கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சிறு தெய்வங்கள் நமது தாத்தா, பாட்டி போல!

அவர் கோயிலுக்குப் போகிறார். கோயிலுக்கு வந்திருந்தவர்கள் அவரை அடையாளம் தெரிந்து கொண்டு, 'ஜீ டிவியில் காலச்சக்கரம் நிகழ்ச்சி நீங்கதானே பண்ணினீங்க?' என்று ஆர்வமாய்க் கேட்கிறார்கள். ஷாப்பிங் போகிறார்.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:40 am

ந. ஜீவா

அவர் கோயிலுக்குப் போகிறார். கோயிலுக்கு வந்திருந்தவர்கள் அவரை அடையாளம் தெரிந்து கொண்டு, ""ஜீ டிவியில் காலச்சக்கரம் நிகழ்ச்சி நீங்கதானே பண்ணினீங்க?'' என்று ஆர்வமாய்க் கேட்கிறார்கள். ஷாப்பிங் போகிறார். ""டே... ஜெயா டிவியில் புரோகிராம் பண்றவங்கடா'' என்று அவரைப் பார்த்ததும் நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஜெயா டிவியில் ஆங்கிலத்தில் செய்தி வாசித்திருக்கிறார். தேன்கிண்ணம் நிகழ்ச்சி வழங்கியிருக்கிறார்.

அவர் ஷர்மிளா. எம்.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் படித்தவர்.

ஜெயா டிவியில் கடந்த 8 மாதங்களாக சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் "தமிழ் மண்ணின் சாமிகள்' நிகழ்ச்சியின் தொகுப்பாளியான அவர், அந்த நிகழ்ச்சியைப் பற்றி கண்களில் மகிழ்ச்சி ஒளி வீச நம்மிடம் பேசினார்.

""நூற்றுக்கணக்கான சிறு தெய்வங்களின் கோயில்கள் தமிழ்நாடு முழுக்க இருக்கின்றன. "தமிழ் மண்ணின் சாமிகள்' நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஒரு நிகழ்ச்சியில் இரண்டு சிறு தெய்வங்கள் பற்றிக் கூறப்படுகிறது. முனியாண்டி கோயில் தமிழ்நாடு முழுக்க இருக்கிறது.

ஆனால் அதன் மூலக் கோயில் தமிழ்நாட்டில் ஏதாவது ஓர் இடத்தில்தான் இருக்கும். இதுபோல தமிழ்நாட்டில் உள்ள சிறு தெய்வங்களின் மூலக் கோயில்கள் இருக்கும் இடங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றைப் பற்றிய வரலாறுகளைச் சுவையாகக் கூறுவதுதான் இந்த நிகழ்ச்சி.

நான் பல்வேறு ஊடகங்களில் பல நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராக இருந்தாலும், இந்த நிகழ்ச்சி மனதுக்கு ரொம்பவும் பிடித்த நிகழ்ச்சி. மதுரைவீரன் கோயில் தமிழ்நாட்டில் பல இடங்களில் இருக்கின்றன. ஆனால் அதன் மூலக் கோயில் மதுரை நகரின் மையப் பகுதியில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.

அந்தக் கோயில் உள்ள இடத்தில்தான் மதுரைவீரன் பலியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுபோல இசக்கியம்மன் கோயில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் பல இடங்களில் உள்ளன. ஆனால் அதன் மூலக் கோயில் தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் இருக்கிறது. 7-8 தலைமுறைக்கு முன் வாழ்ந்த ஒரு பெண்தான் இன்று கடவுளாக வணங்கப்படுகிறார்.

விருதுநகர் மாவட்டம் அர்ச்சனாபுரம் அருகே நல்லதங்காளுக்கு மூலக் கோயில் உள்ளது. நல்லதங்காள் தன் குழந்தைகளைப் போட்ட கிணறு அதன் பழமை மாறாமல் இன்றும் அங்கே உள்ளது.

