புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

செல்போனா? காது கேட்கும் கருவியா?

காது கேட்கும் கருவியை ஒருவர் காதில் வைத்திருப்பதைப் பார்த்தவுடனேயே நமக்குத் தெரிந்துவிடும் அவருக்குக் காது கேட்கும் திறன் குறைவு என்று.

News image
Updated On :26 ஜனவரி 2014, 2:48 am

ந. ஜீவா

காது கேட்கும் கருவியை ஒருவர் காதில் வைத்திருப்பதைப் பார்த்தவுடனேயே நமக்குத் தெரிந்துவிடும் அவருக்குக் காது கேட்கும் திறன் குறைவு என்று.
 இதனாலேயே காது கேட்பதில் பிரச்னை உள்ள பலர், அந்தக் கருவியை வாங்கிப் பயன்படுத்தக் கூச்சப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
 இப்போது வந்துள்ள ஒரு புதிய கருவியால் இந்தப் பிரச்னை தீர வழியேற்பட்டிருக்கிறது. அவர்களைப் பார்க்கும் யாரும் செல்போனில் அவர்கள் பாட்டுக் கேட்டுக் கொண்டு இருப்பதாகத்தான் நினைப்பார்கள். ஆனால் அவர்கள் அந்த நேரத்தில் காது கேட்கும் கருவியைப் பயன்படுத்திக் கொண்டு இருப்பார்கள்.
 இந்தப் புதிய கருவியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்த சென்னை காது -மூக்கு - தொண்டை மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மோகன் காமேஸ்வரனிடம் அதைப் பற்றிக்
 கேட்டோம்:
 ""நீங்கள் இதுவரை பார்த்திருக்கும் காது கேட்கும் கருவி ஒலியை அதிகப்படுத்திக் கொடுக்கிறது. 15 முதல் 20 சதவீதம் வரை காது கேட்கும் திறன் இருந்தால் இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். 60 வயதுக்கு மேல் உள்ள ஒருவருக்கு, காதின் கேட்கும் திறன் குறைந்து போவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
 ஆனால் தனக்குக் காது கேட்கவில்லை என்பதே நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. காது கேளாதோருக்கு என்ன கேட்கிறது? என்பதும் தெரியாது. என்ன கேட்கவில்லை? என்பதும் தெரியாது. எனவே காது கேட்கவில்லை என்பது தெரியாததால், அவர்களாகவே மருத்துவம் பார்க்க வரமாட்டார்கள்.
 குறைந்த அளவே காது கேட்கும் திறன் உள்ளவர்களுக்கு காது கேட்கும் கருவி போன்றவற்றைப் பயன்படுத்தி அவர்களுடைய காது கேளாமைக் குறைபாட்டைப் போக்கிவிடலாம். ஆனால் முற்றிலும் காது கேட்கவில்லை என்றால் காது கேட்கும் கருவி போதுமானதல்ல. அது பயன்படாது. அதற்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் என்ற அறுவைச் சிகிச்சை முறையைப் பயன்படுத்தி காது கேட்கச் செய்யலாம். இந்த முறையில் உள்காதில் ஒரு கருவியைப் பொருத்தினால், ஒலியை அந்தக் கருவி உள்வாங்கி நேரடியாக நரம்புகளுடன் ஒலிக்கு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்துவிடும். கேட்கும் திறனை உண்டாக்கிவிடும். ஆனால் இந்த அறுவைச் சிகிச்சைக்கு குறைந்தது 5 - 6 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும். 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக இந்த அறுவைச் சிகிச்சையைச் செய்து தரும் அரசு திட்டம் ஒன்றும் உள்ளது.
 சிறிதளவு காது கேட்கும் திறன் இருந்தால் காது கேட்கும் கருவியைப் பயன்படுத்த முடியும். இதைப் பயன்படுத்துவது வெளிப்படையாக எல்லாருக்கும் தெரியும் என்பதால், காது கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்கள் இந்தக் கருவியைப் பயன்படுத்தத் தயங்குவார்கள்.
 இப்படிப்பட்டவர்களின் இந்தப் பிரச்னையைத் தீர்க்க என்ன செய்யலாம் என்று யோசித்து, நாங்களும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் கண்டுபிடித்து வெளியிட்டிருப்பதுதான் செல்போன் மூலம் காது கேட்கும் கருவியைப் பயன்படுத்தும் முறை. எளிமையாகச் சொன்னால், செல்போனுக்குள் காது கேட்கும் கருவியைப் புகுத்தியிருக்கிறோம்.
 ஐ போன் வகையிலான செல்போனே இதற்குப் பயன்படும். முதலில் ஐ போன் வகையிலான செல்போனில் காது கேட்கும் திறனை அதிகப்படுத்துவதற்கான மென்பொருளை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.
 அடுத்து, ஒருவருக்குக் காது கேட்கும் திறன் எவ்வளவு உள்ளது? எந்த அளவுக்கு அவருக்கு ஒலியை அதிகப்படுத்திக் கொடுக்க வேண்டும்? என்பதை ஆடியாலஜிஸ்ட் என்று சொல்லப்படுகின்ற கேட்பியல் நிபுணர்கள் சோதனைகளின் மூலம் கண்டறிந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக புரோகிராம் செய்து தருவார்கள். அதற்குப் பிறகு செல்போனை காது கேட்கும் கருவியாகப் பயன்படுத்த முடியும்.
 இந்த மென்பொருளை, ஐ போனில் டவுன்லோடு செய்ய சுமார் ரூ.1,200 ஆகும். இந்த முறையில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் இன்டர்நெட்டைப் பயன்படுத்தி, ஆடியாலஜிஸ்ட் துணையுடன் சரி செய்து கொள்ளவும் முடியும்.
 காது கேளாமைப் பிரச்னை உள்ள பள்ளி மாணவர்கள் வழக்கமான காது கேட்கும் கருவியைப் பயன்படுத்தினால், வகுப்பறையில் ஆசிரியர் பேசுவது மட்டுமல்ல, எல்லா ஒலிகளும் சேர்ந்தே கேட்கும். இதனால் மாணவர்கள் பாடத்தில் முழுக் கவனத்தையும் செலுத்த முடியாது. இப்போது இந்த முறையைப் பயன்படுத்தி, ஆசிரியர் மைக்ரோ போனில் பேசுவதை, மாணவர்கள் தங்களிடம் உள்ள ரிஸீவர் மூலம் கேட்பார்கள். இதனால் கவனம் சிதறாமல் பாடத்தைக் கற்க முடியும். வகுப்பறையில் இருந்து மட்டுமல்ல, வெளியிடங்களில் இருந்தும் கூட ஓர் ஆசிரியர் இந்தக் கருவியைப் பயன்படுத்திப் பாடம் சொல்லித் தரமுடியும்.
 பிற குறைபாடுகளைப் போலத்தான் காது கேளாமையும். இதனால் தாழ்வு மனப்பான்மைக்குள்ளாகி, பிறரிடம் இருந்து தனிமைப்பட்டு, தன்னைப் பற்றி பிறர் ஏதாவது பேசிக் கொண்டிருக்கிறார்களோ? என்று சந்தேகப்பட்டு, வாழ்வைத் துயர் நிறைந்ததாகப் பலர் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். செல்போன் மூலம் கேட்கும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளும் இந்தப் புதிய முறையால், யாருக்குக் காது கேட்கும்? யாருக்குக் காது கேட்காது? என்று இனிமேல் யாருக்குமே தெரியாது அல்லவா?'' என்கிறார் டாக்டர் மோகன் காமேஸ்வரன்.

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.