திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஸ்ரீ ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமி!

ஆடு, மாடு, கோழி, தங்கம், வெள்ளி ஆகியவற்றை வேண்டுதலுக்காக கோவில்களில் காணிக்கை செலுத்தப்படுவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் ஸ்ரீ ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமி கோவிலில் வேண்டுதல் காணிக்கை

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:54 pm

ஆடு, மாடு, கோழி, தங்கம், வெள்ளி ஆகியவற்றை வேண்டுதலுக்காக கோவில்களில் காணிக்கை செலுத்தப்படுவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் ஸ்ரீ ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமி கோவிலில் வேண்டுதல் காணிக்கை என்பது வித்தியாசமான ஒன்று!

 இங்கு வேண்டுதல் வைக்கும் பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறிய பின்னர் அரிவாளை மட்டுமே காணிக்கையாக செலுத்துகின்றனர் என்பது விசேஷம். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் முத்துலாபுரத்தில் உள்ளது, ஸ்ரீ ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமி கோவில். இங்கு ஆண்டுதோறும் தை மாதம் 3 ஆம் தேதி கோவில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

 சுமார் 15 அடி உயரமுள்ள தொட்டி போல் கட்டப்பட்டுள்ள மேடையின் முன்புறத்தின் இரு புறங்களில் பரிவார தெய்வங்கள் வீற்றிருக்க குதிரையின் மேல் கையில் அரிவாளுடன் பிரம்மாண்டமான உருவத்தில் கருப்பணசாமி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் பின்புறத்தில் உள்ள பிரம்மாண்டமான தொட்டியில் ஆண்டாண்டுகளாக பக்தர்கள் நேர்த்தி காணிக்கையாகச் செலுத்தப்பட்டு வரும் அரிவாள்கள் கொட்டப்பட்டுள்ளன.

 டன் கணக்கில் சேர்ந்துள்ள இந்த அரிவாள்கள் அப்படியே மக்கி மண்ணுக்கு அடியில் சென்றுவிடுகின்றன என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். இந்த ஊரில் உள்ள 3 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே காணிக்கை அரிவாள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 தங்களது வேண்டுதல் நிறைவேறிய பின்னர் தை மாதம் 3 ஆம் தேதி திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் அரிவாள்களை வெளியிலிருந்து வாங்கி வருவதில்லை. இதற்காகவே உள்ள இக்குடும்பத்தினரிடம் அரிவாள் தயாரிக்கும் பணியை ஒப்படைத்து அந்த அரிவாளை மட்டுமே காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். ஏனெனில் வெளியிலிருந்து கொண்டு வரும் அரிவாளை கருப்பணசாமி ஏற்றுக் கொள்ளாது என்பது இவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

 அரிவாள் தயாரிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணி இது குறித்து கூறுகையில்,

 ""தலைமுறை தலைமுறையாக அரிவாள் அடிக்கும் பணியினை எங்கள் குடும்பம் மேற்கொண்டு வருகிறது. பக்தர்கள் தாங்கள் நினைத்ததை நிறைவேற்றித் தரக்கோரி ஸ்ரீ அரிவாள் கோட்டை கருப்பணசாமிக்கு வேண்டுதல் வைப்பர். வேண்டுதல் நிறைவேறிய பின்னர் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாவின் போது காணிக்கையாக அரிவாளை செலுத்துவார்கள். ஒவ்வொருவரின் பிரார்த்தனைக்கு ஏற்ப 3 அடி முதல் 51 அடி வரை அரிவாள்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த அரிவாள் விலை ரூ.75 முதல் ரூ.5 ஆயிரம் வரையில் இருக்கிறது.

 ஊரில் அரிவாள் தயாரிப்பதற்காகவே உள்ள மூன்று குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் எப்போதும் இங்கு இருப்பதில்லை. வேலை விஷயமாக வெளியூரில் வசிக்கும் நாங்கள் திருவிழா தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் ஊருக்கு வந்து விடுவோம். இந்த நாட்களில் பக்தர்களின் தேவைக்கு ஏற்ப அரிவாள்களைத் தயாரித்து திருவிழாவுக்கு முன்னரே கொடுத்து விடுவோம். தை மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் திருவிழாவின் போது பல்வேறு ஊர்களில் இருந்து காணிக்கை செலுத்த முத்துலாபுரத்துக்கு வரும் பக்தர்கள் அன்று இரவு 10 மணிக்கு அரிவாளைப் பெற்று தங்களது காணிக்கையை ஸ்ரீ ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமிக்கு செலுத்தி விடுவார்கள்.

 ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் நடைபெறும் இந்த திருவிழாவின் போது பக்தர்கள் செலுத்தி வரும் அரிவாள்கள் டன் கணக்கில் இங்கு சேரும். இருந்தபோதிலும் இதில் ஒரு சிறு துரும்பினைக் கூட யாரும் எடுத்துச் செல்வதில்லை. வெயிலிலும், மழையிலும் நனைந்து அப்படியே மண்ணுக்குள் மக்கிப் போகிறது. மலைபோல் குவிந்து கிடக்கும் அரிவாள்களே இதற்கு சாட்சியாக உள்ளது'' என்றார்.

 படங்கள்: ஜி.விமல்கண்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.