மதுரையைச் சேர்ந்தவர் முத்துகுமார். வீட்டில் ஏதோ பிரச்னை; கோபித்துக் கொண்டு வெளியேறிவிட்டார். இவருக்கு மறதிநோயும் உண்டு. வீடு திரும்பத் தெரியாமல் எங்கெங்கோ அலைந்து கடைசியில் கோவை வந்து சேர்ந்தார். கண்கள் மிரள, சவரம் செய்யப்படாத பல மாதத் தாடியுடன், கந்தல் உடையுடன் தெருக்களில் பைத்தியமாக அலைந்து கொண்டிருந்தார்...
திருவள்ளூரைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவர் எண்பது வயது முதியவர். ரயிலில் பழ வியாபாரம் செய்து வந்தவரை மடக்கிய சிலர் அவரது நகைகளைப் பறித்துக்கொண்டு துரத்திவிட்டனர். இதில் மனநிலை பாதிக்கப்பட்ட ராஜம்மாள் மனம் போன போக்கில் அலைந்து கோவை வந்தார்; நகரத் தெருக்களில் பிச்சைக்காரியாகத் திரிந்துகொண்டிருந்தார்...
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அசோகன் (42); 18 ஆண்டுகளுக்கு முன் மனநிலை பிறழ்ந்து வீட்டைவிட்டுப் போனவர். இறந்துவிட்டதாக குடும்பத்தினரே மறந்திருந்த வேளை. கோவையில் பரிதாபமான தோற்றத்தில் பேருந்து நிறுத்தத்தில் கிடந்தார்...
கோவை, சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் நிர்மலா (29), மனநிலை பாதிக்கப்பட்டவர்; யாரிடமும் பேசமாட்டார். 4 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறியவரை குடும்பத்தினர் தேடி அலுத்துவிட்டனர். அலங்கோலமான ஆடைகளுடன் பூங்கா அருகே படுத்துக் கிடந்தார்...
- நீங்களும் இத்தகைய பரிதாபத்திற்குரிய மனிதர்களை தெருவில் சந்தித்திருக்கலாம். பார்த்தவுடன் ஒரு நிமிடம் மனம் துணுக்குறலாம். அடுத்த நிமிடம் சுதாரித்துக் கொண்டு, அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். கொஞ்சம் இரக்கம் உள்ளவராக இருந்தால் சில்லறைக் காசுகளைப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டுவோம். அவரவர் வேலையே அவரவருக்கு பெரும் சுமை. இது ஒரு பொதுவான மனநிலை.
ஆனால், கோவை, காந்திபுரத்தில் குடியிருக்கும் மகேந்திரனுக்கு இத்தகைய மனிதர்களை மீட்பதே வாழ்க்கை லட்சியம். தெருவில் திரியும் ஆதரவற்ற, மனநிலை பிறழ்ந்த மனிதர்களை மீட்டு, முடி வெட்டி, அவர்களைக் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, அருகிலுள்ள காப்பகங்களில் சேர்ப்பதை தனது கடமையாகவே செய்து வருகிறார்.
அதுமட்டுமல்ல, கோவையிலுள்ள 15 ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் அவ்வப்போது சென்று அங்குள்ள ஆதரவற்றோருடன் கனிவுடன் உரையாடி, அவர்களுக்கு நகம் வெட்டி, உணவு வழங்கி, தோழமை காட்டுவதும் இவரது பணி. இவருடன் ஓர் இளைஞர் பட்டாளமே பணிபுரிகின்றது. ஆதரவற்றவர்களுடன் நட்புடன் பழகி, அவர்கள் அளிக்கும் தகவல்களை முகநூலிலும் வலைப்பூக்களிலும் படத்துடன் வெளியிட்டு, பாதிக்கப்பட்ட பலரை அவர்களது குடும்பத்துடன் சேர்த்துவைத்திருக்கிறார்கள். முத்துகுமார், ராஜம்மாள், அசோகன், நிர்மலா ஆகியோர், அவரவரின் குடும்பத்தினரோடு சேர்த்துவைக்கப்பட்டவர்கள்தான்.
கோவையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களிலும் காவல் நிலையங்களிலும் "மகி' என்றால் தெரியாதவர் இருக்க முடியாது. சுமார் ஐந்தாண்டுகளாக இந்த சேவைப்பணியில் மகேந்திரன் ஈடுபட்டிருக்கிறார். இதற்கென, ஒத்த கருத்துள்ள பரிமளா வாகீசன், சுரேஷ் கணபதி, தபசுராஜ், குமார் கணேஷ் ஆகியோருடன் இணைந்து "ஈரநெஞ்சம்' அறக்கட்டளையைத் துவக்கி இருக்கிறார்.
இத்தனைக்கும் மகேந்திரன் ஆட்டோ உதிரி பாகங்களைத் தயாரிக்கும் குறுந்தொழிலதிபர் மட்டுமே. மனைவி, மகள் என்று குடும்பமே இவருக்கு உதவிசெய்கிறது. அவரது தொழில் தொடர்புள்ள நிறுவனங்களும் மனமுவந்து ஆதரவளிக்கின்றன. நல்லது செய்ய முன்வருவோருக்கு உதவ நல்ல உள்ளங்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இதோ மகேந்திரனே பேசுகிறார்...
""எனது சகோதரியின் மனநிலைப் பிறழ்வால் அவர் அடைந்த கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அப்போதே, இதுபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன்.
மனநிலைப் பிறழ்வுக்கு காரணங்கள் பல இருக்கலாம். அவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்பி வந்தவர்களல்ல. நமது குழந்தை அழுதுகொண்டிருக்கும்போது நம்மால் நிம்மதியாகச் சாப்பிட முடியுமா? மனநிலை பாதிக்கப்பட்ட இவர்கள் இறைவனின் குழந்தைகள். இவர்களுக்கு நாங்கள் செய்வது சேவையல்ல; கடமை. ஓர் உயிரை, ஒரு மனிதரின் வாழ்க்கையைக் காப்பதைவிட திருப்தி அளிக்கும் பணி வேறென்ன?'' என்றார் மகி.
வீட்டைவிட்டு வெளியேறி பைத்தியமான நிர்மலா யாரிடமும் பேசாமல் இருந்தவர், மகேந்திரனின் முயற்சியால் குடும்பத்துடன் சேர்க்கப்பட்டபோது கண்ட உருக்கமான காட்சி மகத்தானது. 4 ஆண்டுகளாகப் பேசாமல் இருந்த நிர்மலா குடும்பத்தாருடன் சேர்ந்த ஆனந்த அதிர்ச்சியில் பேசத் துவங்கிவிட்டார்; இப்போது நலமாக இருக்கிறார்.
ஒரு நிர்மலா காப்பாற்றப்பட்டுவிட்டார். இன்னும் பல ஜீவன்கள் தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். உங்களிடமும் இருக்கிறதா இந்த ஈரநெஞ்சமும் துடிப்பும்?
÷-வ.மு.முரளி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரியலூா் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 7 போ் கைது

வாக்கு எண்ணும் மையத்துக்கு ‘சீல்’ வைப்பு

ஆண்டிமடம் அருகே மது விற்பவா்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்

915.17 மெட்ரிக் டன் சரக்குகள்: இலக்கை விஞ்சிய 12 துறைமுகங்கள் - மத்திய அமைச்சா் பெருமிதம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


