எம்.ஜி.ஆர். ஸ்வீட் வாங்கிக் கொடுத்தார்!
முதலில் எல்லாம் தமிழ்த் திரைப்படங்களை மக்கள் குடும்பத்தோடு சென்று பார்ப்பார்கள். திரைப்படம் பார்க்கச் செல்வது ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டமாக இருக்கும். அதனால்தானோ என்னவோ குழந்தை நடிகர்களின் பட்டாளமே அப


முதலில் எல்லாம் தமிழ்த் திரைப்படங்களை மக்கள் குடும்பத்தோடு சென்று பார்ப்பார்கள். திரைப்படம் பார்க்கச் செல்வது ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டமாக இருக்கும். அதனால்தானோ என்னவோ குழந்தை நடிகர்களின் பட்டாளமே அப்போது தமிழ் சினிமாவில் இருந்தது.
இப்போது வருகிற பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களைக் குடும்பத்தோடு பார்க்க முடிவதில்லை. பெயர் சொல்லும்படியான குழந்தை நட்சத்திரங்களையும் இப்போது தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை.
எம்.ஜி.ஆரின் "நான் ஏன் பிறந்தேன்?', "நீதிக்குத் தலைவணங்கு' சிவாஜியின் "எங்க மாமா' போன்ற திரைப்படங்களில் நடித்தவர் விச்சு.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அவர். பிதாமகன் படத்தில் லைலாவின் தந்தையாக நடித்திருப்பவர் அவர்.
சென்னை ரங்கராஜபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.
""நான் தமிழில் சாவித்திரி அம்மாவுடன் 1968 இல் "குழந்தை உள்ளம்' படத்தில் நடித்தேன். அதற்கு முன்னதாக 1966 இல் தெலுங்கு படம் ஒன்றில் எனது 6 வயதில் முதன்முதலாக நடித்தேன். சொந்த ஊர் ஆந்திரமாநிலத்தில் உள்ளது.
அதன்பின் எனது பதினான்கு வயது வரை தமிழிலும் தெலுங்கிலுமாக 300 படங்கள் வரை நடித்துவிட்டேன்.
எனது அப்பா ஹரிகதை சொல்லுவார். நான் அதில் மிமிக்ரி செய்வேன். எனது அப்பா 1965 இல் விஜயவாடாவில் ஹரிகதை நடத்தும்போது அதைப் பார்க்க வந்த சித்தூர் நாகைய்யா, எஸ்.வி.ரங்காராவ் இருவரும் எனது மிமிக்ரியைப் பார்த்துவிட்டு சென்னையில் நிகழ்ச்சி நடத்த வரச் சொன்னார்கள். அப்போது எனக்கு 5 வயது. சென்னையில் உள்ள ஆந்திரா கிளப்பில் நிகழ்ச்சி நடந்தது.
அந்த நிகழ்ச்சியைப் பார்க்க வந்த தயாரிப்பாளர் பத்மநாபம் என் சுறுசுறுப்பைப் பார்த்துவிட்டு, ""சினிமாவில் நடிக்க வருகிறாயா?'' என்று என்னைக் கேட்டார். நானும் ""சரி'' என்று தலையாட்டிவிட்டேன். அதன் பின்பு தெலுங்கிலும் தமிழிலுமாக நிறையப் படங்களில் நடித்துவிட்டேன்.
நான் நிறையப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தாலும் படிப்பதை மட்டும் விட்டுவிடவில்லை. ஒருபுறம் பள்ளிக்குப் போய்க் கொண்டே நடித்துக் கொண்டிருந்தேன். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தேன். எம்.எஸ்ஸி வரை படித்தேன்.
எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் எஸ்.எஸ்.எல்.சி.யில் பாஸ் ஆகிவிட்டேன். அதற்காகக் கையில் ஸ்வீட்டோடு ஸ்டுடியோவுக்குப் போய் எல்லாருக்கும் ஸ்வீட் கொடுத்தேன். அப்போது "நீதிக்குத் தலைவணங்கு' படத்தில் எம்.ஜி.ஆரோடு நடித்துக் கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆரிடம் ஸ்வீட் கொடுத்த போது எதற்கு? என்று கேட்டார். சொன்னேன். உடனே அவர் தனது செலவில் நிறைய ஸ்வீட் வாங்கி எனக்காக எல்லாருக்கும் கொடுத்து நான் தேர்வில் வெற்றி பெற்றதைக் கொண்டாடினார். அந்த அளவுக்கு அவர் படிப்பின் மீது மரியாதை வைத்திருந்தார். இது எனக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி.
படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் எம்.ஜி.ஆர். சைலன்டாக இருப்பார். நடிக்கும்போது இன்னும் நன்றாக நடி என்று உற்சாகப்படுத்துவார்.
சிவாஜியுடன் நடிக்கும்போது அவர் தனது நடிப்பு மட்டும் சிறப்பாக வர வேண்டும் என்று நினைக்கமாட்டார். தன்னுடன் நடிக்கும் எல்லாரும் நன்றாக நடித்தால்தான் காட்சி நன்றாக அமையும் என்பது அவருடைய எண்ணம். அதற்காக அவர் பிறருக்கு நடிப்புச் சொல்லிக் கொடுப்பார்.
ஒருமுறை ஏ.பி.நாகராஜனின் "கிருஷ்ணலீலா' படப்பிடிப்பு சாரதா ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்தது. அதே ஸ்டுடியோவில் வேறொரு தளத்தில் சிவாஜியின் வேறொரு படத்திற்கும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
அந்த ஷூட்டிங்கின் ஓய்வுநேரத்தில் எங்களுடைய ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த சிவாஜி, எனக்குப் போடப்பட்டிருந்த மேக் அப் - பைப் பார்த்து, ""மேக் அப் நல்லா இல்லையே'' என்றவாறே அவரே எனக்கு மேக் அப் போட ஆரம்பித்துவிட்டார். அந்த அளவுக்குக் காட்சி நன்றாக அமைய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்த நான் பின்னர் நடிப்பதை விட்டுவிட்டு மெடிகல் ஃபீல்டில் ஏரியா மேனேஜர் வேலைக்குப் போய்விட்டேன். இருந்தாலும் என் உயிர் திரைப்படத்தில்தான் இருந்தது. நடிப்புக்கும் எனக்கும் 18 வருடம் இடைவெளி விழுந்துவிட்டது. அதற்குப் பின்பும் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மீண்டும் நடிப்பதற்கு வந்துவிட்டேன்.
1994 இல் "வானத்தைப் போல' படத்தில் நடித்தேன்.
"ஈ' படத்தில் நடிக்க நான் அழைக்கப்பட்ட போது ஜனநாதன் என்னிடம் முதலில் சொன்னது, ""எங்க மாமா படத்தில் திக்குவாய்ச் சிறுவனாக நீங்கள் நடித்தது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது சார்...'' என்பதுதான். விக்கிரமன், "நான் ஏன் பிறந்தேன்?' படத்தில் நீங்க பண்ணினீங்களா? என்று கேட்டார். அந்தக் காலத்தில் நான் நடித்திருப்பதைப் பற்றி இப்போதும் கேட்பது சந்தோஷமாக இருக்கிறது.
சிவகாசி, மரியாதை, சம்திங் சம்திங் போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். இப்போது "சிங்கம் புலி' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
அந்தக் கால சினிமாவுக்கும் இந்தக் காலத்து சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் என்றால், அந்தக் காலத்தில் இந்த அளவுக்குப் போட்டியில்லை. குறைந்த அளவே சினிமா தயாரிக்கப்பட்டது. குறைந்த அளவே ஆர்ட்டிஸ்ட்கள் இருந்தார்கள். இப்போது போட்டி அதிகம். உள்ளே என்ட்ரி ஆவதே சிரமம். திரைத்துறையில் ஏற்கனவே உள்ளவர்களின் வாரிசுகள் இப்போது அதிகம் என்ட்ரி ஆகிறார்கள். ஆனால் என்ட்ரி ஆவதற்கு வேண்டுமானாலும் அது பயன்படலாமே தவிர, தொடர்ந்து நிலைத்து நிற்க திறமை அவசியம். என்ட்ரி ஆவதற்கு அதிர்ஷ்டம் துணை செய்யலாம். ஆனால் அதிர்ஷ்டம் மட்டும் போதாது. திறமை ரொம்ப அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...