நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இந்திய அரசியலை மாற்றிய பெங்களூர் லால்பாக்

பெங்களூருவில் 240 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள லால்பாக் பொட்டானிகல் கார்டன் மைசூரை ஆண்ட ஹைதர் அலி அமைத்ததாகும்

News image
Updated On :18 ஆகஸ்ட் 2013, 3:26 am

அ. குமார்

பெங்களூருவில் 240 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள லால்பாக் பொட்டானிகல் கார்டன் மைசூரை ஆண்ட ஹைதர் அலி அமைத்ததாகும். பின்னர் அவரது மகன் திப்பு சுல்தான் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் காபூர், பெர்ஷியா, மொரிஷியஸ், துருக்கி போன்ற நாடுகளிலிருந்து வரவழைத்த அபூர்வமான மலர் தாவரங்கள் லால்பாக்குக்கு மேலும் அழகைச் சேர்த்தது.
 ஆங்கிலேயர்கள் காலத்தில் சர் மார்க் கப்பன் மற்றும் கிளேக்ஹாரன் போன்ற பிரிட்டிஷ் அதிகாரிகள் லால்பாக்கை மேலும் நவீன முறையில் மேம்படுத்தினர். தற்போதுள்ள கர்நாடக சட்டமன்ற கட்டடமான விதானசவுதாவுக்கு எதிரில் உள்ள கர்நாடக உயர்நீதிமன்ற கட்டடத்துக்கு பின்புறமுள்ள பூங்காவுக்கு கப்பன்பார்க் என சர் மார்க் கப்பன் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது.
 1888 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தோட்டக்கலை நிபுணரான ஜான் கேமரூன், லால்பாக்கில் மலர் கண்காட்சி நடத்துவதற்காக "கண்ணாடி மாளிகை' ஒன்றைக் கட்டத் திட்டமிட்டார். இது 1851 ஆம் ஆண்டு லண்டன் ஹைடல் பார்க்கில் கட்டப்பட்டிருந்த கிரிஸ்டல் பேலûஸ அடிப்படையாக வைத்து இந்த கண்ணாடி மாளிகை அமைக்கத் திட்டமிடப்பட்டது. (கிரிஸ்டல் பேலஸ் பின்னர் அங்கிருந்து சைடன்ஹாம் மலைமீது மாற்றியமைக்கப்பட்டு 1936 ஆம் ஆண்டில் தீ விபத்தில் அழிந்து போனது) அதை அடிப்படையாக வைத்துக் கட்டத் துவங்கிய கண்ணாடி மாளிகைக்கு வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் அடிக்கல் நாட்டினார். 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த மாளிகை முழுக்க முழுக்க இரும்பு, கண்ணாடி கொண்டு கட்டப்பட்டதாகும். இதற்கு நான்கு கதவுகள் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றும் லால்பாக் தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள நான்கு நுழைவு வாயில்களுக்கு செல்லும் வகையில் பாதைகள் அமைக்கப்பட்டன. கண்ணாடி மாளிகை எதிரே பாண்ட் ஸ்டாண்ட் ஒன்றும் வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டது.
 இந்தக் கண்ணாடி மாளிகை கட்டப்பட்டு நூறாண்டுகள் பூர்த்தியான போது 1989 ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவில் விழா நடத்தப்பட்டது. கர்நாடக மாநிலத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் கண்டு களிக்கும் சுற்றுலா தலங்களில் லால்பாக் இடம் பெற்றது. ரவீந்திரநாத் தாகூர், ஜவாஹர்லால் நேரு, ரஷ்யத் தலைவர்கள் புல்கானின், குருஷ்சேவ், மார்ஷல் டிட்டோ, சூயென்லாய், பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத் போன்ற முக்கியத் தலைவர்கள் இங்கு வந்து சென்றதன் நினைவாக மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
 இந்த கண்ணாடி மாளிகையில் ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திரத் தினத்தன்று நடைபெறும் மலர் கண்காட்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான அபூர்வ மலர்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெறுவதுண்டு.
 சென்ற நூற்றாண்டில் லால்பாக் பொதுமக்கள் பார்வைக்காக மட்டுமின்றி, தனியார் பொது நிகழ்ச்சிகளுக்கும் இந்தத் தோட்டத்துக்குள் அமைந்திருந்த வரவேற்பு நிகழ்ச்சி மண்டபங்களை வாடகைக்கு அளித்து வந்தனர். அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சி மாநாட்டை கண்ணாடி மாளிகையில் நடத்தி வந்தனர். 1969 ஆம் ஆண்டு இங்கு நடந்த காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்திரா காங்கிரஸ் என்று இந்திராகாந்தி தலைமையிலும், ஸ்தாபன காங்கிரஸ் என்று நிஜலிங்கப்பா தலைமையிலும் இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் லால்பாக் சம்பவம் முக்கிய இடம் பெற்றது. இதன் பின்னர் லால்பாக்கின் இயற்கைச் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதித்தது.
 தற்போது நடைப் பயிற்சி செய்பவர்களுக்காக தனி அடையாள அட்டை கொடுக்கப்பட்டு லால்பாக் தூய்மை கெடாமல் பாதுகாக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்காகத் தினமும் திறக்கப்படுகிறது. லால்பாக்கில் உள்ள ஏரியும் சுற்றுச் சூழலும் மனதுக்கு ரம்மியமாக இருப்பதோடு உலகில் உள்ள பல அபூர்வமான தாவரங்களையும் இங்கு கண்டு களிப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு அரிய வாய்ப்பாகும்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.