான் இந்த ஹரன்.
ஹரன் படித்தது பி.பார்ம். சிறுவயதில் இருந்தே இசைச் சூழலில் இருந்ததாலோ என்னவோ அவருக்கு உயிராக இருக்கிறது இசை. அதனால்தான் படித்ததற்குச் சம்பந்தமில்லாத பாதையில் அவருடைய இசைப் பயணம். சென்னை ராயப்பேட்டையில் உள்ள இல்லத்தில் உற்சாகமும் ஆர்வமும் பொங்கிவழியும் அந்த இளம் இசையமைப்பாளரைச் சந்தித்துப் பேசினோம்.
இவ்வளவு சிறிய வயதில் எப்படி ஒரு படத்துக்கு இசை அமைக்க வந்தீர்கள்?
என்னுடைய அப்பா ஸ்ரீதர் நவராக்ஸ் தனது கச்சேரியில் என்னை நான்கு வயதிலேயே பாட வைத்துவிட்டார். நான் படித்தது பி.பார்ம் என்றாலும் எனக்கு என்னவோ இசையிலேயே ஆர்வம் அதிகமாக இருந்தது. பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே நான் கர்நாடக இசையை சுப்பையா மாஸ்டரிடம் 7 - 8 ஆண்டுகள் கற்றுக் கொண்டேன். வெஸ்டர்ன் மியூசிக்கை கற்றுக் கொண்டது புகழ்பெற்ற இசையாசிரியரான ஆர்.வெங்கடேசன் மாஸ்டரிடம். ஹார்மோனியம், கீ போர்டு எல்லாம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். கீ போர்டில் வாசித்துக் கொண்டிருக்கும்போது புதுவிதமான ட்யூன்கள் என்னையறியாமலே ஊற்றெடுக்க ஆரம்பித்தன. நானும் சொந்தமாகப் பாடலுக்கு கம்போஸ் பண்ண முடியும் என்ற நம்பிக்கையை அது வளர்த்தது. என்னுடைய அப்பா தயாரித்த ஆல்பத்தில் ஒன்றிரண்டு பாடல்களுக்கு கம்போஸ் பண்ணினேன். ஒரு பக்திப் பாடல் ஆல்பத்தில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த கவிஞர் ஸ்ரீராம்சர்மா நான் கம்போஸ் பண்ணிய பாடல்களைக் கேட்டு வியப்படைந்தார். அவர் தொலைக்காட்சிக்காக ஒரு சீரியல் எடுக்கத் திட்டமிட்டிருந்தார். அந்த சீரியலில் நான் இசையமைக்க வேண்டும் என்றார்.
சீரியலுக்கு இசையமைக்கும் வேலை ஆரம்பமானபோதே எனக்கு "ஈசா' படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எனவே இதில் முழுமூச்சாக ஈடுபட்டேன்.
சினிமாவுக்கு இசையமைக்கச் சொன்னவுடன் பயமாக இல்லையா?
முதலில் கொஞ்சம் பிரமிப்பாகத்தான் இருந்தது. அப்பாவுடைய ஆல்பம் தயாரிக்கும்போது கவனமாகப் பார்த்துக் கொண்டிருப்பேன். எந்தத் திரைப்படம் பார்த்தாலும் இந்தக் காட்சிக்கு நான் இசையமைத்து இருந்தால் எப்படி இருக்கும் என்று மனதுக்குள் நானே புதுவிதமாக இசையமைக்கத் திட்டமிடுவேன். இது ஒரு தொடர்ந்த பயிற்சியாக ரொம்ப நாட்கள் இருந்து வந்தது. அதனால் "ஈசா' படத்துக்கு இசையமைக்கக் கேட்டவுடன் அவ்வளவாகப் பயம் ஏற்படவில்லை.
ஈசாவுக்கு இசையமைத்த அனுபவம்?
இந்தப் படத்துக்கு இசையமைப்பதைப் பொறுத்தமட்டில் எனக்கு முழுச்சுதந்திரம் கொடுத்தார்கள். பாடலாசிரியர் தேர்வு, பாடகர் தேர்வு எல்லாவற்றிலும் என் விருப்பத்திற்கு விட்டுவிட்டார்கள். ஈசா படத்துக்கான பாடலை கவிஞர்கள் நா.முத்துக்குமார், யுகபாரதி, மதுரகவி எழுதியுள்ளார்கள். இந்தப் படத்தில் வரும் ஒரு திருவிழாப் பாடலில் 20 - 30 நிமிடங்கள் காட்சியாக வருகிற சம்பவங்களை ஒரு பாடலுக்குள் வருமாறு அமைக்கச் சொன்னார்கள். நான் ஒரு சவாலாக இதை எடுத்துக் கொண்டு இசையமைத்தேன்.
