கடலுக்குள் ஒரு கிறிஸ்துமஸ் கலாட்டா!

வண்ணங்களின் ஜாலங்களும்,வடிவங்களின் கோலங்களும் அரிதினும் அரிதான கண்காட்சியையே கடலுக்குள் நடத்திக் கொண்டிருக்கின்றன. கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் இங்கிலாந்தின் பிளைமவுத் பல்கலைக்
கடலுக்குள் ஒரு கிறிஸ்துமஸ் கலாட்டா!
Updated on
2 min read

வண்ணங்களின் ஜாலங்களும்,வடிவங்களின் கோலங்களும் அரிதினும் அரிதான கண்காட்சியையே கடலுக்குள் நடத்திக் கொண்டிருக்கின்றன. கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் இங்கிலாந்தின் பிளைமவுத் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர். ரிச்சர்டு கிர்பி என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தொடர்புடையதாக 12 கடல்வாழ் உயிரினங்கள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளார்.

இவ்வுயிரினங்கள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல்உயிரியலாளர் ர.செந்தில்குமாரும், கிறிஸ்துமஸ் பண்டிகையின் சிறப்புகள் குறித்து ஆசிரியர்

ராஜாசுவிசேஷபாண்டியனும் கூறியது.

கிறிஸ்துமஸ் மரம்: பாலிகீட்ஸ் என்ற விலங்கியல் பெயருடைய கடலில் நீந்தும் இந்த உயிரினம் கிறிஸ்துமஸ் மரம் போல காணப்படுகிறது. இதனை கடலில் இருந்து வெளியில் எடுத்தால் இதன் கால்பகுதிகளாக இருக்கும் உணர்விழைகள் அனைத்தும் ஒட்டிக்கொண்டு ஒரு குழாய் போலாகி விடும். ஆண், பெண் இரண்டிலும் இருக்கும் இனப்பெருக்க உறுப்புக்கள் ஒரே உயிரினத்தில் இருப்பது இவ்வுயிரினத்தின் சிறப்பு.

கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி : கடலில் மற்ற உயிரினங்களுடன் சேர்ந்து மிதந்து கொண்டே இருக்கும் இந்த உயிரினம் கடல் தாமரையின் குஞ்சுகள் வகையை சேர்ந்தது. இதன் தொப்பி போன்ற தோற்றம் விசேஷமானது.

கிறிஸ்துமஸ் பனித்துளி: பேபி பிரிட்டில் ஸ்டார் என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட இந்த உயிரினம் வானத்திலிருந்து பனி உதிர்வது போலவே கடலில் மிதந்து செல்கிறது.

கிறிஸ்துமஸ் வளையங்கள்: ஈகாம்பியா என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட இத்தாவர மிதவை உயிரினங்கள் பார்ப்பதற்குக் கிறிஸ்துமஸ் மரங்களில் அழகாக தொங்கவிடப்பட்டிருக்கும் வளையங்களைப் போன்று பளபளப்பாகவும்,சுருள் வடிவிலும் காணப்படும். இந்த உயிரினங்கள் சூரிய வெளிச்சத்திலிருந்து தனக்குத்தானே ஒளிச்சேர்க்கை மூலம் உணவைத் தயாரித்துக் கொள்வது இதன் சிறப்பு.

கிறிஸ்துமஸ் மெழுகுவர்த்தி: மெழுகுவர்த்தி போன்று தோற்றமளிக்கும் இந்த உயிரினம் ஒருவகையான நட்சத்திர மீனின் குஞ்சு. இதன் உணர்விழைகள் மெழுகுவர்த்தியின் ஜுவாலைகள் எரிவது போன்று தோற்றமளிக்கிறது.

கிறிஸ்துமஸ் மணி: கடலில் மிதந்து கொண்டே தன் வாழ்க்கையை நகர்த்தும் ஜெல்லி மீன்கள் பார்ப்பதற்குக் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பயன்படுத்தும் மணிகளைப் போன்று காணப்படுகின்றன. ஆண்டவரின் பிறப்பை அறிவிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கிறிஸ்துமஸ் மணியைப் போலவே உள்ள இந்த உயிரினமும் தாவர மிதவை உயிரினங்களைத் தின்று உயிர் வாழ்கின்றன.



கிறிஸ்துமஸ் வாணவேடிக்கை காட்சி:
பாப்பிள்ஸ் என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட இத்தாவர மிதவை உயிரினங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பட்டாசுகள் வெடித்து வானத்தில் வர்ணப்பூக்கள் ஜொலிப்பதைப் போல தோற்றமளிக்கின்றன. வட்ட, வட்டமாக பல அளவுகளிலும்,பல வடிவங்களிலும் கடலில் மிதந்து கொண்டிருப்பது இவ்வுயிரினத்தின் சிறப்பு

கிறிஸ்துமஸ் விளக்கு: டோலியோ லம் என்ற விலங்கியல் பெயருடைய இம்மிதவை உயிரினம் முதுகெலும்புள்ள மற்ற முதுகெலும்புமற்ற உயிரினமாகவும் விளக்கு போன்ற வடிவிலும் இருப்பது இதன் சிறப்பு.

கிறிஸ்துமஸ் ராஜாக்கள்: இயேசு கிறிஸ்து பிறந்ததை வானில் தோன்றிய நட்சத்திரம் மூலம் அறிந்த 3 வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ஜெருசலேம் நாட்டு மன்னர் ஏரோதுவை சந்தித்து பரிசுப் பொருள்களைத் தந்தார்களாம்.கடலில் வாழும் சிலந்தி நண்டுகளின் குஞ்சுகளும் பார்ப்பதற்கு அந்த 3 ராஜாக்களை நினைவு கூறும் வகையில் இருக்கின்றன.

கிறிஸ்துமஸ் மத்தாப்பு : மத்தாப்பு போல தோற்றமளிப்பவை புரோட்டோ சோவா. இந்த விலங்கியல் பெயருடன் அழைக்கப்படும் ஆதி உயிரினமான இது ஒரு செல் உயிரினமாகவும் இருப்பது இதன் சிறப்பு.

கிறிஸ்துமஸ் தேவதை: வெள்ளை உடையில் தோன்றும் தேவதைகள் போன்றுள்ள ஹெட்ரோ பிராங்கியா என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட சங்குகளும் இருபுறமும் இறக்கைகளை விரித்துக் கொண்டிருக்கின்றன. கடலில் ஜாலியாகச் சுற்றித் திரியும் இந்த உயிரினத்துக்கு ஒடுகள் இல்லாமல் இருப்பது இதன் சிறப்பு.

கிறிஸ்துமஸ் நட்சத்திரம்: கிறிஸ்துமஸ் நட்சத்திரம் போன்று காணப்படும் இந்த உயிரினம் பெரிய அளவிலான நட்சத்திர மீனின் குஞ்சு. பளபளப்பாகவும்,பல வண்ணங்களிலும் காணப்படும் இவை கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தொங்க விடப்படும் நட்சத்திரங்களைப் போல தோற்றமளிப்பது இந்த உயிரினத்தின் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com