/

இலக்கை நோக்கி இறகுப்பந்து!

விளையாட்டுகளில் இருவகை உண்டு. ஒன்று கேரம், செஸ் போன்ற விளையாட்டுகள். இருந்த இடத்திலேயே அறிவை உபயோகித்து, விளையாடக்கூடியவை. மற்றொன்று, உடலுக்கும்,மனத்திற்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் கால் பந்து, க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:41 am

விளையாட்டுகளில் இருவகை உண்டு. ஒன்று கேரம், செஸ் போன்ற விளையாட்டுகள். இருந்த இடத்திலேயே அறிவை உபயோகித்து, விளையாடக்கூடியவை. மற்றொன்று, உடலுக்கும்,மனத்திற்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் கால் பந்து, கூடைப் பந்து, இறகுப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள்.

இறகுப் பந்து விளையாட்டுக்களில், எதிராளியின் பந்து எந்தப் பக்கம் செல்லும் என்பதை யூகித்து எதிர்கொள்ள வேண்டும். ஒரே இடத்தில் நின்று கொண்டு விளையாட இயலாது. புறச்சூழ்நிலைகளில் கவனம் செலுத்தாமல் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தினால்தான் வெற்றிக்கனியைப் பறிக்க இயலும்.

இந்த இறகுப்பந்து விளையாட்டில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒய்.ஆர்.டி.வி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இருவர், தேசிய அளவிலான இறகுப்பந்து குழுப்போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்கள்.

அப்பள்ளியில் படிக்கும் எஸ்.பவுன்சரத், ஆர்.ராஜ்விஷ்ணு ஐந்து பேர் கொண்ட குழுவில் இடம்பெற்று

தங்கப் பதக்கம் வென்றுள்ளார்கள். இந்த வெற்றி குறித்து அந்த இரு மாணவர்களிடம் கேட்டபோது:

இறகுப்பந்து விளையாட்டினை எந்த ஆண்டு விளையாடத் தொடங்கினீர்கள்?

2005-ம் ஆண்டு இறகுப்பந்து விளையாட்டில் ஆர்வம் வந்தது. இதையடுத்து, பள்ளி நிர்வாகம் ஒத்துழைப்புடன் பெற்றோர் அனுமதியுடன் பயிற்சி பெறத்தொடங்கினோம்.

முதன் முதலில் எப்போது போட்டியில் கலந்து கொண்டீர்கள்?

சிவகாசியில் உள்ள ஏ.ஜெ. உள்ளரங்கில், மாவட்ட இறகுப்பந்துக் கழகம் நடத்திய மாவட்ட அளவிலான போட்டியில், 10 வயதுக்குள்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றோம். பின்னர் மதுரையில் நடைபெற்ற மாவட்டங்களுக்கிடையிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றோம். இதையடுத்து பல்வேறு மாவட்ட அளவிலான போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்றோம். சில சமயம் வெற்றி வாய்ப்பினை இழந்தபோதும், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டோம். மேலும் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. ஆனால் தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் பெற்றது, ஒரு மறக்க முடியாத அனுபவம். இதனால் இந்த விளையாட்டின் மீது மேலும் ஆர்வம் அதிகரித்துவிட்டது.

தேசிய அளவிலான போட்டியில் பங்குபெறும் வாய்ப்பு எவ்வாறு கிடைத்தது?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விருதுநகரில் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டி நடைபெற்றது. அதில் தேர்வானோம். பின்னர் தர்மபுரியில் மாநில அளவிலான தகுதிப்போட்டி நடைபெற்றது. அதில் சிறப்பாக விளையாடியதால், 5 பேர் கொண்ட தமிழக அணியில் இடம் பெற்றோம். தமிழக அணிக்காக விளையாடும்போது, கூடுதல் பொறுப்புடன் விளையாடத் தீர்மானித்தோம்.

தேசிய அளவிலான போட்டி எங்கு நடந்தது?

4-வது தேசிய அளவிலான கிராமப்புற விளையாட்டு. இதற்கு "பஞ்சாயத்து யுவகிருதா அளெர் கேல் அபியான்' என்று பெயர். இதில் 16 வயதுக்குள்பட்டோர் பிரிவில் தமிழக அணிக்காக விளையாடினோம். போட்டிகள் பிப்ரவரி 8, 9 தேதிகளில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் எந்த அணியுடன் மோதினீர்கள்?

உத்தரகாண்ட் மாநில அணியுடன் மோதினோம். வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை வைத்துத்தான் விளையாடினோம். 5 பேர் கொண்ட குழுப்போட்டி என்பதால் அனைவரும் ஒரே நோக்கத்தில்தான் இருந்தோம்.

முழு ஈடுபாடு, வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம், கூட்டு முயற்சி ஆகியவையே தமிழக அணிக்கு தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்தது எனலாம்.

தேசிய அளவிலான போட்டியில் விளையாடும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

பொதுவாக எந்த போட்டியையும் நாங்கள் விளையாட்டாக எடுத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு போட்டியின்போதும் அதை ஒரு பெரிய சவாலாகவே நினைக்கிறோம். அதில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உண்டு.

பல விளையாட்டுகளில் தோல்வி அடைந்தாலும்,அது எங்கள் விளையாட்டை பாதிக்காதபடி பார்த்துக் கொள்வோம். ஏனெனில் தோல்வி அடைந்துவிட்டோம் என எண்ணத் தொடங்கிவிட்டால், அதிலிருந்து மீள்வது கடினம். ஒருமுறை வெற்றி வாய்ப்பை இழந்து விட்டால் கூடுதல் கவனம் செலுத்தி விளையாடுவோம். தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கியது மிகவும் மகிழ்ச்சி. அதே நேரத்தில் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளோம் என்று பெருமையாகவும் இருக்கிறது.

எதிர்காலத்தில் பவுன்சரத் தணிக்கையாளராகவும், ராஜ்விஷ்ணு திரைப்பட இயக்குனராகவும் வேண்டும் என லட்சியத்தை நிர்ணயித்துள்ளனர். அதிலும் வெற்றி பெற வாழ்த்தினோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.