சேவை மனப்பான்மை உள்ளவர்கள் தேவை!
பிறருக்கு உதவி செய்வதற்குப் பலருக்கு மனம் இருப்பதில்லை. மனம் இருந்தாலும் நேரம் இருப்பதில்லை. அவரவர் வேலையைப் பார்க்கவே நேரம் இல்லாமல் அவசர அவசரமாகப் பறந்து


பிறருக்கு உதவி செய்வதற்குப் பலருக்கு மனம் இருப்பதில்லை. மனம் இருந்தாலும் நேரம் இருப்பதில்லை. அவரவர் வேலையைப் பார்க்கவே நேரம் இல்லாமல் அவசர அவசரமாகப் பறந்து கொண்டிருக்கும் இக்காலத்தில், பிறருக்கு உதவி செய்வதையே வாழ்க்கையாக்கிக் கொண்டிருக்கின்றனர் ஸ்ரீதரும் அவருடைய மனைவி பவானியும்.
சென்னை கொளத்தூருக்கு அருகில் உள்ள விநாயகபுரத்தில் மன வளர்ச்சிகுன்றியவர்களுக்கான "சமர்ப்பணா'
தன்னார்வத் தொண்டு இல்லம் ஒன்று உள்ளது. அதை கடந்த 18 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள் ஸ்ரீதரும் அவருடைய மனைவியும்.
அவர்களுடைய வீடும் அந்த மனவளர்ச்சி குன்றியோரின் இல்லத்தில்தான். இவர்களுடைய மகன் நரேந்திரன் கல்லூரி மாணவர். அவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் இந்த இல்லத்தில்தான். ""இங்குள்ள மனவளர்ச்சி குன்றியவர்களும் நாங்களும் வேறு வேறு அல்ல. அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தாம்'' என்கிறார் பவானி.
""1989 ஆண்டில் இருந்து நான்கு ஆண்டுகள் சென்னை தரமணியில் உள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்காகச் செயல்படும் "ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு' நிறுவனத்தில் நான் சிறப்பு ஆசிரியை. என் கணவர் ஸ்ரீதர் சிறப்புப் பயிற்சியாளர். அப்போது பல மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்களைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர் காலையில் அவர்களை அழைத்து வந்து இல்லத்தில் விட்டுவிட்டு, மாலையில் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் இல்லங்கள் நிறைய இருக்கின்றன. பெற்றோரின் பராமரிப்பில் அந்தக் குழந்தைகள் இருப்பார்கள்.
ஆனால் ஓர் இருபது - முப்பது வருடங்கள் சென்றுவிட்டால் அந்தக் குழந்தைகள் பெரியவர்களாகிவிடுவார்கள். பெற்றோரோ தளர்ந்துவிடுவார்கள். அவர்களுக்கும் நோய், இயலாமை வந்துவிடும். வருமானமும் குறைந்துவிடும். அல்லது இல்லாமற் போய்விடும். அப்போது மனவளர்ச்சி குன்றிய மகனையோ, மகளையோ வைத்துக் கொண்டு அந்தப் பெற்றோர் படும் மனத்துயரம் இருக்கிறதே... அதை எப்படிச் சொல்வது? எனவே வயது வந்த மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லத்தை ஆரம்பித்தால் என்ன? என்று நினைத்தோம்.
1995 இல் கொளத்தூரில் டீச்சர்ஸ் காலனியில் 15 பேரை வைத்து வாடகைக் கட்டிடத்தில்தான் ஆரம்பித்தோம். எந்தவிதமான பொருளாதாரப் பின்னணியும் இல்லாமல் நன்கொடைகளை நம்பி நாங்கள் செயல்பட்டதை அறிந்து 1998 மார்ச் 30 ஆம் தேதி தினமணி நாளிதழின் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக எங்களைப் பற்றி வெளியிட்டார்கள். அதை இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்.
அதற்குப் பின்பு நன்கொடைகள் குவிந்துவிட்டன. சொந்தக் கட்டடம் கட்டும் அளவுக்கு நன்கொடை சேர்ந்தது. 2001 இல் இப்போது செயல்படும் சொந்தக் கட்டடத்துக்கு
மாறினோம்.
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லம் என்றாலும் அவர்கள் பிற குழந்தைகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தோம். அதற்காக ஆதரவற்ற குழந்தைகளையும் இல்லத்தில் சேர்த்துக் கொண்டோம்.
தாயோ, தகப்பனோ இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த, வறுமையில் வாடக் கூடிய குழந்தைகளைச் சேர்த்துக் கொண்டோம். மனவளர்ச்சி குன்றியவர்களை அவர்களுடைய ஆயுட்காலம் வரைக்கும் பராமரிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். அதற்காகத்தான் செயல்படுகிறோம். இங்கு லக்ஷ்மி என்ற 74 வயது மனவளர்ச்சி குன்றிய மூதாட்டி இருக்கிறார். மொத்தம் 44 பேர் இருக்கின்றனர்.
மனவளர்ச்சி குன்றியவர்களைப் பராமரிப்பது சாதாரண விஷயம் இல்லை. அவர்களைக் குளிக்க வைப்பது, டாய்லெட் அழைத்துச் செல்வது, தலைமுடியை வெட்டி விடுவது உட்பட எல்லாவற்றையும் நாங்களே செய்கிறோம். அவர்களுக்காகச் சமைப்பதும் நாங்களே. இதில் படிக்க முடிந்த குழந்தைகளை மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கிறோம். அவர்கள் சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக பேப்பர் கப் செய்வது, மெழுகுவர்த்தி செய்வது போன்ற வேலைகளைச் சொல்லிக் கொடுக்கிறோம்.
நன்கொடைகளைப் பணமாகக் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். பிறந்தநாள், திருமண நாள் போன்றவற்றின் போது நேரே இங்கு வந்து ஒருநாள் அல்லது ஒருவேளை உணவுச் செலவுகளை ஏற்றுக் கொண்டு இங்கே கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள். இந்த இல்லத்தை நடத்த மாதத்துக்கு ரூ.1 லட்சம் வரை ஆகிறது. ஆனால் நாங்கள் முழுக்க முழுக்க நன்கொடைகளை நம்பியே நடத்தி வருகிறோம்.
இங்கு நன்கொடை தருவதற்காக வருபவர்கள் அவர்களுடைய வீட்டருகே மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் இருப்பதாக எங்களிடம் சொல்வார்கள். அவர்கள் சொல்லும் இடத்துக்குச் சென்று நாங்கள் பார்ப்போம். அதற்குப் பிறகு இங்கு சேர்த்துக் கொள்வோம்.
இந்த இல்லத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். எங்களுக்கும் வயதாகி வருவதால் எங்களுக்கு உதவி செய்ய சேவை மனப்பான்மை உள்ளவர்கள் யாராவது வரமாட்டார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த இல்லம் தவிர, சிறுவாபுரியில் மனவளர்ச்சி குன்றிய முதியவர்களுக்கான இல்லம் ஒன்றைத் தொடங்கி நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...