மறைந்த நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் நூற்றாண்டு விழா தொடரில், அவரது 25ஆவது மறைவு தினத்தை, சென்ற வாரம் அவரது நினைவு அறக்கட்டளை ஏற்பாடு செய்து நடத்திய போதுதான், சகஸ்ரநாமம் என்ற மானுடனின் முழுப் பரிமாணமும் தெரியவந்தது.
""எல்லா தீபாவளிக்கும் தன் நாடகக் குழுவினர் அறுபது பேருக்கும் புது வேட்டி சட்டையும், புடவையும் வாங்கித் தருவார் எஸ்.வி.எஸ். "நாலுவேலி நிலம்' திரைப்படம் எடுத்து நஷ்டமான நேரம். தீபாவளிக்கு முதல் நாள், நண்பர்களைச் சந்தித்துவிட்டு வெறுங்கையோடு திரும்பி வந்தார். "இன்னும் பொழுது விடிய நாலு மணி நேரமே இருக்கிறது. துணிமணிகளுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று மனைவி கேட்டார். தம் வேனை எடுத்துக்கொண்டு மீண்டும் புறப்பட்டார் எஸ்.வி.எஸ். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அவர் வந்த போது, வேனில் இருந்த துணிமணிகளை இறக்கி வைத்துவிட்டு, டிரைவரிடம் வேன் சாவியை நீட்டி, "இதை வேனை வாங்கியிருக்கும் புது முதலாளியிடம் கொடுத்துவிடு..' என்றார். தம்மிடம் பணிபுரிபவர்களைக் கைவிட்டுவிடாமல் இருக்க, வேனை விற்றுவிட்டு வந்துவிட்டார்...'' என்று அவரால் வளர்க்கப்பட்ட துரை சொன்ன போது நெகிழ்ந்து போகாதவர்கள் அவையில் இல்லை!
பாரதியின்பால் அதிகப் பற்றுக்கொண்டவர் சகஸ்ரநாமம். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய வழக்கறிஞர் காந்தி, இப்போது பாரதியார் சங்கத் தலைவர். அடுத்த நினைவுக் கூட்டத்தை பாரதியார் சங்கமே நடத்தும் என்று அறிவித்தார். வழக்கறிஞர் காந்தியின் பேச்சு வெகு இயல்பாக இருந்தது.
தம்மிடம் ஜூனியராக இருந்து நீதிபதி ஆக உயர்ந்த கற்பகவினாயகம், நாடகப் பித்தர் என்பதைக் குறிப்பிட்டார். துரை பேசிய வசனத்தைக் கேட்டு அவருடைய நினைவாற்றலைப் புகழ்ந்து பாராட்டினார். எஸ்.வி.எஸ்.ஸின் மகன் குமார் வரவேற்புரையின்போது பாடிக் காண்பித்ததை வியந்தார். "என்ன குரல் வளம்?' என்று மெச்சினார். (குமார் ஹிந்தி "கஸல்' பாடல்களை வெகு அருமையாகப் பாடுவார் என்று ஒரு புதிய தகவலையும் துரை நம்மிடம் தெரிவித்தார்.) பாடலாசிரியர், இசையமைப்பாளர் எம்.கே. ஆத்மநாதனை விழா நிகழ்ச்சியின் ஓர் அங்கமாகப் பாராட்டி கௌரவம் செய்தார் கங்கை அமரன்.
ஆனால் விழாவின் மகுடமாக இருந்தது கவிஞர், சிறுகதை எழுத்தாளர், குறும்படத் தயாப்பாளர் ரவி சுப்பிரமணியனின் கவிதைத் தரம் மிக்க நினைவுதினச் சொற்பொழிவுதான். எஸ்.வி.எஸ்.ûஸப் படம் பிடித்துக் காட்டியது போல் இருந்தது. அதில் இருந்து சில துளிகள் இதோ:
வெள்ளைத் தேவன் பரம்பரையில் வந்து, "மிசுபந்தம்' என்ற நாடகத்தை எழுதிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் தமிழ் கற்று, ராமுடு அய்யர்-கல்யாண சுந்தரமய்யர் இருவரிடமும் நடிப்பைக் கற்று 1922 வரை நாடகக் கலைக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த நாடகக் கலையின் தலைமை ஆசான் என்று எல்லோராலும் போற்றப்படுபவர் சங்கரதாஸ் சுவாமிகள். பின்னாளில் அவ்வை சண்முகம் என்ற தன் சீடன் மீது கொண்ட அன்பால் அவருக்கு நாடகம் எழுதிக் கொடுத்தார். அந்த சங்கரதாஸ் சுவாமிகளிடம் நான் நேரிடையாகப் பயிலாவிட்டாலும், அந்தத் திருக்கூட்ட மரபில் வந்தவன் நான்... என்பார் எஸ்.வி. சகஸ்ரநாமம்.
