பிளஸ் டூ முடித்தவுடன் அடுத்து என்ன படிப்பது? விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்குமா? விரும்பிய படிப்பு கிடைக்குமா? அப்படிக் கிடைக்காவிட்டால் வேறு எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது? இப்படி ஏகப்பட்ட குழப்பங்களுடனும், எதிர்பார்ப்புகளுடனும் மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் நேரம் இது.
""என்ன படிப்பு படிக்கலாம்? என்று மாணவர்கள் திட்டமிடுவதற்கு முன்பு, கல்லூரி படிப்பு முடிந்ததும் எதிர்காலத்தில் வாழ்க்கையில் என்ன பண்ண வேண்டும்? என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்'' என்கிறார் விக்ரம் ராமகிருஷ்ணன்.
"பாத்வேஸ் புரோகிராம்' என்ற நிறுவனத்தின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு ஆலோசனைகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளித்து வரும் அவரிடம்
பேசினோம்.
""இன்று பெரும்பாலான மாணவர்களின் கனவு டாக்டராவது அல்லது இன்ஜினியராவது என்றே இருக்கிறது. எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைக்காவிட்டால் நொந்து போகிறார்கள். எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைக்காவிட்டாலும், மருத்துவத்துறையில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
நர்ஸிங் படிக்கலாம். மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் வேலை செய்ய
படிக்கலாம்.
மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்ய படிக்கலாம். உதாரணமாக எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களில் வேலை, அந்தக் கருவிகளைப் பயன்படுத்துவது, பழுது பார்ப்பது என்று நிறைய வேலைகள்
உள்ளன.
பிசியோ தெரபி படிக்கலாம். ஹெல்த் இன்சூரன்ஸ் இன்று வளர்ந்து வரும் ஒரு துறை. அதற்கு மருத்துவம் படிக்க வேண்டிய தேவையே இல்லை. பி.பார்ம் படித்தால் மருந்துக் கம்பெனிகளில் வேலை கிடைக்கும். மெடிக்கல் ரெப்ரஸன்டேட்டிவ் வேலை செய்யலாம். டாக்டர் தவிர்த்து நூற்றுக்கணக்கான வேலைகள் மருத்துவத்துறையில் உள்ளன. எனவே எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைக்கவில்லையென்றால் மாணவர்கள் வருந்த வேண்டியதில்லை. அதுபோல என்ஜினியரிங் படித்துவிட்டு என்ன செய்யப் போகிறோம் என்ற தெளிவுடன் இருந்தால் அதற்கேற்ற படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடியும். கட்டுமானத்துறையில் வேலை செய்ய விரும்புபவர்கள் சிவில் இன்ஜினியரிங் படிக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புபவர்கள் நல்ல கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும். அப்போதுதான் வேலை கிடைக்கும். மேலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை மிக வேகமான மாற்றங்கள் நிறைந்த துறை. மாணவர்கள் பட்டப் படிப்பை முடிப்பதற்குள்ளேயே பல புதுவிதமான மென்பொருட்களும், கண்டுபிடிப்புகளும் கம்ப்யூட்டர் துறையில் வந்துவிடுகின்றன. எனவே மாணவர்கள் எப்போதும்
"அப் டேட்டட்' ஆக இருக்க வேண்டும்.
நிறைய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பட்ட தொழிற்சாலைகளில் இன்ஜினியரிங் படிக்காதவர்களும் கூட நிர்வாகப் பணிகளில் வேலை செய்யலாம். மார்க்கெட்டிங் பிரிவிலும் வேலை செய்யலாம். மனித வள மேம்பாட்டுப் பிரிவிலும் வேலை செய்யலாம். அதுமட்டுமல்ல, இன்ஜினியரிங் படிப்பிலேயே ஏரோ நாட்டிகல் இன்ஜினியரிங், மரைன் இன்ஜினியரிங் போன்றவற்றைப் படித்தால் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன.
மருத்துவம், என்ஜினியரிங் துறைகளைத் தவிர்த்து வேறு பல வேலை வாய்ப்புகள் நிறைந்த படிப்புகள் உள்ளன. வருங்காலத்தில் நிறைய ரீ டெய்ல் மால்கள் வரப் போகின்றன. ரீடெய்ல் மேனேஜ்மென்ட் சார்ந்த படிப்புகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு உள்ளது. பிபிஏ, பி.காம் போன்ற படிப்புகளுக்கும் ரீடெய்ல் மால்களில் வேலை வாய்ப்புகள்
உள்ளன.
ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கும் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது. வெறும் சமையல் என்ற நிலையில் மட்டுமல்லாமல், ஹோட்டல் மேனேஜ்மென்ட்டின் தன்மை மாறிவிட்டது. "ஹாஸ்பிட்டாலிட்டி' தன்மை ஹோட்டல் மேனேஜ்மென்ட்டுக்கு வந்துவிட்டது. கடந்த ஓராண்டுக்குள் சென்னையில் ஐந்து புதிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வந்துவிட்டன. இவை போன்ற 5 நட்சத்திர ஹோட்டல்களில் வேலை செய்ய நல்ல திறமையான ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். சம்பளமும் அதிகமாகத் தருகிறார்கள்.
வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள துறை அனிமேஷன் துறை. கார்ட்டூன் படங்களில் மட்டுமல்லாமல், சினிமாக்களிலும், தொலைக்காட்சியிலும், விளம்பரங்களிலும் இப்போது அனிமேஷன் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கல்வி சிடி தயாரிப்பதற்கும் கூட அனிமேஷன் படிப்பு அவசியம்.
வேலை வாய்ப்புகள் நிறைந்த மற்றொரு துறை ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட். இப்போது நிறைய கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. டிக்கெட் டிசைன் பண்ணுவதிலிருந்து, கிரிக்கெட் போட்டிகளைப் படம் எடுக்க ஏற்பாடு செய்வது வரை எல்லாம் செய்வதுதான் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட். விளையாட்டில் ஆர்வம் உள்ள ஒருவர் விளையாட்டு வீரராக ஆக முடியாவிட்டாலும் கூட, ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் துறையில் ஈடுபட முடியும்.
அதுபோல தொழில்,வணிகத் துறையில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. பிபிஏ, பி.காம், சிஏ படித்தவர்களுக்கு தொழில் வணிகத்துறையில் வேலை வாய்ப்புகள் உள்ளன. பிசினஸ் துறையில் உயர்நிர்வாகிகளுக்கு வேலை உள்ளது. அதுபோல நடுத்தர அளவில் அதாவது மிடில் மேனேஜ்மென்ட் வேலை வாய்ப்புகளும் உள்ளன. அதனால்தான் இப்போது என்ஜினியரிங் படித்த பலர் எம்பிஏ படிக்கிறார்கள்.
மொழி படிப்பவர்களுக்கு வேலை கிடைக்காது என்பது பெரும்பாலோனோரின் நம்பிக்கை. சீன மொழி, ஜப்பானிய மொழி, ஜெர்மானிய மொழி, அரபு மொழிகள் படிப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. சீனா, ஜப்பான், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பல நிறுவனங்கள் இந்தியா உட்பட உலகநாடுகள் பலவற்றில் உள்ளன.
எனவே பிளஸ் டூ முடித்தவுடன், மாணவர்கள் தமக்கு ஆர்வமுள்ள துறைகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்'' என்கிறார் விக்ரம் ராமகிருஷ்ணன்.