/

இரண்டு கைகள் நான்கானால்...!

இறகுப்பந்து விளையாட்டு என்பது, பந்து எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறதோ, அந்தப் பகுதிக்கு ஓட வேண்டும். எப்படி பந்தை அடித்தால் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை உடனடியாக முடிவு எடுத்து விளையாட வேண்டும்.

News image
Updated On :6 ஏப்ரல் 2013, 5:18 am

இறகுப்பந்து விளையாட்டு என்பது, பந்து எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறதோ, அந்தப் பகுதிக்கு ஓட வேண்டும். எப்படி பந்தை அடித்தால் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை உடனடியாக முடிவு எடுத்து விளையாட வேண்டும். எனவே, இந்த விளையாட்டை உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும் விளையாட்டு எனக் கூறலாம்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பள்ளியில் ஒன்பதாவது படிக்கும் ஆர்.அஸ்வினி காந்திமதி, எஸ். சமீதாதேவி ஆகிய மாணவிகள் இறகுப்பந்து விளையாட்டில் தமிழக அணியில் 5 பேரில் இருவராக இடம்பிடித்து, தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர். அவர்கள் தங்களின் வெற்றி அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டதிலிருந்து....

ஆர்.அஸ்வினி காந்திமதி

நான் முன்றாம் வகுப்பு படிக்கும்போது கோடை விடுமுறையில் சிவகாசியில் உள்ள ஏ.ஜெ. உள்விளையாட்டு அரங்கில் 20 நாள் இறகுப்பந்து பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் எனது தந்தை டி.ரவிச்சந்திரன், தாய் ரூபலட்சுமி ஆகியோர் சேர்த்துவிட்டனர். அந்தப் பயிற்சி முகாமில் சிறப்பாக விளையாட்டியதாகக் கூறி, தொடர்ந்து பயிற்சி அளித்தால், இந்த விளையாட்டில் வெற்றிபெற இயலும் எனது பெற்றோர்களிடம் பயிற்சியாளர் அபிலாஷ் கூறினார். அதன்படி காலையும் மாலையும் பயிற்சி மேற்கொண்டேன். பயிற்சி பெறப் பெற எனக்கும் விளையாட்டில் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விருதுநகர் மாவட்டப் பிரிவு, மாவட்ட அளவிலான இன்டர் ஸ்கூல் சாம்பியன்ஷிப் போட்டிகளை விருதுநகரில் 7.9.2009 இல் நடத்தியது. அப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெற்றேன். பின்னர் 2009 நவம்பர் 25 முதல் 27ஆம் தேதி வரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைகழக வளாகத்தில், மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையிலான சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது. அதில் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றேன். இதைத் தொடந்து பல மாநில போட்டிகளிலும், மாவட்ட போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளேன்.

2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 36-வது ஜூனியர் தேசிய இறகுப்பந்துப் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பரிசு எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் 2012, டிசம்பர் மாதம் பாட்னாவில் நடைபெற்ற 26வது சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றேன். பரிசு எதுவும் கிடைக்கவில்லை. தோல்வி என்பது வெற்றியின் படிக்கட்டுகள் என எண்ணி கடுமையாகப் பயிற்சி பெற்றேன். பின்னர், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தகுதித்தேர்வுப் போட்டியில் வெற்றி பெற்று தமிழக அணியில் இடம்பிடித்தேன். 2013 ஜனவரி 21 முதல் 24ஆம் தேதி வரை ஒளரங்காபாத்தில் மஹாராஷ்டிர மாநில இறகுப்பந்துக் கழகம், 5வது தேசிய ரூரல் டெவலப்மென்ட் (பைகா) தேசியப் போட்டியை நடத்தியது. இதில் 16 வயதுக்குட்பட்டோர் மகளிர் பிரிவில் தமிழகத்திற்காக விளையாடினேன். இதில் தமிழக அணியில் இடம்பெற்றிருந்த 5 பேர் கொண்ட குழு பங்கேற்றது. நானும், சிவகாசி சமீதாதேவியும் இரட்டையர் பிரிவில், கர்நாடக மாநிலத்தோடு விளையாடி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றோம்.

விளையாட்டில் எப்போதும் எதிராளிகளைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. அவர்களும் திறமையானவர்கள்தான்.

கர்நாடக மாநில அணியை ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வமும், துடிப்பும் இருந்தது. தமிழகத்துக்காக விளையாடுகிறோம் என்ற கவனமும் இருந்தது. தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஆக்கிரமித்திருந்தது.

போராடினோம்; வெற்றி பெற்றோம். வெற்றிபெற்று தங்கப்பதக்கம் பெறும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்து. இது உழைப்புக்கு கிடைத்த பரிசு என சந்தோஷப்பட்டேன்.

எஸ். சமீதாதேவி

நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது, இறகுப்பந்து விளையாட்டில் பயிற்சி பெறத் தொடங்கினேன். எனது தந்தை கே.சங்கர். தாய் ஹேமலதா ஆகிய இருவரும் இறகுப்பந்து விளையாடுபவர்கள். எனவே, எனக்கும் பயிற்சி அளித்தார்கள். 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி, விருதுநகர் மாவட்ட பேட்மிண்டன் அசோசியேஷன் சார்பில் விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் 10 வயதுகுள்பட்டோர் பிரிவில், ஒற்றையர் போட்டியில் முதலிடம் பெற்றேன். பின்னர், அதே ஆண்டு மே 23 முதல் 31 ஆம் தேதி வரை கோயம்புத்தூரில் நடைபெற்ற 10 வது தமிழ்நாடு ஜூனியர் ஸ்டேட் ரேங்கிங் பேட்மிண்டன் டோர்னமென்ட் என்ற மாநில அளவிலான போட்டியில் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெற்றேன்.

2010-ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்றேன். 2013 ஜனவரி 21-24 ஆம் தேதி வரை மகாராஷ்டிர மாநிலம், ஒளரங்காபத்தில் நடைபெற்ற, இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் 5வது தேசிய அளவிலான ரூரல் டோர்னமென்ட் போட்டியில் (பைகா) நானும் அஸ்வினி காந்திமதியும் இணைந்து தமிழக அணிக்காக விளையாடி இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றோம்.

இறுதி போட்டியில் கர்நாடகா மாநில அணியுடன் விளையாட்டினோம். இருவரும் இணைந்து வெற்றிக்கு வழிவகுத்தோம். முதலிடம் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் விளையாடினோம். எதிராளிகளின் பந்தை எப்படி எதிர்கொள்வது என இருவரும் பேசிக்கொள்வோம். பயிற்சியாளர் அளித்த முறைப்படி விளையாட்டி வெற்றி பெற்றோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.