13 வயதில் பொள்ளாச்சியில் படிப்பை விட்டுவிட்டு கோவை வந்து டி.கே.எஸ். நாடகக் குழுவில் சேர்ந்தார். சங்கீத ஆசான் டி.ஏ. சம்மந்த மூர்த்தியிடம் ஆர்மோனியமும், இசையும் கற்றார். பாரதி அன்பர். "நமக்குத் தொழில் நாடகம். நாட்டுக்குழைத்தல்' என்று அவர் மொழியிலேயே சொன்னவர். பாரதியின் நட்சத்திரம் மூலம், நானும் மூலம். அவர் கார்த்திகை மாதத்தில் பிறந்தார். நானும் கார்த்திகை மாதத்தில்தான் பிறந்தேன் என்பார் எஸ்.வி.எஸ்.
புதுச்சேரியில் சுனாமி போல ஒரு புயல் வந்தபோது, அதில் மாண்டவர்களை பத்து இருபதாகச் சேர்த்து வைத்துக் கொளுத்தினார்கள். பாரதியோ தம் முண்டாசை அவிழ்த்து அதில் இறந்து போன காக்கை-குருவிகளை சேகரித்து, கடற்கரை மணலில் ஆழப் புதைத்தார். காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடும் யோக்கியதை பாரதிக்கு இருந்திருக்கிறது. சகஸ்ரநாமமும் அப்படிப்பட்டவர்தான்.
படம் எடுத்து நஷ்டத்தில் இருந்த போது, அடமானம் வைத்த வீடு ஏலத்துக்கு வந்துவிட்டது. ஆனால் நல்ல வேளையாக சிலோனிலிருந்து பணம் வந்ததும், காரைக்குடி செட்டியாரிடம் வட்டி உட்பட்ட தொகையைக் கொண்டுபோய்க் கொடுத்தார். ""சினிமாவில் நான் யாருக்கெல்லாமோ கடன் கொடுத்திருக்கிறேன். பலர் ஏமாத்தியிருக்காங்க. ஆனால் இந்த நிலைமையிலகூட நீங்க இப்படி நடந்து கொள்வதைப் பார்த்தா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே...'' என்றார் செட்டியார். பண்டரிபாய்-மைனாவதி பணத்தை வாங்கிக்கொள்ளவே மறுத்தார்கள். "நாலு வேலி நிலம்' கதையே, "சாகும்போது யாருக்கும் கடன் வைக்காதே' என்பதுதானே என்று வற்புறுத்திப் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்தார். ஜீவாவின் தலைமறைவு வாழ்க்கையில் அடைக்கலம் அளித்திருக்கிறார். முகவை ராஜமாணிக்கத்துக்கும், இளங்கோவனுக்கும் உதவியிருக்கிறார்.
பி.எஸ்.ராமையா, தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, ந. சிதம்பர சுப்பிரமணியம் போன்றவர்களிடம் இலக்கியத் தரமான நாடகங்களை எழுதி வாங்கி மேடை ஏற்றியவர். இலக்கியவாதிகளைக் கொண்டாடிய எஸ்.வி.எஸ்., நண்பர்களின் குழந்தைகள் எட்டுப் பேருக்குத் தம் செலவில் திருமணம் நடத்திவைத்தார். ஒவ்வொரு பக்கமாக
தி. ஜானகிராமன் எழுத எழுத, அந்தந்த நிமிடமே அதை எடுத்துப் படித்து ரசிப்பார் சகஸ்ரநாமம் என்று எம்.வி. வெங்கட்ராம் சொல்லியிருக்கிறார்.
திராவிட அரசியல் தலைவர்கள் அண்ணா, கருணாநிதி போன்றவர்களிடம் நெருங்கிப் பழகி இருந்தாலும், அவரது நாடகங்கள் திராவிட இயக்க மேடை நாடகங்களுக்கான மௌனமான எதிர்ப்புக்குரலே. அந்த மேடைகளில் பயன்படுத்தப்படும் அதீத அலங்காரம் கொண்ட, திகட்டும் மிகைத் தமிழ்ச் சொல்லாடல்களையோ, வெற்று வார்த்தை ஜாலங்களையோ, ஆக்ரோஷ பிரசார வாக்கியங்களையோ எஸ்.வி.எஸ்.ஸின் நாடகப் பிரதிகளில் காண முடியாது.
என்.எஸ்.கே. சிறையில் இருந்தபோது, வழக்குச் செலவுகளுக்குப் பணம் திரட்ட அவரது நாடகக் குழுவை வெற்றிகரமாக எடுத்து நடத்தி, அவர் சிறையிலிருந்து திரும்பியதும் அவரிடமே ஒப்படைத்தார். யுத்த நிதிக்காக காமராஜரிடம் 5001 ரூபாய் கொடுத்ததோடு, தான் பெற்ற தங்கப் பதக்கங்கள், வெள்ளி விளக்குகள், சந்தனப் பேலா எல்லாவற்றையும் கொடுத்தார். நாடகக் கல்வி நிலையம் அமைத்து நடிகர்களை உருவாக்கினார். பாஞ்சாலி சபதத்தைக் கவிதை நடை நாடகமாக வெற்றிகரமாக மேடை
ஏற்றினார்.
எடிட்டர் பி. லெனின் பங்குகொண்ட இந்த விழாவில், நாடகாசிரியர் சந்திரமோகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பேச்சாளர்கள் பற்றிய அவரது அறிமுகக் குறிப்புகள் கவிதை நயத்துடன் இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


