ஈட்டி எறியும் வீராங்கனை!
சென்னை அண்ணாசாலையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ரஞ்சிதா. இவர் தமிழ்நாட்டின் சார்பில்


சென்னை அண்ணாசாலையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ரஞ்சிதா. இவர் தமிழ்நாட்டின் சார்பில் தடகளப் போட்டிகளில் ஒன்றான ஈட்டி எறிதல் விளையாட்டிற்காக தேசிய, மாநில அளவில் போட்டிகளில் கலந்து பல பதக்கங்களை வென்றுள்ளார்...
""அப்பா ராஜன் வருமான வரித்துறையில் வேலை பார்க்கிறார். அம்மா ரேவதி கூட்டுறவுத் துறையில் வேலை பார்க்கிறார். நான் வீட்டிற்கு ஒரே பெண். அப்பா, அம்மா இருவரும் வேலையில் இருப்பதால் சிறு வயது முதலே பள்ளி முடிந்ததும். பள்ளிக்கு அருகிலேயே உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கொண்டு விட்டு விடுவார்கள். ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் குழந்தைகள் காப்பகத்தில் விட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் அப்பா என்னை ஏதாவது பயிற்சி வகுப்பில் சேர்த்துவிட முடிவு செய்தார். அந்த நேரத்தில் எங்கள் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் ஈட்டி எறிதல் போட்டியில் முதல் பரிசு வென்றேன். இதனால் என்னுடைய ஆசிரியர் எபிசிபா என் அப்பாவிடம் என்னை ஈட்டி எறிதல் விளையாட்டில் சேர்த்துவிடும்படி சொன்னார்கள். எனக்கும் சின்ன வயதில் இருந்தே தங்க மங்கை பி.டி. உஷா மாதிரி வரவேண்டும் என்று ஆசையிருந்தது. அதனால் அப்பாவிடம் என்னைத் தடகள விளையாட்டில் சேர்த்துவிடும்படி கேட்டேன்.
அப்பாவும் ஆர்வமாகப் பலரிடம் விசாரித்து அரசு சார்பில் நடத்தப்படும் விளையாட்டுப் பயிற்சி மையத்தில் சேர்த்துவிட்டார். இதனால் பள்ளி முடிந்ததும் தினமும் சென்னை தாஸபிரகாஷ் அருகில் உள்ள நேரு விளையாட்டு பூங்காவிற்குச் சென்று விடுவேன். கோச் இன்பராணி என்பவர் எனக்குப் பயிற்சியளித்தார். முதலில் உடல் வலிமை பெற நிறைய பயிற்சி கொடுத்தார்கள். அதன் பிறகு ஈட்டி எறிதல் விளையாட்டில் சிறப்பாகப் பயிற்சி கொடுத்தார்கள். ஒன்றரை வருடப் பயிற்சிக்குள் 2012 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரியில் மாநில அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் 31.7 என்ற அளவில் சில்வர் மெடல் வென்றேன். அதிலிருந்து தொடர்ந்து பஞ்சாப், கேரளா, புணே, லக்னௌ, ஹரித்வார் என கிட்டதட்ட பதினைந்துக்கும் மேலான தேசிய அளவில் நடந்த போட்டிக்காக இளம் போட்டியாளராக அரசு சார்பில் தமிழகத்தில் இருந்து நான் தேர்வு செய்யப்பட்டு கலந்து வருகிறேன். இதைத் தவிர, 20 மாநில அளவில் நடத்தப்பட்ட போட்டிகளிலும் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், சமீபத்தில் அரசு சார்பாக நடத்தப்பட்ட இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டியில் நான் கலந்துகொள்ள முடியவில்லை. காரணம், என்னுடைய கோச் தற்போது வேறு வேலை கிடைத்துச் சென்றுவிட்டதால் சரியான பயிற்சி கிடைக்கவில்லை. டெக்னிக்கல் பயிற்சி கிடைக்காததால் இதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நல்ல கோச் கிடைக்காமல் நான் தவிப்பதைப் பார்த்துவிட்டு, அங்கு போட்டிக்காக வந்திருந்த பள்ளிகளில் செயின்ட் ஜோசப் பள்ளயின் விளையாட்டு ஆசிரியர் டெரிக் என்பவர் எனக்கு டெக்னிக்கல் பயிற்சியளிப்பதாகக் கூறியுள்ளார். அதனால் எனக்கு மீண்டும் நம்பிக்கை பிறந்திருக்கிறது கண்டிப்பாக அடுத்தமுறை இளைஞர்களுக்கான போட்டியில் நான் செலக்ட் ஆகிவிடுவேன் என்று.
இந்த விளையாட்டுத் துறையைப் பொருத்தவரை எனக்கு சின்ன வருத்தம் இருக்கிறது. என்னவென்றால், விளையாட்டில் ஆர்வம் இருந்தும், நல்ல திறமையிருந்தும் பல பேர் விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுப்பதில்லை. காரணம், அரசு சார்பில் நடத்தப்படும் விளையாட்டுப் பயிற்சி மையத்திற்கு எங்கே, எப்படி யாரை அணுக வேண்டும் என்பது தெரிவதில்லை. இன்னொன்று தனியார் பயிற்சி மையங்களில் செலவு கூடுதலாக இருக்கிறது. மற்றொன்று, பெண் கோச்கள் குறைவாக இருப்பதால், பெண் குழந்தைகளைக் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு விளையாட அனுமதிப்பதில்லை. இதனால் நல்ல திறமையுள்ள பல பெண் குழந்தைகளும் பல வெற்றி வாய்ப்புகளை இழந்து விடுகிறார்கள்.
அதேபோல் ஈட்டி எறிதல் விளையாட்டைப் பொருத்தவரை ஈட்டி எறிந்து பழகுவதற்கு சரியான விளையாட்டு மைதானம் கிடைப்பதில்லை. எல்லா தடகள விளையாட்டுகளின் பயிற்சிகளும் முடிந்தபின்தான் எங்களுக்கு மைதானம் கிடைக்கும். அப்படி முன்னதாகவே கிடைத்தாலும் பொது இடம் என்பதால் ஈட்டி எறியும்போது யாராவது குறுக்கே வந்துவிடுவார்களோ என்ற பயமும் அதிகமாக இருக்கிறது. அதனால் சில நேரங்களில் ஈட்டிக்குப் பதிலாக செங்கல்களை எறிந்து பழக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த நிலை மாறி, நல்ல கோச், நல்ல விளையாட்டு மைதானம் கிடைக்க தமிழக முதல்வர் ஏதாவது வழி ஏற்படுத்திக் கொடுத்தால் என்னைப்போல் வளரும் விளையாட்டு வீரர்களுக்கு உதவியாக இருக்கும். எனது கனவு எல்லாம் இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு பதக்கங்கள் வென்று வர வேண்டும் என்பதுதான்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...