/

பூலோக சொர்க்கம் - கிழக்கு ஆசியா!

மலேசியா, சிங்கப்பூரில் பத்து நாள்களும் ஹாங்காங்கில் மூன்று நாள்களும் தாய்லாந்தில் ஆறு நாள்களும் இந்தோனேஷியாவில் மூன்று நாள்களும் என, கிழக்கு ஆசியப் பகுதிகளுக்குச் சுற்றுலா செல்வதற்கான பயணச் சீட்டுகளை

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:31 pm

சண்முகம்

மலேசியா, சிங்கப்பூரில் பத்து நாள்களும் ஹாங்காங்கில் மூன்று நாள்களும் தாய்லாந்தில் ஆறு நாள்களும் இந்தோனேஷியாவில் மூன்று நாள்களும் என, கிழக்கு ஆசியப் பகுதிகளுக்குச் சுற்றுலா செல்வதற்கான பயணச் சீட்டுகளை என்னிடம் தந்தார் என்னுடைய மகன் மணிமாறன். 61 வயதில் எனக்கு இப்படியொரு அரிய வாய்ப்பு கிடைத்தது. என்னுடன் முன்னாள் எம்.எல்.ஏ., பெ.சு.விஜயகுமாரும் உடன் வந்திருந்தார். கடந்த ஜுலை பதினெட்டாம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்குப் பயணம் ஆனோம்.

 மலேசியாவின் அடையாளமாகத் திகழ்கின்றன இரட்டை கோபுரங்கள். இதை நிர்மாணித்தவர் மலேசியத் தமிழரான அனந்தகிருஷ்ணன்.

 பத்தாயிரம்பேர் ஒரே நேரத்தில் தொழுகை செய்திடும் அளவுக்கு ஆறு வாசல்களுடன் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான மசூதி, மலேசிய அரசரின் அழகிய பங்களா, அருங்காட்சியகம், மலேசிய சுதந்திரத்திற்காகப் போரிட்டவர்களை நினைவுகூர்ந்து சிறப்பிக்கும் போர் நினைவு சதுக்கம், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக விதவிதமான சாக்லேட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை.... எனப் பல இடங்ளைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தோம்.

 கோலாலம்பூரிலிருந்து பினாங்கை சுற்றிப்பார்த்துவிட்டு லங்காவி என்ற தீவுக்கு வந்தோம். ஆண்டுக்கு 30 லட்சம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் தீவு இது. இரவு 7.10 வரை சூரியன் இங்கு மறைவதில்லை.

 லங்காவியிலிருந்து கோரல் தீவுக்கு காலை வேளையில், இரண்டு அடுக்கு கப்பலில் பயணம் செய்தோம். விசைப் படகு மூலம் ஐலேண்டில் இறங்கினோம். எங்களைப் போல சுற்றுலாப் பயணிகள் அங்கு நிறைந்து காணப்பட்டனர். எல்லாருமே நீச்சல் உடையில்... அங்கு சுகமான குளியல் அனுபவம் கிடைத்தது.

 நாம் நீரின் அடியில் கடலுக்குள் இருப்பதைப் பார்க்க சிறப்பு கண்ணாடி உபகரணங்கள் தருகிறார்கள். நீச்சல் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வண்ண வண்ண மீன்கள்... பலவகையான கிளிஞ்சல்கள் அங்கு நிறைந்திருக்கின்றன. தரைத் தளம் பளிச்சென்று தெரிகிறது. ஒருநாள் முழுவதும் கடலில் குளித்து குதூகலம் அடைந்தோம்!

 மறுநாள் சிங்கப்பூர். மீண்டும் கோலாலம்பூர் வந்து ஹாங்காங் பயணம். ஹாங்காங் செல்ல விசா கட்டணம் இல்லை. நியூயார்க்குக்கு அடுத்து விலைகள் அதிகம் உள்ள நகரம் ஹாங்காங் என்று சொன்னார்கள். சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட நாடு. அந்நாட்டில் டாலர்கள்தான் புழக்கத்தில் இருக்கின்றன. ஹாங்காங் என்றால் வாசனை மிகுந்த துறைமுகம் என்று அர்த்தமாம். ஒருகாலத்தில் ஆங்கிலேயர்கள் வியாபார நிமித்தம் அபின் நிறைந்த கப்பல்களை இத்துறைமுகத்தில் நிறுத்தி வைத்ததால், இப்பெயர் வந்தது என்று சொன்னார்கள்.

 ஹாங்காங்கில் ஆயிரக்கணக்கான புத்தர் சிலைகள் கொண்ட மடாலயம் ஒன்றினை ஷான்டின் என்ற இடத்தில் பார்த்தோம். பலவித வடிவங்களில் பலவித கோணங்களில் புத்தர் காட்சி அளிக்கிறார். இதை உருவாக்கியவர் சீனாவில் பிறந்து ஹாங்காங் கலாசாலையில் தத்துவத்தில் டாக்டம் பட்டம் பெற்ற ரெவரண்ட்யூட்காய் என்பவர். ஹாங்காங்கில் புத்தமதத்தைப் பரப்பியவர்களில் முக்கியமானவர் இவர்.

