வாராது வந்த திரைப்படம்!
அதிகமான ஆர்ப்பாட்டங்கள் எதுவுமில்லாமல், தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் இப்போது திரையிடப்பட்டிருக்கிறது "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்' தமிழ்த் திரைப்படம். பிரபல நடிகர் மம்முட்டி நடித்து 1998 இல் த


அ திகமான ஆர்ப்பாட்டங்கள் எதுவுமில்லாமல், தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் இப்போது திரையிடப்பட்டிருக்கிறது "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்' தமிழ்த் திரைப்படம். பிரபல நடிகர் மம்முட்டி நடித்து 1998 இல் தயாரிக்கப்பட்டு 2000 இல் வெளியான இந்தத் திரைப்படத்தின் தமிழ் வடிவம் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு இப்போதுதான் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் நுழைந்திருக்கிறது.
இத்தனைக்கும் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்தது தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம். ஏனிந்த தாமதம்? என்று தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் துணைப் பொது மேலாளர் டி.இராமகிருஷ்ணனிடம் கேட்டோம்.
""1998 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்' திரைப்படம் 2000 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1998 ஆம் ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் அது பெற்றது. இந்தப் படம் 2002 ஆம் ஆண்டு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
தமிழ் உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் மொழி மாற்றம் செய்யப்பட்ட இந்தப் படத்தின் வெளியிடும் உரிமையைப் பத்தாண்டுகளுக்குப் பெற்றது மும்பையில் உள்ள பாக்கியஸ்ரீ பிக்சர்ஸ் நிறுவனம்.
தொலைக்காட்சியில் வெளியிடும் உரிமையையும் அது பெற்றது. சில இடங்களில் இந்தப் படத்தின் இந்தி, ஆங்கில மொழிப் படங்கள் மட்டும் வெளியிடப்பட்டன.
தமிழ்ப் படம் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில் விஸ்வாஸ் புரடக்ஷன் என்ற நிறுவனம் தமிழில் வெளியிடும் உரிமையை 2006 இல் அவர்களிடம் பெற்றது. இருந்தும் அதுவும் படத்தை வெளியிடாமல் தாமதித்து வந்தது. பாக்கியஸ்ரீபிக்சர்ஸ் பெற்ற வெளியிடும் உரிமை 2010 இல் முடிவுக்கு வந்ததை அடுத்து அம்பேத்கர் திரைப்படத்தின் வெளியிடும் உரிமை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்கு வந்தது.
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகமே திரை அரங்கு உரிமையாளர்களிடம் பேசி நேரடியாக அம்பேத்கர் படத்தை வெளியிட முன் வந்தது. திரை அரங்குகள் கிடைக்காமல் தாமதமான வேளையில் எடிட்டர் லெனின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் திரைப்படம் வெளிவருவதில் ஆர்வம் காட்டினார்கள். படத்தை வெளியிடத் திரையரங்குகள் கிடைக்காததால் இப்போது சென்னையில் மட்டும் 10 திரையரங்குகளில் அம்பேத்கர் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க 30 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. அம்பேத்கர் திரைப்படத்தை நேரடியாக வெளியிடும் முடிவை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஏன் எடுத்ததென்றால், அம்பேத்கர் தேசியத் தலைவர்; அவருடைய வாழ்க்கை வரலாறு மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக மாணவர்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான் நேரடியாக வெளியிட முடிவு செய்தோம்'' என்றார் இராமகிருஷ்ணன்.
அம்பேத்கர் திரைப்படம் வெளிவருவதில் ஆர்வம் காட்டிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் அ.குமரேசனிடம் பேசினோம்.
""அம்பேத்கர் திரைப்படம் வெளியிடுவதில் தாமதமாகிறது என்று எடிட்டர் லெனின் எங்களிடம் கவலையுடன் தெரிவித்தவுடன், அந்தத் திரைப்படம் வெளியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். இந்தத் திரைப்படம் தமிழ்நாடு முழுக்க ஒரே நேரத்தில் வெளியிடப்பட வேண்டும் என்பதற்காக நாங்களும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் சேர்ந்து முயற்சி செய்தோம். தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் துணைப் பொது மேலாளர் டி.இராமகிருஷ்ணனிடமும் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதாகக் கூறினோம். ஒருவேளை அவர்களால் வெளியிட முடியவில்லை என்றால் அதை வெளியிடும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாகக் கூறினோம். எனினும் அவர்களே வெளியிடப் போவதாகக் கூறி விட்டார்கள்.
நாங்கள் நினைத்தபடி இந்தத் திரைப்படம் தமிழ்நாடு முழுக்க ஒரே நேரத்தில் திரையிடப்படவில்லை. சென்னை போன்ற நகரங்களில் உள்ள பெரிய திரையரங்கு உரிமையாளர்கள் இந்தப் படத்தினால் அதிக வருமானம் கிடைக்காது என்று தயங்கியிருக்கிறார்கள். அதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் சிறு நகரங்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்களில் சிலர் கூட எதற்குத் தயங்கினார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது பெரும்பாலும் காலைக் காட்சிகளாகத்தான் திரையிடப்பட்டிருக்கிறது என்பது வருத்தப்படக்கூடிய ஒன்றுதான்.
எங்களைப் பொறுத்த அளவில் கலை, இலக்கியங்கள் மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்வதாக இருக்க வேண்டும். அதேசமயத்தில் அவற்றின் கலையம்சங்களிலும் குறைவு இருக்கக் கூடாது என்று நினைக்கிறோம்.
அம்பேத்கர் சமூகநீதிக்காகப் போராடிய தலைவர். தலித் மக்கள் ஒடுக்கப்பட்டதற்கான காரணத்தை வரலாற்றுரீதியாக ஆராய்ந்து அவர்களின் விடுதலைக்காகச் சிந்தித்து தீர்வுகளை அவர் முன்வைத்தார். அவரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் திரைப்படம் சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பிற்கு உதவும் நல்ல கருத்துகளைச் சொல்கிறது. அதே சமயம் ஒரு விவரணப்படம் போல இல்லாமல், இத்தனை வருடத்திற்குப் பின்பும் மிகுந்த கலைநேர்த்தியுடன் இருக்கிறது. அதனால்தான் நாங்கள் இந்தத் திரைப்படம் வெளியிடப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினோம்.
இந்தப் படத்திற்கு அரசு வரிவிலக்கு அளித்த போதிலும் திரையரங்கு உரிமையாளர்களில் சிலர் முழுக்கட்டணத்தை வசூலிப்பதாகத் தெரிய வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும். இந்தத் திரைப்படத்தை அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் பார்ப்பதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றார் குமரேசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...