தைராய்டு பிரச்னைக்கு யோகாசனம்!
தைராய்டு பிரச்னை, சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய்கள் எல்லாம் இப்போது சாதாரணமாகி விட்டன. வயது முதிர்ந்தவர், நடுத்தர வயதினருக்குத்தான் இந்த நோய்கள் வரும்


தைராய்டு பிரச்னை, சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய்கள் எல்லாம் இப்போது சாதாரணமாகி விட்டன. வயது முதிர்ந்தவர், நடுத்தர வயதினருக்குத்தான் இந்த நோய்கள் வரும் என்பது இல்லை. இப்போது இளம் வயதினருக்கும் வந்துவிடுகின்றன.
""இந்த நோய்கள் வராமல் தடுக்கவும், வந்துவிட்டால் அதை நலமாக்கவும் பயன்படுகின்றன யோகாசனங்கள்'' என்கிறார் மருத்துவர் எம்.பிச்சையா குமார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசினர் சித்தமருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் அவரைச் சந்தித்து நோய்களை நலமாக்கும் யோகாசனங்களைப் பற்றிக் கேட்டோம்:

""நோய்கள் வந்துவிட்டால் சித்த மருத்துவத்தில் அதைக் குணமாக்க மருந்துகள் உள்ளன. நோய்கள் வராமல் தடுக்கவும் மருந்துகள் உள்ளன. நெறிமுறைகள் உள்ளன. அவற்றைக் காயகற்பம் என்பார்கள். காயகற்பத்தில் ஒன்றுதான் யோகாசனம்.
உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தி உடலுக்கு நன்மையைச் செய்வதே யோகாசனங்கள். உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் பழக்குவதற்குப் பெயர் ஆசனம். இந்த ஆசனங்கள் நோய் வராமல் தடுக்கின்றன. வந்த நோயை நலமாக்குகின்றன.
ஒருவருக்கு 40 வயது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் உடலை நல்லமுறையில் பேணி வந்திருந்தார் என்றால் அவருடைய இதயத்தின் வயது 30 ஆக இருக்கலாம். அதாவது உடலின் வயது வேறு. உடல் உறுப்பின் வயது வேறு. இளம் வயதிலேயே ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட உடல் உறுப்பு கெட்டுப் போகலாம். செயலிழந்து போய்விடலாம். உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைத்திருக்க யோகாசனங்கள் உதவுகின்றன.
இந்தக் காலத்தில் எல்லாம் வியாபாரமயமாகிவிட்டது. வீட்டில் வளர்க்கும் பசுவின் பாலை குடித்தனர் நம் முன்னோர். வீட்டில் வளர்க்கும் ஒரு கோழியின் முட்டையை உண்டார்கள். ஆனால் இப்போது ஒரு மாடு கறந்த பாலைக் குடிக்க முடியாது. செயற்கைக் கோழியின் செயற்கை முட்டைதான் நமக்கு இப்போது கிடைக்கிறது. ஃபாஸ்ட் புட், பதப்படுத்தப்பட்ட உணவு, பேக்கிங் செய்யப்பட்ட உணவு என நமது உணவுப் பழக்கங்களும் மாறிவிட்டன.
சாதாரணமாக நடப்பது கூட இப்போது மன அழுத்தத்தைத் தரும் ஒன்றாக மாறிவிட்டது. வீட்டிலும், வீட்டை விட்டு வெளியே வந்த பின்பும் எப்போதும் நமக்கு ஓயாத டென்ஷன். படிக்கும் மாணவர்களாகட்டும், அலுவலகத்தில் வேலை செய்பவர்களாகட்டும் டென்ஷன் இல்லாதவர்கள் யாரும் இல்லை. இந்த டென்ஷன் - மன அழுத்தம் - நமது உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டைப் பாதிக்கிறது.

