சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

செவியில் இனித்த  "கேஸரி'!

இசைக் கச்சேரிகளை ஈஸ்வரார்ப்பணமாக மார்கழி மாதம் முழுதும் அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி மயிலையில் லஸ் அவென்யூவில் உள்ள தமது இல்லத்தில் நடத்துகின்றனர்

News image
Updated On :13 ஜனவரி 2013, 5:25 am

இசைக் கச்சேரிகளை ஈஸ்வரார்ப்பணமாக மார்கழி மாதம் முழுதும் அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி மயிலையில் லஸ் அவென்யூவில் உள்ள தமது இல்லத்தில் நடத்துகின்றனர் முத்துக்குமார் தம்பதிகள். மார்கழியில் விடியற்காலைதானே விசேஷம்! காலை 5.30 மணிக்கு குத்துவிளக்குகள் மட்டுமே ஏற்றப்பட்ட தெய்வீகச் சூழலில் கச்சேரி நடக்கிறது. முன்னணி இசைக் கலைஞர்கள் அனைவரும் இங்கு கச்சேரி நிகழ்த்தியிருக்கின்றனர். இது இன்று நேற்றல்ல பதினான்கு வருடங்களாக நடந்து வருகிறது.
 சென்ற வாரம் 3ம்தேதி சனிக்கிழமையன்று, முன்னணி வரிசையில் வைத்துக் கருதப்படும் வயலின் கலைஞர் ஸ்ரீராம்குமாரின் வயலின் தனிக்கச்சேரி. ஒன்றரை மணிநேரம் ஒலிபெருக்கி இல்லாமல் இனிமை சொட்டும் இசை வெள்ளம். உமையாள்புரம் மாலியின் மென்மையான மிருதங்கத்தின் துணையுடன்!
 ஒவ்வொரு பாட்டு முடிந்ததும், கல்பனா ஸ்வரம் முடிந்ததும் கைதட்டல் இல்லை. அனாவசிய ஆரவாரங்களும், நாற்காலியின் ஒசைகளும், போவோர் வருவோரின் இடைஞ்சல்களும், அறவே இல்லை.
 சுமார் ஐம்பது குத்துவிளக்குகள் பிரகாசிக்க, ஆதி சங்கரர் மற்றும் சங்கராச்சாரியார்கள் உருவப்படங்கள் அறையைச் சுற்றி அமைந்திருக்க, இனிமையான இசையுடன் காலை, விடியத் தொடங்கியது.
 சியாமா சாஸ்திரியின் தோடி ஸ்வரஜதியுடன் கச்சேரி ஆரம்பம். கம்பீரமும் இனிமையும் சம விகிதத்தில் கலந்து தந்தார் ஸ்ரீராம். அடுத்து "நன்னு கன்னதல்லி' என்ற தியாகராஜர் க்ருதி. சிந்து கன்னட ராகம். ஆலாபனையும் ஸ்வர சஞ்சாரமும் ரசிக்கும்படி இருந்தது. இந்த ராகத்திற்கு "கேஸரி' என்ற பெயரும் உண்டு. பெயருக்கேற்றபடி இனித்தது செவியில்! தொடர்ந்து "ஸ்ரீ மாத்ரு பூத' என்ற தீட்சிதரின், கன்னடராகக் க்ருதியை பாவபூர்வமாக வாசித்தார். அது முடிந்ததும் ஓரிரு நிமிடங்கள் ஏற்பட்ட இடைவெளியில் ஒலித்த தம்பூராவின் இசையில் மனம் கரைந்தது. அடுத்து வந்தது அற்புதமான காபி.
 ஆலாபனையும் இந்த "சௌக்யமுனினே' கீர்த்தனையும் டிகிரி காப்பியாக மணத்தது. பிறகு சுருட்டியில், ஸ்ரீவேங்கட கிரீசம். அதன் பின் சிருங்கேரி சுவாமிகள் இயற்றிய "சங்கர குரு வாம்ஸ' மற்றும் சாரதா வர்ணமாலா, ஸ்லோகங்களை ராகமாலிகையாக.
 ஸ்ரீராம் குமாரே இசையமைத்து மிக அருமையாகப் பாடவும் செய்தார். புது வருட ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டமில்லாத நல்ல இசையைக் கேட்டது மனதுக்கு நிறைவாக
 இருந்தது.
 - சந்திரிகா ராஜாராம்
 படம்: க.ஸ்ரீ. பாரத்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.