படத்திற்கு நான் இசையமைக்கப் போகிறேன் என்றதுமே எல்லாருமே கேட்ட கேள்வி, "நீ யாரிடம் உதவியாளராகப் பணியாற்றினாய்?' என்பதுதான். நான் யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றவில்லை என்றதும் சந்தேகமாகப் பார்த்தார்கள். ஆனால் இப்போது ஆச்சரியப்படுகிறார்கள். இந்தப் படத்தின் இசையமைப்பிற்காக ஏ.ஆர்.ரஹ்மான் என்னை ரொம்பவும் பாராட்டினார். இது புதிய ஒருவர் இசை அமைத்தது போல இல்லை. நீண்ட நாட்கள் தேர்ச்சி பெற்றவர் இசையமைத்தது போல இருக்கிறது என்று பாராட்டினார். அது எனக்கு டானிக் சாப்பிட்ட மாதிரி இருக்கிறது.
நகரத்தில் பிறந்து வளர்ந்த நீங்கள் கிராமப் பின்னணி படங்களுக்கு இசை அமைத்தால் நன்றாக வருமா?
ஈசா படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள்தான் இசை எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். நான் நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவன் என்றாலும் கிராமத்துச் சூழ்நிலைகள் எனக்குத் தெரியும். "ஈசா' கதை தூத்துக்குடி உப்பளம் பகுதியில் நடக்கக் கூடியது. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்திருக்கவில்லை என்றாலும் ஒரு காட்சியைப் பார்த்தவுடன் அதற்குப் பொருத்தமான பின்னணி இசை இது என்று மனதுக்குத் தோன்றும். அதையே இசையமைத்துவிடுகிறேன். சிச்சுவேஷனுக்கு ஏற்ப இசை அமைப்பது என்பதால் கிராமத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை என்று நினைக்கிறேன்.
ரீ மிக்ஸ் பாடல்கள் இப்போது அதிகரித்துவிட்டதே?
இப்போது ரீ மிக்ஸ் பாடல்கள் நிறைய வர ஆரம்பித்துவிட்டன என்பது உண்மைதான். ஏற்கனவே மக்களுக்கு நன்கு பழக்கப்பட்ட பாடல்களை மீண்டும் வேறுவடிவில் அவர்களுக்குக் கொடுத்தால் பெரிய அளவில் மக்களை அந்தப் பாடல்கள் கவரும் என்று திரைப்படம் தயாரிப்பவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் ரீ மிக்ஸ் பாடல்கள் அதிகரித்துவிட்டன. "உத்தமபுத்திரன்' படத்தில் உள்ள பாடலான "யாரடி நீ மோகினி' என்ற பாடலை ஈசா படத்திற்காக நான் ரீ மேக் செய்திருக்கிறேன். கவனியுங்கள் நான் சொன்னது ரீ மேக்.
ரீ மிக்ஸ், ரீ மேக் என்ன வித்தியாசம்?
ரீ மிக்ஸ் என்றால் பழைய பாடல்களின் ட்யூனை லேசாக மாற்றியமைப்பது. நான் அந்தப் பாடலின் வரிகளுக்குப் புதிய ட்யூன் போட்டிருக்கிறேன். அதனால்தான் ரீ மேக் என்கிறேன்.
திரைப்படங்களில் இசை இன்னும் சிறப்பாக வர என்ன செய்ய வேண்டும்?
இப்போது ஒரு படத்துக்குப் பல இசையமைப்பாளர்கள் வேலை செய்கிறார்கள். அப்படியில்லாமல் ஒரு படம் முழுவதற்கும் ஒரே இசையமைப்பாளர் என்று இருந்தால் படத்தின் கதையை முழுமையாகப் புரிந்து கொண்டு மிகுந்த ஈடுபாட்டுடன் இசை அமைக்க முடியும். அப்படி அமைத்தால் இன்னும் சிறப்பாக இசை அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...