பாட்டு... பரதம்... சைக்காலஜி!
ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் காலை எட்டு மணிக்கு ஒளிப்பரப்பாகும் தகதிமிதா என்ற நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் கிருத்திகா சுரஜித்தைச் சந்தித்தோம். அவருடனான சுவையான உரையாடல்... நடன கலைஞரா


ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் காலை எட்டு மணிக்கு ஒளிப்பரப்பாகும் தகதிமிதா என்ற நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் கிருத்திகா சுரஜித்தைச் சந்தித்தோம். அவருடனான சுவையான உரையாடல்...
நடன கலைஞரான நீங்கள் சின்னதிரை பக்கம் வந்தது எப்படி?
ஒன்றரை வருடத்திற்கு முன்பு, ஜெயா டிவியில் ஒரு புரோமோ சூட்டிங்குக்காக போயிருந்தேன். அப்போது தகதிமிதா நிகழ்ச்சிக்காக எனக்கு ஸ்கீரின் டெஸ்ட் எடுத்தார்கள். அதில் நான் தேர்வானதால். மறுநாளே இந்த நிகழ்ச்சிக்கான சூட்டிங்கை ஆரம்பித்துவிட்டார்கள். இப்படித்தான் சின்ன திரைக்கு வந்தேன். இந்த நிகழ்ச்சியைத் தவிர தற்போது ஜெயா டிவியில் லேடீஸ் ஸ்பெஷல் என்கிற நிகழ்ச்சியும் வழங்கிக் கொண்டிருக்கிறேன்.
தகதிமிதா நிகழ்ச்சியை பற்றி?
இது முழுக்க முழுக்க பரத நாட்டியத்துக்கான நிகழ்ச்சி. பரதக் கலையைப் பாதுகாக்க வேண்டும். அதனை இளைய தலைமுறையினரிடையே வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், இதுவரை சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இளம் நடனமணிகள் பங்கேற்று உள்ளனர். எனக்கு முன்பு இந்த நிகழ்ச்சியை பானுப்பிரியா, ஷோபனா, சுதா சந்திரன், மாளவிகா, அபர்ணா என நிறைய பெரிய டான்ஸர் தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். கிட்டதட்ட நானூறு எபிசோட்களை இந்நிகழ்ச்சி கடந்து விட்டது. ஒரு டான்சரான எனக்கு இதுபோன்ற நடன நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வாய்ப்புக் கிடைத்தது ரொம்ப சந்தோஷமாகவும் மனதிருப்தியாகவும் இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் மூலமாக என்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
லேடீஸ் ஸ்பெஷல் நிகழ்ச்சியின் சிறப்பு என்ன?
இந்நிகழ்ச்சியின் சிறப்பு என்னவென்றால், வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு ரொம்ப உபயோகமான நிகழ்ச்சி இது. ஒருநாள் இருக்கும். செக்மண்ட் அடுத்த நாள் இருக்காது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வித்தியாசமான உபயோகமான விஷயங்கள் இதில் கற்று தரப்படுகின்றன. கைவினைப் பொருட்கள், பேஷன், தையற்கலை, சமையல் போன்றவற்றை சொல்லிக் கொடுப்பது, பெண்கள் தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், பெண்களுக்கான மருத்துவம் பற்றியும் தேர்ந்த மருத்தவர்கள் வந்து பயிற்சி கொடுப்பது என நிகழ்ச்சி வித்தியாசமாக இருக்கும்.
வேறு நிகழ்ச்சிகள் எதுவும் தொகுத்து வழங்கியிருக்கிறார்களா?
முதலில் ஜெயா டிவியில் ஒளிப்பரப்பாகும் காலை மலர் நிகழ்ச்சியில்தான் வந்தேன். அதன் பிறகுதான் தகதிமிதா நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக ஆரம்பித்தது. இதைத் தவிர போன வருடம் இளையராஜா சார் நடத்திய "நத்திங் பட் விண்ட்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். இது தவிர பிரபலங்களின் நேர்காணல் நிகழ்ச்சி வழங்கியிருக்கிறேன். அதையடுத்து கங்கை அமரன் சார் நடத்திய "பாட வா என் பாடலை' என்ற நிகழ்ச்சியில் யுகேந்திரன் சாரோடு இணைந்து தொகுத்து வழங்கியிருக்கிறேன்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சாரின் இசையில் ஒரு சில திரைப்படங்களில் "டிராக்' பாடியிருக்கேன். வீணை வித்வான் ராஜேஷ் வைத்தியா இசையில் சில ஆல்பங்களிலும் பாடியிருக்கேன். இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று நிறைய கச்சேரிகளில் பாடியிருக்கேன். நடனம், பாட்டுக் கச்சேரி என இதுவரை கிட்டதட்ட முன்னூற்று ஐம்பது மேடைகளில் ஏறியிருக்கிறேன்.
படங்களில் நடிக்கும் எண்ணம் உண்டா வாய்ப்புகள் வருகிறதா?
நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் பெரியதிரையில் நடிக்க எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. அது மட்டும் இல்லாமல், நடிப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் பெரியதிரையில் பின்னணிப் பாடகியாக வர வேண்டும் என்று ஆசையிருக்கிறது. அதே போல் சின்ன திரையில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதில் நிறைய ஆர்வம் இருக்கிறது.
உங்களைப் பற்றி?
நான் பி.எஸ்.சி சைக்காலஜி படித்திருக்கிறேன். வருங்காலத்தில் பரதத்தை தெரப்பியாக கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்காக இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன். அதுபோல் நான் ஒரு பிரபல சோலோ டான்ஸ்ராக வரவேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. இதைத் தவிர மாற்று திறனாளி குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவிகள், சேவைகள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என் அம்மா ராதிகா சுரஜித் ஒரு நடன கலைஞர். அப்பா சுரஜித் கோபாலகிருஷ்ணன் ஒரு பாடகர், அவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். அவர்களுக்கு நான் ஒரே மகள். அதனால் நான் பிறந்ததில் இருந்தே என் வீட்டில் பாட்டும் பரதமும் இயல்பாக இருக்கும். சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், இந்திரா போன்ற சில படங்களுக்கு என் அம்மா கோரியோகிராபி செய்திருக்கிறார்கள். இந்திரா படத்தில் நிலா காய்கிறது என்ற பாடலுக்கு கோரியோகிராபி செய்தது அவர்கள்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...