உறவுகள்.. தொடர்கதை!
தர்சனாவின் பேச்சில் எடுத்த காரியத்தை எள்ளளவும் சிதறவிடாமல் கொண்டு செல்லும் ஒரு முழு முனைப்பு இருக்கிறது. கூடவே ஒரு பேராசிரியரின் தொனி. எதையும் தெளிவுபடுத்த யத்தனிக்கிறார். இருபது ஆண்டுகளாக சட்டத்தைப்


தர்சனாவின் பேச்சில் எடுத்த காரியத்தை எள்ளளவும் சிதறவிடாமல் கொண்டு செல்லும் ஒரு முழு முனைப்பு இருக்கிறது. கூடவே ஒரு பேராசிரியரின் தொனி. எதையும் தெளிவுபடுத்த யத்தனிக்கிறார். இருபது ஆண்டுகளாக சட்டத்தைப் பற்றி பெற்ற தேர்ச்சியும் அனுபவமும் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்கிறது. அணுகுவதற்கு எளிமையானவராகவும் இருக்கிறார். திடுக்கிடும் திருமண-முறிவுகள் இயல்புத் தன்மையுடன் ஏற்படும் இந்நாட்களில், இவற்றிற்கான காரணங்கள் பற்றியும், குடும்பநல நீதிமன்றங்கள் பற்றியும் பேசினார்.
""பொதுவாக மக்களிடத்தில் திருமணம் பற்றியும் அதனால் உண்டாகும் உறவுகள் பற்றியும் நன்றாக அறிந்திருந்தாலும் சட்ட ரீதியாக இவற்றை நாம் பார்ப்பது அவசியம். நாலு சுவர்களுக்குள் மாலை மாற்றிக் கொண்டுவிடுவதால் கணவன் மனைவியாக ஆகிவிடலாம். ஆனால் விவாகரத்து என்பதைச் சட்டத்தின் முறைப்படி பெறாதவரையில் ஒருவர் மணமானவராகவே கருதப்படுவார். நடத்தை, ஒழுக்கம் ஆகியவற்றின் பார்வையில் சரி என்று படுவது, சட்டத்தின் பார்வையில் நிறைவு பெறாத ஒன்றாகிவிடுகிறது. சட்டம் சரி என்று உரைப்பதை நமது சமூக ஒழுக்கங்கள் நிராகரிக்கக் கூடும். மனதளவில் பிரிவதை மட்டுமே சட்டமானது அங்கீகாரமும் அளிக்காது, ஒப்புக் கொள்ளவும் செய்யாது.
முன் காலங்களில் திருமணங்களால் இரு குடும்பங்களுக்குள் உறவு உண்டாயிற்று. பிரச்னைகளுக்கு இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் பொறுப்பேற்றார்கள். மற்றொரு புறம் பல வருடங்கள் ஒன்றாயிருந்து வாழ்க்கை நடத்தியவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தனர். (சுப்ரீம் கோர்ட் இந்த வகை உறவுமுறையை ஆமோதித்துத் தீர்ப்பளித்துள்ளதை இங்கே நினைவு கொள்ளல் வேண்டும்). சொத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டியே வழக்குகள் நீதி மன்றத்துக்கு வந்தன.
இன்று நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. காதல் திருமணங்கள் நிறைய உண்டு. இளைஞர்கள் தாங்களே சொந்தமாகத் தங்கள் பந்தத்தைத் தேர்வு செய்கிறார்கள். மனஸ்தாபங்களும் உண்டாகின்றன. பாதிக்கப்பட்டவர்கள், முக்கியமாகப் பெண்கள், சம்பாதித்து ஒரு பொருளாதாரச் சுதந்திரத்துடன் இருப்பதாலும், தங்களின் உரிமைகள் பற்றி சிறிதளவேனும் உணர்ந்திருப்பதாலும் விவாகரத்து வழக்குகள் அதிகமாகியிருக்கின்றன. பெண்கள் ஒரு விதமான விடுதலையைப் பெற்று விட்டார்கள் என்பதை முழுமனதுடன் ஏற்காத ஆண்களும், சகிப்புத் தன்மை குறைந்து காணப் படும் தற்காலப் பெண்களும், இங்கே உள்ள மற்ற காரணங்களாகத் தெரிகின்றன.
