செ ன்னை, எழும்பூர் அருங்காட்சியக அரங்கத்தில் சமீபத்தில் ஒரு நாடகம் அரங்கேறியது. ஒன்றரை மணி நேரம் நடந்த அந்த நாடகத்தில் அரங்கத்திலுள்ளவர்களிடமிருந்து தொடர்ந்து கரவொலியும் சிரிப்பொலியும் எழுந்த வண்ணமிருந்தன.
அது என்ன நாடகம்? மிகவும் பாரம்பரியமான நாடகக் குழுவா என்றால், இல்லை! நாடக மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பங்கெடுத்த நிகழ்ச்சியா? ஊஹூம் இல்லவே இல்லை. பங்கேற்றவர்கள் சிறுவர் சிறுமியர். நாடகத்தை நடத்தியவர்கள் "நளந்தாவே' என்னும் தன்னார்வ அமைப்பினர். நாடகத்தில் நடித்த சிறுவர்கள் யார் தெரியுமா?
வசதியான பள்ளிகளைச் சேர்ந்த சிறுவர்கள் இல்லை! அரசுக் காப்பகங்கள், சென்னை (மாநகராட்சி) பள்ளிகள், சிறுதவறுகள் செய்துவிட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் இல்லங்களில் இருப்பவர்கள் ஆகிய இடங்களிலிருந்து ஆற்றல் மிகுந்த சிறுவர்களைத் தமிழகமெங்கும் பயணித்துப் பின் தேர்ந்தெடுத்து, பயிற்சி கொடுத்து, நடிக்க வைத்து....யம்மாடி! பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறதே என்றால்... அது உண்மைதான்.
இந்த நாடகம் பிரம்மாவின் பிரயத்தனம்தான்!
ஆம்! இந்த நாடகங்களை எழுதி, இயக்கியிருப்பவர் பிரம்மா. பெயருக்கேற்றபடி இவரும் ஒரு படைப்பாளிதான்! இவருடன் இணைந்து ஆதரவுக்கரம் கொடுக்கும் பாவல் மற்றும் சுரேந்திரன் ஆகியோரின் துணையுடன் சாதனை புரிந்து வருகிறார் பிரம்மா. இவருக்கு இந்த எண்ணத்தை விதைத்தவர் "நளந்தாவே' அமைப்பை ஏழு வருடங்களாக நடத்தி வரும் ஸ்ரீராம் ஐயர் என்ற இளைஞர்.
பலவிதங்களில் சமுதாயத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்ட சிறுவர்களின் மன ஆழத்தில் அமிழ்ந்து கிடக்கும் இறுக்கங்களைக் கலைகள் மூலம் கட்டவிழ்க்க முடியும் என்று ஆணித்தரமாக நம்புகிறார் ஸ்ரீராம். அதை நோக்கித்தான்
"நளந்தாவே'வின் பயணம்.
லாபத்தைக் கருதாமல் லட்சியத்தை நோக்கிப் பயணிக்கும் இந்த அமைப்பு, கடந்த ஆறேழு வருடங்களாக தமிழகம், பீகார், ஆந்திரம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் கலையில் ஆர்வமுடன் இருக்கும் சிறுவர்களைக் கண்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.
மூன்று வருடங்களாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாடகம் நடத்துதல், ஓவியம் வரைதல், இசைக்கான பயிற்சி பட்டறை நடத்துதல், குழந்தைகளுக்கான சர்வதேச திரைப்படங்களின் கண்காட்சி என்று பற்பல நூதனமான நிகழ்வுகளை ஜூலை மாதத்தில் 15 நாள்களுக்கு நடத்தி வருகிறது. அப்படி இந்த வருடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிதான், "பாட்டி வடை காக்கா நரி!' நாடகம். நமது பாரம்பரியமான பஞ்சதந்திரக் கதைகள்தான்.
முயல்-ஆமை, தாகம் தணிக்க ஜாடியில் காக்கா கற்களைப் போடுவது, சிங்க ராஜாவின் அட்டகாசம் எனப் பல குட்டிக் கதைகளும் நாடகத்தின் கிளைக் கதைகளாக இருந்தன. ஆங்காங்கே சமூக அவலங்கள் மற்றும் அரசியலைச் சாடும் காமெடி வசனங்களில் இயக்குநரின் சாமர்த்தியம் தெரிந்தது.
""சிங்க ராஜா ஒரு மாரத்தான் வாக்கிங் ரேஸ் அறிவிக்கிறார். வெற்றி பெறுபவருக்கு பாட்டி அற்புதமான ருசியுடன் சுட்டுத் தரும் வடைதான் பரிசு'' என்பதுதான் கதைச் சுருக்கம். நாடகம் முழுவதும் ஊடாடிக் கொண்டிருக்கின்றன பல அறிவுரைகளும் நீதிபோதனைகளும். ஆனால் அவற்றை உறுத்தாமல், சலிப்பு தட்டாமல் அழகாக வலம் வரச் செய்திருக்கிறார் இளம் இயக்குநர் பிரம்மா!
இறுதிக் காட்சிகளில், மிருகங்கள் அனைத்தும் பங்கு பெறும் வாக்கிங் போட்டியில் ஜெயிக்கப் போவது யார்? என்ற ஆர்வத்தில் நமக்கு சுவாரஸ்யம் ஏற்பட்டு விடுகிறது. சிறுவர் முதல் அனைத்து வயதினரையும் கட்டிப்போடுகிறது! ஆமையாக நடித்த சிறுவன் அருணாசலம், நரியாக பாலாஜி, பாட்டியாக பாவல், போலீஸôக ராஜசேகர் ஆகியோரின் நடிப்பு ரொம்ப ஃப்ரொஃபஷனல். எல்லா குழந்தைகளுமே மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தனர்.
இந்த அமைப்புக்கு மேலும் உறுதுணையாக ஏன், ஒரு தூணாகவே நின்று தோள் கொடுக்கிறார் பிரபல பியானோ கலைஞர் அனில் சீனிவாசன். மேலும் கர்நாடக இசைக் கலைஞர்களான குருசரண், உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் திரையிசைப் பாடகர்கள் ரமேஷ் நய்யார் போன்றவர்களும் போத்தீஸ், விஜய் டி.வி. போன்ற நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டுகின்றனர். இவர்களது லட்சியப் பயணம் தொடர நாமும் கைகொடுப்போம்!