இவர்கள் நிஜமான ஜோடிகள்!!

இங்கே அழகாக காட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் காதல் ஜோடிகளை பார்க்கும் போது, ஏதோ வரவிருக்கும் திரைப்படத்தில் நடிக்கும் புதுமுகங்கள் என்று நினைத்தால் தவறு! இவர்கள் நிஜமான ஜோடிகள்!! திருமணமான தம்பதிகளை அ
இவர்கள் நிஜமான ஜோடிகள்!!
Updated on
2 min read

இங்கே அழகாக காட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் காதல் ஜோடிகளை பார்க்கும் போது, ஏதோ வரவிருக்கும் திரைப்படத்தில் நடிக்கும் புதுமுகங்கள் என்று நினைத்தால் தவறு!

இவர்கள் நிஜமான ஜோடிகள்!!

திருமணமான தம்பதிகளை அழைத்துக்கொண்டு இயற்கை எழில் கொஞ்சும் இடங்களின் பின்னணியிலும் நகரத்தின் முக்கியமான இடங்களின் பின்னணியிலும் அவர்களை இயல்பாகப் பேசவிட்டு, அதை ஃபோட்டோ ஷுட் எடுத்து, அதை அவர்களின் திருமண ஆல்பத்தில் சேர்த்துத் தருகிறார் புதுவையைச் சேர்ந்த கவிஞரும், ஆவணப்பட இயக்குநரும் புகைப்படக் கலைஞருமான இளவேனில்.

3 டி தொழில்நுட்பத்துடன் தயாராகும் டிஜிட்டல் ஆல்பங்களுக்கு நாளுக்கு நாள் மவுசு கூடிக் கொண்டே இருக்கும் இந்நாளில், திருமண நிகழ்ச்சி தொடங்குவதில் இருந்து, அதாவது பெண் அழைப்பு, தாலி கட்டும் நிகழ்வு, விருந்து என வகைப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் ஆல்பங்களில் சேர்க்கப்பட்டாலும், மணமக்களின் பிரத்யேகப்படங்கள் இணைக்கப்பட்டு, திருமண விழா புகைப்படங்களை ஓர் ஆவணமாகவே தயாரிக்கிறார் இளவேனில். நவீன திருமணப் புகைப்படக் கலை குறித்தும், திருமண புகைப்பட ஆவணங்கள் குறித்தும் அவர் நம்மிடம் கூறியதிலிருந்து...

நவீன திருமண ஆல்பங்களுக்கு வரவேற்பு எப்படி உள்ளது?

சிறப்பான வரவேற்பை டிஜிட்டல் போட்டோ ஆல்பங்கள் பெற்றுள்ளன. பலர் இதை விரும்புகின்றனர். டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்படுவதால் இந்த வகை ஆல்பங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன. இதன் காரணமாக இவை அனைவரையும் கவர்கின்றன.

டிஜிட்டல் ஆல்பங்களுக்கு ஆயுள் எது வரை?

நிச்சயமாக சொல்ல முடியாது. ஒரு சிறந்த ஆல்பத்தை நாங்கள் தயாரிக்கிறோம். அதை பாதுகாக்க வேண்டியது அதனை வைத்திருப்பவர் பொறுப்பு. பத்து ஆண்டுகளோ, இருபது ஆண்டுகளோ நாம் வைத்திருப்பதை பொறுத்து தான் ஆல்பங்களின் ஆயுள். இந்த ஆல்பங்களின் வடிவத்தை சி.டி.யில் பதிப்பித்து தருகிறோம். எப்போது வேண்டுமானாலும் வேறு ஓர் ஆல்பத்தை தயாரித்து விட முடியும். தவிர இந்த நவீன யுகத்தில் நாளை வேறு மாதிரியான தொழில்நுட்பமும் புகைப்படக்கலையில் நிச்சயம் வரக்கூடும்.