குடும்பநல நீதிமன்றங்களின் தீர்வைத் தேடி வருபவர்கள் தங்கள் ஊரில், வசிக்குமிடத்தில் நடக்கும் பஞ்சாயத்தின் முடிவைக் காட்டிலும் நியாயமான ஒரு முடிவு நீதிமன்றத்தில் கிட்டும் என்ற எதிர்பார்ப்புடன் வருகிறார்கள். முறிந்த ஒரு கல்யாணத்தை நான் ஏன் கட்டிக் காக்க வேண்டும் என்பது இவர்கள் வினா. நீதி மன்றங்களின் வழியாகப் பெறும் தீர்ப்புகள் தங்களுக்கு தரக் கூடிய ஒரு ஜீவனாம்சம் - தொகை சிறிதாக இருந்தாலும் ஒரு நிரந்தரத் தன்மையுடையது என்கிறார்கள்.
இன்று, 25 வருடங்கள் கழிந்த பின்னர் இந்தக் குடும்பநல நீதிமன்றங்கள் தங்கள் இலக்கிற்கான பாதையில் நன்றாக முன்னேறியிருக்கின்றன. நீதியரசர் ஷாஹ் அவர்கள் தானே முன்வந்து மேற்கொண்ட முயற்சிகளை இங்கே முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். முடிவுறாமலும் கவனிக்கப்படாமலும் இருக்கும் வழக்குகள் இன்னும் இருக்கின்றன. மக்கள் மனதில் கோர்ட்டுக்குச் சென்று விட்டால் வாய்தா பெற்று வழக்கை நீட்டித்துக் கொண்டு காலத்தைக் கடத்தி விடலாம் என்ற எண்ணம் பரவலாக உள்ளது இதற்கு ஒரு முக்கிய காரணம்.
ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு விவாகரத்து வழக்கு என்னை நெகிழ வைத்தது. கசப்பான போராட்டத்திற்குப் பின் பிரிந்த கணவனும் மனைவியும் இணைந்தனர். இவர்களுக்கு விவாகரத்துக்கு முன்னர் பிறந்த குழந்தை அசல் அப்பாவைப் போல் இருந்ததும், இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பிரிந்திருந்த கணவனின் தமையன் இவர்களைச் சேர்த்து வைக்கக் காட்டிய அயராத ஆர்வமும், கண்காணித்த நீதிபதியின் புரிதலும் இந்த ஜோடி மீண்டும் இணைந்ததற்கான காரணங்கள். இந்தப் தம்பதியினருக்கு வெற்றிக் களிப்பின் சிகரமாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. போன் செய்து இதை எனக்குத் தெரிவிக்கையில் பிறந்த குழந்தைக்கு என் பெயரைச் சூட்டியிருப்பதாகக் கூறியது என்னை உருகச் செய்தது.
திருமணம் என்பது உணர்வுபூர்வமான ஒரு பந்தத்தை ஏற்படுத்துவது என்பதை நன்கு உணர்ந்த பின்னரே இளைஞர்கள் மணமுடிக்க ஆயத்தமாக வேண்டும். அதேபோல் விவாகரத்தினால், முக்கியமாக பெண்கள் என்ன நிலையை அடைவார்கள் என்பதையும் அவர்கள் நிதானத்துடன் எண்ணிப் பார்க்க வேண்டும். விவாகரத்து பெற்ற பெண் விவாகரத்து பெற்ற ஆணையே மணக்க வேண்டிய நிலை அல்லவா நிலவுகிறது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...