 மடாலயத்திற்கு அருகில் மூதாதையர்களின் நந்தவனம் ஒன்று உள்ளது. இங்கே அவரவர் சக்திக்கு ஏற்ப பணம் கொடுத்து பெட்டகங்களை வாங்கி தங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர் இறந்ததும், உடலை எரித்து சாம்பலை அந்தப் பெட்டகத்தில் வைத்துவிடுகிறார்கள். நாம் திவசம், திதி கொண்டாடுவது போல் ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட இறந்த தினத்தன்று அந்தப் பிரார்த்தனை கூடத்திற்கு வந்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. இங்கே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாம்பல் பெட்டகங்கள் உள்ளன.

 ஹாங்காங்கிலிருந்து தாய்லாந்துக்குப் பயணப்பட்டோம். தாய்லாந்து தலைநகர் பாங்காக் மற்றும் பட்டயாவில் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு வியந்தோம். கலை நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்விப்பவர்கள் திருநங்கைகள். இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தாய்லாந்து அரசாங்கமே!

 பாங்காக்கிலிருந்து புங்கட் என்ற பகுதிக்குச் சென்றோம். புங்கட்டும் ஒரு தீவுதான். மக்கள் தொகை மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பேர். இங்கு 90 சதவிகிதம் மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றி புத்தரை வழிபடுபவர்கள். தாய்லாந்து அரசர், அரசியார் படங்களைத் தவிர வேறு யார் படங்களையும் வீதிகளில் காண முடியவில்லை. புங்கட் விமான நிலையத்தில் மசாஜ் கிளப்புகள் உள்ளன. கடூர் பீச், கார்டன் பீச் எனப் பல பீச்சுகள் உள்ளன. நம் ஊரில் குதிரை சவாரி செய்வது போல் அங்கே யானை சவாரி செய்தோம். 30 நிமிடம், ஒருமணிநேரம் என நேரத்திற்குத் தக்கவாறு கட்டணம் வசூலிக்கிறார்கள்.

 பண்டா சீ என்ற இடத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியைக் காணச் சென்றிருந்தோம். தினமும் இரவு 7 மணிக்கு ஆரம்பித்து 8.20க்கு நிறைவுசெய்கிறார்கள். கட்டணம் ரூ. 1500. அறிவியலும் ஆன்மீகமும் வரலாறும் கலந்த அற்புதமான நடனக்காட்சிகள். 16 யானைகள் ஒரேசமயத்தில் மேடையில் தோன்றுவது, பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தியது. குதிரை, புறா, ஆடு, எருமை மாடு இவைகள் கூட நடிக்கின்றன. அவசியம் பார்க்கவேண்டிய நிகழ்ச்சி.

 ராக் சிட்டி என்ற பகுதியில் இரவு நேரக் கேளிக்கைகள் நடக்கின்றன. மதுபானத்திற்கு மட்டுமே கட்டணம். கவர்ச்சி நடனம் இலவசம்!

 பெரிய மீன்கள், அளவில் பெரிய நண்டுகள், வெண்மை, சிவப்பு, கறுப்பு என மூன்று நிறங்களில் ஆமைகள் மற்றும் பல கடல்வாழ் பூச்சிகள் இவற்றை உயிரோடு மாலையில் கடைகளுக்கு வேன் மூலம் சப்ளை செய்கிறார்கள். எது தேவையோ, அதை உயிருடன் அப்படியே எடைபோட்டு பதப்படுத்தி சுவையாக நமக்கு வழங்குகிறார்கள்.

 தாய்லாந்து மசாஜ் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. மதுபானங்கள் விலை மிகவும் குறைவு. இறந்தபின் சொர்க்கம் போகவேண்டும் என ஆசைப்படுபவர்கள் உயிரோடு இருக்கும்போதே, தேவதைகளின் நகரமான தாய்லாந்துக்குச் சென்று வந்தாலே போதும். உல்லாசப் பயணிகளின் சொர்க்க பூமி தாய்லாந்து.

 புங்கட்டிலிருந்து இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தாவுக்குப் பயணித்தோம். முஸ்லீம் நாடு. 1707-ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் போர் நினைவுச் சின்ன அருங்காட்சியகம் கண்டோம். சிறைச்சாலையைப் பார்த்து பயந்துவிட்டோம். மிகக் குறுகிய உயரம் குறைந்த இடம். குற்றங்களுக்கு ஏற்ப காலில் கற்கள் கட்டுதல், சிறையில் அதிகமானவர்கள் அடைக்கப்படுதல்... என இங்கே அரங்கேறிய கொடுமைகள் ஏராளம். இந்தச் சிறைக்குச் சென்றவர்கள் யாரும் உயிரோடு திரும்பியதில்லையாம்!

 1527-ஆம் ஆண்டு கட்டப்பட்ட துறைமுகம் பொலிவிழந்து காணப்படுகிறது. ராமாயணம் பற்றி ஜகார்தாவில் வாழும் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.

 இருபத்தியிரண்டு நாள்களில் ஓர் இனிமையான பயணம் அளித்த மகிழ்ச்சியோடு ஊர் திரும்பினோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.