ஒடி ஆடி துள்ளித் திரிந்த வயதில் ரொமாய்ட் ஆர்த்ரடிக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு பிறருக்கு சுமையாக மாறிப்போனவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் விளாம்பட்டியைச் சேர்ந்த தி.சுதாலட்சுமி. அதற்காக வருத்திக் கொள்ளாமல், பிறருக்கு சுமைதாங்கியாக உருப்பெற வேண்டும் என வீறுகொண்டு எழுந்து இன்று 25 குடும்பங்களுக்கு வேலை கொடுத்து இளம் தொழில் முனைவோராக இருந்து வருகிறார். நிலக்கோட்டைப் பகுதியில் முறுக்குத் தொழிலில் ஈடுபட்டு அச்சு முறுக்கு சுதா என பெயரெடுத்து உள்ளார். பிறரின் உதவியின்றி எதையும் செய்ய முடியாமல் இருந்தாலும் தொழில்கூடத்தைத் திறமையாக நிர்வாகித்து வரும் அவரைச் சந்தித்தோம்..
""எனது பெற்றோருக்கு நான் ஒரே மகள். 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கை, கால் எலும்பு இணைப்புகளில் ஒருவிதமான வலி இருந்து கொண்டே இருந்தது. என்னநோய் என்பது தெரியாமலேயே சிகிச்சை பெற்று வந்தேன். நாட்கள் சென்ற பின்னர் தான் ரொமாய்ட் ஆர்த்தரடிக்ஸ் என்பதும் இந்நோய்க்கு இதுவரை மருந்து இல்லை என்பதும் தெரிய வந்தது. பள்ளி நாட்களில் நாட்டியம் ஆடிவந்த நான் இன்று பிறர் உதவியின்றி எழுந்து நிற்பதுகூட முடியாத நிலை ஏற்பட்டது. நோய் தாக்கம் இருந்தாலும் எம்.ஏ., எம்.பில். படித்துள்ளேன். மன உறுதி, பிசியோதெரபிஸ்ட் மூலம் பிறர் உதவியுடன் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வருகிறேன். நிலக்கோட்டை தனியார் பள்ளியில் 3 ஆண்டுகளாக வார்டன் வேலை, கொம்புக்காரன்பட்டியில் 8 மாதம் மழலையர் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினேன். அப்பள்ளி திடீரென மூடப்பட்டுவிட்டது. இதனால் மீண்டும் வீட்டில் இருக்க வேண்டியநிலை வந்தது.
பாக்கியலட்சுமி என்பவர் முறுக்குத் தொழில் செய்து வந்தார். நானும் முறுக்குத் தொழில் செய்ய வேண்டும் என அவரிடம் அதுகுறித்து கேட்டபோது, "உனது தாயாரின் பென்ஷன் தொகையை வைத்துக் கொண்டு வீட்டோடு இருந்துவிடு உன்னால் எதுவும் முடியாது' எனக் கூறியது என்னை வெகுண்டு எழவைத்தது. ரூ.10 ஆயிரம் முதலீட்டில் 2 பேரைக் கொண்டு அச்சு முறுக்குத் தொழிலைத் தொடங்கினேன்.
நிலக்கோட்டையில் பலரும் முறுக்குத் தொழிலில் ஈடுபட்டாலும் எங்களது அச்சு முறுக்கின் சுவை மிகவும் நன்றாக இருப்பதாக பலரும் தெரிவித்தனர். இதையே எனது பலமாக மாற்றி மார்க்கெட்டிங் செய்வதை நேரடியாக நானே மேற்கொண்டேன். கடைகளுக்கு ஆட்டோ மூலம் சென்று சரக்குகளைக் கொடுத்தபோது சாதாரண பாக்கெட்டுகளாக இல்லாமல் லேபிள் அச்சிட்டு பொட்டலங்களைக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என கடைக்காரர்கள் கூறியதைத் தொடர்ந்து சற்று பெரிய அளவில் 10 பேரை வேலைக்கு அமர்த்தி 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது தாய் பெயரில் தங்கம் ஸ்நாக்ஸ் எனப் பெயரிட்டு மார்க்கெட்டிங் தொடங்கினோம். இன்று மதுரையில் தொடங்கி கொடைக்கானல் வரையிலும் எங்களது அச்சு முறுக்கு பெயர்பெற்றுள்ளது. இதன் காரணமாக 25 பேருக்கு வேலை கொடுத்துள்ளேன். ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வணிகம் நடைபெறுகிறது.
கிராமங்களில் அச்சு முறுக்கு என்பது ஒரு ருசியான தின்பண்டம். அதனால் மற்ற முறுக்குகளை நாங்கள் தயாரிக்காமல் அச்சு முறுக்கை சுகாதாரமான முறையில் சுவையுடன் தயாரிப்பதால் நல்ல பெயர் கிடைக்க ஆரம்பித்தது. எங்களது ஊழியர்கள் என்னை ஒரு தொழில் முனைவோராகக் கருதாமல் சகோதரியாகவே நினைத்து பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களது உழைப்பின் காரணமாக மாதந்தோறும் எந்தெந்த ஊர்களில் விற்பனை செய்வது, எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்வது என்ற இலக்கினை நிர்ணயம் செய்து வேலை செய்கிறோம். இதனால் இலக்கினை அடைய முடிந்தது மட்டுமல்ல தற்போது தேவையைப் பூர்த்தி செய்ய கூடிய நிலையை நாங்கள் அடைந்துள்ளோம்.
இப்போதைய என் லட்சியம், ஓராண்டுக்குள் எங்களது தொழிலாளர்களின் எண்ணிக்கையை 100ஆக உயர்த்துவது. திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் மட்டுமே விற்பனை செய்து வரும் இந்த அச்சு முறுக்கை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும்.
வாழ்க்கையே முடிந்து போனதாக நினைத்திருந்தபோது என்னுடன் இருந்து என்னைத் தூண்டியவர்களும், எனக்குப் போட்டியாக இதே தொழிலை மேற்கொண்டு எனது வாடிக்கையாளர்களை அபகரிக்க நினைத்து என்னைவிட்டுப் போன தொழிலாளர்களும் என் மன உறுதிக்குக் காரணமானவர்கள். இவர்களின் செயல்பாடுகள் என்னைப் பிறரின் உதவியோடு நடமாட வைத்துள்ளது.
இந்த சமூகத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து வருகிறேன். கணவரால் கைவிடப்பட்ட குடும்பங்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறேன்.
கடந்த 2 ஆண்டுகளாக நிலக்கோட்டை தமியான் மருத்துவமனையுடன் இணைந்து ஆண்டுதோறும் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி 168 பேருக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன்.
12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மேல்கல்வி தொடர வங்கிகள் கடன் வழங்குகிறது. ஆனால் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக 9ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் போகும் மாணவ, மாணவியர் 25 பேரைத் தேர்வு செய்து அவர்கள் 12ஆம் வகுப்புவரை கல்வி கற்க உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்'' என்கிறார் சுதாலட்சுமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