மற்றவர்கள் எடுக்கும் திருமண புகைப்படங்களுக்கும், நீங்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

மற்றவர்களைப் போன்றே நானும் புகைப்படம் எடுக்கின்றேன். ஆனால் எனக்கான தனி பாணியை நான் கையாளுகின்றேன். என்னுடைய படத்தை பார்த்தால் இது இளவேனில் புகைப்படம் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியும். திருமண நிகழ்ச்சிகளில் வழக்கமான படங்களையே தான் பலர் எடுப்பார்கள். தாலிகட்டுதல், நலுங்கு வைத்தல் போன்ற சம்பிரதாயங்களை தாண்டி உணர்வு ரீதியாக மனிதர்களின் சந்தோசமான சமயங்களை நான் படம் எடுத்து ஆல்பங்களில் நிரப்பியுள்ளேன். திருமணம் முடிந்ததும், மகளைப்பிரியும் தந்தையின் ஸ்பரிசத்தை, அவர் தன் மகளுக்குப் பிரியா விடை கொடுக்கும் தருணத்தை நான் படம் பிடித்து ஆல்பத்தில் வைக்கும் போது அது அவர்களைக் கவர்கிறது. மற்றபடி டிசைன்கள் எல்லாம் எல்லோரும் செய்வது போன்று தான் செய்கிறேன். ஆனால் தரமாக இருக்கவேண்டும் என்று விரும்புவேன். திருமண சம்பிரதாயங்கள் முடிந்து சில நாட்கள் கழித்து என் புகைப்பட நிலையத்திற்கு மணமக்களை வரவழைத்து வகை, வகையாக போட்டோக்கள் எடுப்பேன். பிறகு அவுட்-டோர் அழைத்துச் சென்று படம் எடுப்பேன். இந்த படங்களை ஆல்பங்களில் முன்னிலைப்படுத்துவேன். இதனை ரசிக்காதவர்களே இருக்கமாட்டார்கள்.

அவுட்-டோர் சென்று படம் எடுப்பது என்றால் என்ன?

திருமண நிகழ்ச்சிகளில் ஒரு சில படங்கள் அமையாது. அத்தகைய இயல்பான நிலை அங்கு இருக்காது. ஒரு சில திருமணங்களில் தாலிகட்டுவதைக் கூட படம் எடுக்க முடியாது. உறவினர்கள் கூடி நிற்பார்கள். அதனால் திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து, மணமக்களை மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஏரிகளின் பக்கத்தில் உள்ள இயற்கை அழகுள்ள இடங்கள் மற்றும் புதுச்சேரியின் கடற்கரைப்பகுதிகள், வொயிட் டவுன் என்று சொல்லப்படுகிற வெள்ளை நகரப்பகுதிகளில் படம் எடுப்பேன். அவர்கள் இயல்பாக நடப்பதையும், சிரிப்பதையும், பேசுவதையும் படம் எடுப்பேன். அவர்களின் இயல்பிலேயே படம் அழகாக வரும். இந்த படங்களை நான் ஆல்பங்களில் சேர்க்கும்போது அதனை பார்க்கும் அவர்கள் நெகிழ்வார்கள். அதைப் போன்று நான் தயாரிக்கும் திருமண ஆல்பங்களில் புகழ்பெற்ற காதல் கவிதைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் இடம் பெறச் செய்வேன். இதுவும் வாடிக்கையாளர்களைக் கவர்கின்றது.

இந்த வகை ஆல்பங்களின் விலை எவ்வாறு இருக்கும்?

விலையொன்றும் அதிகம் இல்லை. மகிழ்ச்சிக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்! இந்த ஆல்பத்தை எத்தனை வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் நமக்கு கிடைப்பது மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றும் கிடையாது. நினைவுகளை அசை போடவும், கடந்த காலத்தை ரசிக்கவும், நிகழ்காலத்தில் நல்ல புரிதலோடு வாழவும் நான் எடுக்கும் போட்டோக்கள் உதவும். ஒரு நல்ல ஆவணத்தை நான் தயாரித்துக் கொடுக்கிறேன். அதற்கு என்ன விலை இருக்க முடியும்? வாழ்க்கைப் பாதையில் நம்மோடு பயணிக்கும் புகைப்படங்கள், நம் வாழ்வின் சாட்சியங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com