/

இலவசக் கல்வி வழங்க இணைந்த கரங்கள்!

""நாங்கள் 5 பேரும் நண்பர்கள். சமுதாயத்திற்கு நம்மால் முடிந்த ஏதாவது செய்ய வேண்டும் எனச் சிந்தித்தபோது, ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கலாம் என்ற யோசனை தோன்றியது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2015, 3:13 pm

""நாங்கள் 5 பேரும் நண்பர்கள். சமுதாயத்திற்கு நம்மால் முடிந்த ஏதாவது செய்ய வேண்டும் எனச் சிந்தித்தபோது, ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கலாம் என்ற யோசனை தோன்றியது.

இதையடுத்து 5 பேரும் இணைந்து ஓர் அறக்கட்டளையை உருவாக்கி 2010ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கத் தொடங்கினோம்.

தொடக்கத்தில் 3 மாணவர்களைக் கொண்டு ஆரம்பித்தோம்.

மாணவர்கள் தங்குவதற்கு நண்பர் ஒருவர் இலவசமாக வீடு ஒன்று கொடுத்தார்.

6 முதல் 12 வயது வரை உள்ள, தாய் தந்தையற்ற ஏழைக் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், கணவன் மனைவி பிரிந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப இயலாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகள் என பார்த்து அவர்களை எங்களது இல்லத்திற்கு அழைத்து வந்து கல்வி வழங்கி வருகிறோம்.

தற்போது சிவகாசியில் 15 மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இவர்கள் இங்குள்ள பள்ளி ஒன்றில் வெவ்வேறு வகுப்பு படித்து வருகிறார்கள்.

சிவகாசி சாட்சியாபுரத்தில் மாணவிகள் தங்கும் விடுதியில் தங்கி 4 மாணவிகளும், அருப்புக்கோட்டை பள்ளி ஒன்றில் தங்கி 16 மாணவிகளும் தற்போது படித்து வருகிறார்கள். மாணவிகளுக்கு அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தங்கிப் படிக்க வசதி செய்து கொடுத்துவிடுகிறோம்.

மாணவிகளின் விடுதிகட்டணம், கல்வி செல்வு உள்ளிட்டவற்றை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இதுவரை வெளிநபர்களிடம் நன்கொடை வாங்கவில்லை.

தரமான கல்வி, உணவு, உடை, இருப்பிடம், சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு தொழில் கல்வி ஆகியவற்றுக்கு உதவி செய்து வருகிறோம்.

பல பள்ளித் தலைமை ஆசிரியர்களை நேரில் சந்தித்து, ஏழ்மைநிலையில் உள்ள குழந்தைகளைக் கண்டறிகிறோம். பண்டிகை நாள்களில் புதிய உடைகள் வாங்கிக் கொடுத்து உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம்.

மாதம் ஒரு முறை பள்ளிக்கு சென்று ஆசிரியர்களை நேரில் சந்தித்து மாணவ மாணவிகளின் படிக்கும் நிலையைத் தெரிந்து கொள்கிறோம்.

மாணவர்களுக்கு ஆசிரியர்களை வரவழைத்து தினசரி இரவு ஒரு மணிநேரம் டியூசன் எடுக்கிறோம். மாணவிகளுக்கு அவர்கள் தங்கும் விடுதியில் டியூசன் படிக்க ஏற்பாடு செய்துவிடுகிறோம். எனவே இங்கு உள்ள மாணவ மாணவிகள் அனைவரும் நல்ல முறையில் படித்து வருகிறார்கள்.

விடுமுறை தினங்களில் அவர்களை வீட்டைச் சுற்றி சுத்தம் செய்யச் சொல்கிறோம். அதனால் சுத்தமாக இருக்க வேண்டும் என அவர்கள் மனதில் பதிகிறது.

தற்போது பத்தாம் வகுப்பு படித்து முடித்த மாணவர் ஒருவர் மதுரையில் தொழில் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்.

எங்களிடம் உள்ள அனைவரும் தொழில் கல்வி கற்று சொந்த காலில் நிற்கும்வரை நாங்கள் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்போம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.