இவர் முக்கினாலே "மோகனம்' கேட்கும் என்று மகாராஜபுரம் விஸ்வநாத அய்யரைப் பற்றி பெருமையாகக் கூறுவர். மகாராஜபுரம் சந்தானத்தின் இசையில் உருகிய பல ரசிகர்கள், இவரின் இசையைக் கேட்டபிறகுதான் கர்னாடக சங்கீதத்தையே ரசிக்கத் தொடங்கியதாக சொல்வர். இவர்களின் வழியில் வந்த, மகாராஜபுரம் ராமச்சந்திரன் இவர்களுக்கு சற்றும் சளைத்தவரல்ல (இளைத்தவரும் அல்ல) என்பதை கடந்த செவ்வாயன்று சென்னை, பெத்தாச்சி அரங்கத்தில் ராமச்சந்திரனின் கச்சேரி கேட்டவர்கள் ஒப்புக்கொள்வர்.
பிரும்மகான சபை ஒரு நற்காரியம் செய்து வருகிறது. இசை விழா மும்முரமாய் புயல் வேகமெடுத்து மையங்கொள்ளும் டிசம்பர் மூன்றாம் வாரம் வருவதற்குள், முதல் தேதியிலிருந்தே இசை விழா தொடங்குவதால் பாடகர்களின் குரலிலே நல்ல ஒத்துழைப்பும் உற்சாகமும் கேட்பவருக்கும் ரசமாக இருக்கின்றது.
கச்சேரிக்கு வருவோம். அடடா... என்ன ஒரு கம்பீரமான குரல்!
ஐயா... அடித்துசொல்வேன்... இத்தகைய ஆண்மை நிறைந்த குரல் வளம் எந்த பாடகருக்கும் இல்லை!
சுவாமி தயானந்த சரஸ்வதி இயற்றிய "பஜ விக்னராஜம் பஜே' என்ற முதல் அம்ஸத்வனி பாடலிலேயே கச்சேரி களை கட்டியது. ""இதைப் பாடினாலே போதும் விநாயகரின் அத்தனை மந்திரங்களும் இதில் உண்டு என்று சுவாமிகள் கூறுவார்..''
என்றும் விளக்கினார் பாடகர்.
அடுத்து, "சீதம்ம மாயம்ம'வில் வசந்தா அழகாக வளைய வந்தாள். பிருந்தாவன சாரங்கா ராக ஆலாபனையில் கம்பீரமும் குழைவும், சம விகிதத்தில் அமைந்தது. மந்திர ஸ்தாயியில்தான் மனிதர் என்னமாய் மனதை மயக்குகிறார்!
"ஸ்ரீசவுந்தரராஜம் ஆச்ரயே' என்ற தீட்சிதர் கிருதியும் ஸ்வரங்களும் கன கச்சிதம். தொடர்ந்து, "பரமன் அருளிய குமர குருபரனே' என்ற திஸ்ர திரிபுட தாள பல்லவி. சண்முகப்ரியா ராகத்தை அருமையாகப் பாடி ராக தேவதைக்கு புஷ்பாஞ்சலி செய்தார். பல்லவியின் இறுதியில் ஸ்வரம் பாடுகையில் நாட்டை, கெüளை, ஆரபி, வராளி, ஸ்ரி என்று ஐந்து ராகங்களிலிருந்து ஸ்வரங்களைத் தொடுத்து பாமாலையே சூட்டி விட்டார்.
விஸ்தாரமான சண்முகப்ரியாவிற்குப்பின் மீண்டும் அதே ராகத்தில் அமைந்த "விளையாட இது நேரமா' பாட்டு எதற்கு?
வேறொன்றுமில்லை, அந்தநேரத்தில் வேறொரு ராகத்தை இவர் பாட கேட்டு ரசித்திருக்கலாமே... என்ற ஆதங்கம்தான்!
இனிமையான பாகேஸ்ரீ (ஸôஹர ஸயன விபோ), "போ சம்போ'வுடன் கம்பீரமாக கச்சேரி நிறைவடைந்தது.
செல்வத்தை சந்ததிக்கு கொடுத்தால் அது கரைந்து விட வாய்ப்புண்டு. உன்னதமான கலையைக் கொடுத்தால் கலைஞருக்கு மட்டுமல்ல. கலைக்கும் உயர்வு உண்டு என்பதை நிதர்சனமாக்கினார், தனது பரம்பரையின் புகழ்க்கொடியை உயர்த்திப்பிடிக்கும் மகாராஜபுரம் ராமச்சந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


