காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

சூரியனுக்கு தேர்! சூர்யாவுக்கு கார்!!

அதிகாலை கிழக்கில் இருந்து கிளம்பும் சூரியன் அந்திப் பொழுதில் மேற்கை அடைகிறது. புராண கதைகளில் 7 குதிரைகளைப் பூட்டிய தேரில் சூரியன் பவனி வந்து இதை நடத்தி வருவதாகக் கூறப்படுவது உண்டு. குதிரைகளின் சக்தியா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:16 am

அதிகாலை கிழக்கில் இருந்து கிளம்பும் சூரியன் அந்திப் பொழுதில் மேற்கை அடைகிறது. புராண கதைகளில் 7 குதிரைகளைப் பூட்டிய தேரில் சூரியன் பவனி வந்து இதை நடத்தி வருவதாகக் கூறப்படுவது உண்டு. குதிரைகளின் சக்தியால் சூரியன் இந்தச் சாதனையைச் செய்வதாக கதை சொல்கிறது.

அந்த சூரியனுக்கு வாகனம் தேர் என்றால் குதிரை திறனால் குறிக்கப்படும் இன்ஜினைக் கொண்டு மின்னல் என பாய்ந்து தேசிய அளவிலான பந்தயத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ள திண்டுக்கல் சூர்யாவுக்கு வாகனம் கார். கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரில் தேசிய அளவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் முதலிடம் பெற்ற சூர்யாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். ரேஸ் கார் மோகம் குறித்து தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார் சூர்யா.

கார் பந்தயத்தின் மேல் ஆசை எப்படி வந்தது?

6 வயது குழந்தையாக இருக்கும் போது காரில் வெளியே கூட்டிச் செல்வார்கள். அப்போது ஒவ்வொரு காரின் பெயரையும் அப்பாவிடம் கேட்டுக் கொண்டே காரில் பயணம் செய்வேனாம். கார்களின் பெயர் தெரிந்த உடன் எதிரே கார்கள் வரும் போது அது எந்த கார் என்பதை தூரத்திலிருந்தே சொல்லி விடுவேன்.

கார்களின் மேல் எனக்குள்ள ஆர்வத்தைக் கண்ட அப்பா 6 வயதிலேயே காரை ஓட்ட கற்றுக் கொடுத்தார். பிரயாணத்திற்காக நாம் பயன்படுத்தி வரும் கார்களை ஓட்ட கற்றுக் கொண்டேன். சாலைகளில் ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் கார்களை ஓட்ட முடியாது. எனவே ரேஸ்காரினை ஓட்ட வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

சாதாரண காரை இயக்குவதற்கும் ரேஸ் கார் ஓட்டுவதற்கும் என்ன வித்தியாசம்?

சாதாரணமாக நாம் பயன்படுத்தும் காரில் வேகத்தை மாற்றுவதற்கு கியரை உபயோகப்படுத்துவோம். ரேஸ் காரில் கியர் என்பது கிடையாது. அது தானியங்கி முறையில் செயல்படும். சிறு அலுங்கல் குலுங்கல் கூட இல்லாத கார்களை நாம் பயன்படுத்துகிறோம்.

ஆனால் ரேஸ் கார் என்பது அதிவேகமாக செல்லக் கூடிய ஒரு கட்டை வண்டி என்று தான் சொல்ல வேண்டும். நாம் பயன்படுத்தி வரும் சொகுசு காரில் எவ்வளவு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தாலும் நமக்கு சிறு அலுப்பு கூட இருக்காது.

இந்த ரேஸ் காரை இயக்க நல்ல உடல் பலம் தேவை. இந்த வகையான கார் ஓடும் போது இரண்டு தோள்பட்டைகளும் அதிரும். இந்த அதிர்வுகளை சமாளிக்க நல்ல உடல்பயிற்சியினை நாள்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

சாதாரண கார்களை ஓட்டுவதற்கு அதன் மேல் ஆர்வம் இருந்தால் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். ரேஸ் காரை ஓட்டுவதற்கு ஆர்வத்துடன் உடல் பலம், மனோ பலம் இரண்டும் அவசியம். அத்துடன் இதற்கு ஆகும் செலவை சமாளிப்பதற்குப் பொருளாதார வசதி என்பது முக்கியம்.

ரேஸ் கார் ஓட்டுவதற்கான பயிற்சி குறித்து...

தமிழ்நாட்டில் கோயமுத்தூர் நகரிலும், ஆந்திர மாநிலத்தில் ஹைதரபாத் நகரிலும் இதற்கான களத்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். இதைத் தவிர முன்னாள் கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூ மேக்கர் ஜெர்மனியில் நடத்தி வரும் பயிற்சி பள்ளியிலும், பிரெசில் மற்றும் மலேசிய நாட்டிலும் தனியாக பயிற்சி எடுத்துள்ளேன்.

கடுமையான உடல் பயிற்சி இருந்தால் மட்டுமே (குறிப்பாக பளு தூக்குதல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்) ரேஸ் காரின் அதிர்வினைத் தாங்கிட முடியும். இல்லையென்றால் சமயத்தில் ரத்தக் கட்டு, நெஞ்சில் வலி ஏற்படக் கூடும்.

இதைத் தவிர பயிற்சியின் களத்தில் செய்யப்படும் சிறுசிறு தவறுகளைச் சரி செய்வதற்காக வீடியோ பதிவு எடுத்து அதைக் கொண்டு எந்தெந்த இடங்களில் தவறுகள் செய்யப்பட்டுள்ளன் என்பதை அறிந்து அதை சரி செய்யும் பயிற்சியையும் எடுக்கிறேன். ஏனெனில் போட்டியின் போது ஒவ்வொரு வினாடியும் மிக முக்கியமானதாகும்.

பெற்ற பரிசுகள் பற்றி...

ஆண்டுதோறும் ஜே.கே.டயர்ஸ் ரோலக்ஸ் ரூர்க்கி கார்பந்தயத்தை நடத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டியில் 115 புள்ளிகளைப் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றேன். இதற்கு முன் நடந்த போட்டிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளேன். இதைத் தவிர அவ்வப்போது நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்று பரிசு பெற்றுள்ளேன்.



எதிர்கால லட்சியம் என்ன?

எனது தந்தையார் திண்டுக்கல்லில் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரியின் இயக்குநர்களில் ஒருவராக இருந்து அதனை நடத்தி வருகிறார். இருந்தபோதிலும் என்னை ஓர் ஐ.பி.எஸ். அதிகாரியாக உருவாக்க வேண்டும் என்பது அவரது ஆசை.

தற்போது 8ஆம் வகுப்பு தேர்வினை நான் எழுதியுள்ளதால் உயர்கல்வி குறித்த எண்ணம் எதுவும் இப்போது என்னிடம் இல்லை. ரேஸ் கார் விளையாட்டைத் தவிர பள்ளி அளவிலான கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் விளையாடி வருகிறேன்.

விளையாட்டினால் எனது படிப்பு பாதிக்கப்படுவதில்லை ஏ ப்ளஸ் தரவரிசையில் தான் எனது கல்வி உள்ளது. தேசிய அளவில் கார் ரேஸ்களில் சாதனையைப் பதிவு செய்து பின்னர் சர்வதேச அளவிலான பந்தயங்களில் முத்திரை பதிக்க வேண்டும் என்பது தற்போதைய நோக்கம். சர்வதேச அளவில் திண்டுக்கல் நகரின் பெயரை கொண்டு செல்ல சூர்யாவை நாம் வாழ்த்துவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.