நாளமில்லாச் சுரப்பிகளில் ஒன்றுதான் தைராய்டு சுரப்பி. நமது உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு இந்தச் சுரப்பிதான் காரணம். மன அழுத்தத்தின் காரணமாக சிலசமயங்களில் இந்தச் சுரப்பி இயல்பான முறையில் செயல்பட முடியாமல் போகிறது. அதிகமாகச் சுரக்கிறது. அல்லது குறைவாகச் சுரக்கிறது. அதிகமாகச் சுரப்பதை ஹைப்பர் தைராய்டிசம் என்பார்கள். குறைவாகச் சுரப்பதை ஹைப்போ தைராய்டிசம் என்பார்கள். இந்தச் சுரப்பியின் இயல்பான செயல்பாடு பாதிக்கப்படுமானால், நமது உடலில் அது பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாக வேறு சில நோய்களும் உருவாகிவிடுகின்றன.
சர்க்கரை நோய் பரம்பரையாக வரக்கூடியது என்றாலும், மன அழுத்தத்தின் காரணமாக இன்சுலின் சுரப்பு குறைந்து சர்க்கரை நோய் ஒருவருக்கு வரக் கூடும்.
எனவே மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளியில் உள்ள சூழ்நிலைகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருக்கின்றன.
மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கவும், அப்படி ஏற்பட்டால் அதைக் குறைக்கவும் யோகாசனங்கள் உதவுகின்றன.
மருந்து உடலை மட்டும் குணப்படுத்தக் கூடியதாக இருக்கக் கூடாது. மனதையும் குணப்படுத்த வேண்டும். மனதைக் குணப்படுத்தும் மருந்து யோகாசனம். யோகாசனத்தை முறையாகச் செய்து வரும் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படாது. மன அழுத்தம் ஏற்படவில்லை என்றால் தைராய்டு பாதிப்பும் வராது; சர்க்கரை நோயும் வராது.

பரம்பரையாக சர்க்கரை நோய் வரும் குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு 40 வயதில் சர்க்கரை நோய் வரும் என்றால், அவர் யோகாசனங்களை முறையாகச் செய்து வந்தால் 40 வயதில் நிச்சயமாக சர்க்கரை நோய் அவருக்கு வராது. சர்க்கரை நோய் வருவது தள்ளிப் போகும். வராமலேயே கூட போய்விடலாம். யோகாசனங்களைச் செய்து வந்தால், நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடு இயல்பாக இருக்கும். ஆனால் மருத்துவரை அணுகி, அவர் வழிகாட்டுதலின்படிதான் யோகாசனங்களைச் செய்ய வேண்டும்.
இப்போது நடுத்தர வயதினருக்கு, அதைத் தாண்டியவர்களுக்கு மிகை இரத்த அழுத்தம், மூட்டு வலி, கழுத்து வலி, தைராய்டு பிரச்னை, சர்க்கரை நோய் என பலவிதமான பிரச்னைகள் இருக்கின்றன. அவர்களால் ஒரு சில யோகாசனங்களை மட்டும்தான் செய்ய முடியும். அந்த யோகாசனங்களைக் கூட முழுமையாகச் செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் செய்ய முடியும். இப்படிப்பட்டவர்கள் டிவியைப் பார்த்து, புத்தகத்தைப் படித்துவிட்டு யோகாசனங்களைச் செய்ய ஆரம்பித்தால், அது வேறு சில உடல் நலப் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். எனவே மருத்துவரை அணுகி, தேவைப்பட்டால் ரத்தப் பரிசோதனை கூட செய்து கொண்டு, ஏதேனும் நோய்கள் இருந்தால் அதற்கு மருந்துகளைச் சாப்பிட்டுக் கொண்டு, கூடவே யோகாசனங்களையும் செய்ய வேண்டும். அப்போதுதான் நலமடைய முடியும்.
உதாரணமாக தைராய்டு பிரச்னைக்கு சர்வாங்காசனம், விபரீத கரணி, உஷ்டிராசனம், யோக முத்ராசனம், மச்சாசனம், அர்த்த மச்சாசனம், ஹலாசனம், புஜங்காசனம், சிரசாசனம், அர்த்த சிரசாசனம் போன்ற யோகாசனங்களைச் செய்யலாம். ஆனால் இந்த ஆசனங்களை எல்லாரும் செய்துவிட முடியாது. அவரவர் வயது, உடல்நிலை ஆகியவற்றுக்கேற்பவே செய்ய முடியும்'' என்றார்.
படங்கள்: அண்ணாமலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...