மதுரை முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களை எல்லா ஊர்களிலும் பார்த்திருப்பீர்கள். அந்தப் பெயருக்குரிய முனியாண்டியின் மூலக் கோயில்கள் மதுரை திருமங்கலம் அருகே உள்ள இரண்டு கிராமங்களில் உள்ளன. இந்த இரண்டு கோயில்களையும் இருவேறு பிரிவினர் வணங்கி வருகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் இந்தக் கோயில் விழாவில் வந்து கலந்து கொள்கின்றனர். வந்திருக்கும் அனைவருக்கும் அசைவ உணவு பரிமாறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்களம்பூர் அருகேயுள்ள குமாரபட்டியில் கட்டபொம்மனும், ஊமைத்துரையும் ஒளிந்திருந்தார்கள். அங்கிருந்த போதுதான் அவர்கள் வெள்ளையர்களுக்குக் காட்டிக் கொடுக்கப்பட்டனர். அவர்கள் கடைசியாக இருந்த இடத்தில் ஒரு சிறு வேல் ஊன்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கட்டபொம்மனும், ஊமைத்துரையும் தெய்வமாக வழிபடப்படுகிறார்கள். அந்தப் பகுதியில் உள்ள எந்த மரத்தையும் அப்பகுதி மக்கள் வெட்ட மாட்டார்கள். அடுப்பெரிக்க சிறு சுள்ளியையும் இப்போதும் கூட ஒடிக்க மாட்டார்கள். அந்த அளவுக்குக் கட்டபொம்மனையும், ஊமைத்துரையையும் மக்கள் மதிக்கிறார்கள்.

வெயில் உகந்த அம்மன், வெயிலாட்சி அம்மன் கோயில்கள் தென்மாவட்டங்களில் அதிகம் உள்ளன. காய்ச்சல்கார அம்மன் என்று ஒரு சாமி சிவகாசி அருகில் உள்ளது. சிறு தெய்வ வழிபாடு அடிப்படையில் மூதாதையர் வழிபாடே. சிறு தெய்வங்களுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு நமது தாத்தா, பாட்டிகளுக்கும் நமக்கும் உள்ள உறவு போன்றது. மக்கள் சிறு தெய்வங்களை வழிபடும் முறைகள் இதை நமக்குத் தெரிவிக்கின்றன.

இந்தச் சிறு தெய்வங்களின் கோயில்களில் ஷூட்டிங் நடத்தச் சென்ற போது பல கோயில்களில் மக்கள் அனுமதிக்கவில்லை. கெடுபிடி செய்தார்கள். ஷூட்டிங் எடுக்க முடியாமல் திரும்ப வேண்டி வந்தது. சேலம் மாவட்டத்தில் ஒரு சிறு தெய்வம் இருக்கிறது. அதைப் பற்றிக் கேள்விப்பட்டு ஷூட்டிங் எடுக்கச் சென்றால் அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

""எங்களுடைய சாமியை நீங்கள் டிவியில் போட்டுக் காண்பிப்பீர்கள். அதைப் பிற சமுதாயத்தினர் பார்ப்பார்கள். எங்கள் சாமியைப் பிற சமுதாயத்தினர் பார்க்கக் கூடாது'' என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். அவர்களுடைய உணர்வுகளுக்கு

மதிப்புக் கொடுத்துத் திரும்பிவிட்டோம்.

சிறுதெய்வங்கள் மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்டிருக்கின்றன. மக்களுக்காக உயிரை விட்ட முன்னோர்கள் சிறு தெய்வங்களாகியிருக்கிறார்கள். அந்த முன்னோர்களை வழிபடும் மரபு சிறு தெய்வ வழிபாடாக இருப்பதை இந்த "தமிழ் மண்ணின் சாமிகள்' நிகழ்ச்சியில் சொல்லி வருகிறோம். அவ்வை காட்சி ஊடகம் இந்த நிகழ்ச்சியைத் தயாரிக்கிறது. இந்த நிகழ்ச்சியின் எண்ணம், எழுத்து, இயக்கம் எல்லாவற்றையும் பத்திரிகையாளர் மணா சார் கவனித்துக் கொள்கிறார். இது ஏதோ கிராமத்துச் சிறு தெய்வங்களைப் பற்றி மட்டும் கூறும் நிகழ்ச்சி என்று நினைத்துவிடாதீர்கள். சென்னை கொரட்டூர், கோயம்பேடு பகுதிகளில் உள்ள நாகவல்லியம்மன் கோயில்களும் சிறு தெய்வங்களே. அவற்றைப் பற்றிய நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன.

இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருப்பதன் மூலம் எனக்குப் பல புதிய விஷயங்கள், நமது மண்ணுக்கேயுரிய மரபுகள் எல்லாம் தெரிய வருகின்றன. வேலை செய்யும்போதே கற்றுக் கொள்வது நல்ல விஷயம்தானே?'' என்கிறார் சிரித்துக் கொண்டே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.