மண் இல்லாமல்-தொட்டி இல்லாமல் காய்கறிச் செடிகள்!
""எம்.எஸ்.சி., எம்.பில் முடித்துவிட்டு கணவருக்குத் துணையாக இரும்புக்கடையை நிர்வகித்துக் கொண்டு சராசரி பெண்ணாக கோயம்புத்தூரில் வசித்து வந்தவர் சித்ரா துரைராஜ்.


""எம்.எஸ்.சி., எம்.பில் முடித்துவிட்டு கணவருக்குத் துணையாக இரும்புக்கடையை நிர்வகித்துக் கொண்டு சராசரி பெண்ணாக கோயம்புத்தூரில் வசித்து வந்தவர் சித்ரா துரைராஜ். இவர் திடீரென சாதனைப் பெண்மணியாக மாறி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். அப்படி அவர் செய்த சாதனை என்ன? மொட்டை மாடியில் ஓர் பசுமைப் புரட்சி செய்திருக்கிறார். அதாவது மண் இல்லாமல், தொட்டி இல்லாமல் பாலிதீன் பைகளில் ஆர்கானிக் காய்கறிகளை விளைய வைக்கும் மாடித் தோட்டம் அமைத்துத் தருகிறார். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""என் கணவருக்குத் துணையாக கடையின் கணக்கு வழக்குகளைப் பார்த்து வந்தேன். இரும்பு வியாபாரத்துடன் சேர்த்து எங்கள் நிறுவனத்தில் உப்புத்தன்மை, அமிலத்தன்மை நீக்கப்பட்ட தேங்காய் நார் கழிவுகளைக் கொண்டு "ஈசி க்ரோ காயர் பித்'களைச் (Easy Grow Coir pith) தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வந்தோம். ஒருமுறை தொழில் நிமித்தமாக அமெரிக்காவுக்கு சென்றோம். அப்போது அங்கே எங்களிடம் இருந்து பெறப்பட்ட காயர் பித்களைக் கொண்டு அவர்கள் வீட்டு மாடியிலேயே காய்கறித் தோட்டம், மூலிகைத் தோட்டம் அமைத்து ஆர்கானிக் காய்கறிகளை வளர்த்திருந்தார்கள். அதைப் பார்க்கவே மிகவும் ஆசையாக இருந்தது.

சென்னை வந்ததும் எங்கோ, யாருக்கோ செய்து கொடுக்கும் காயர் பித்களை நாமும் பயன்படுத்தலாமே என்று தோன்றியது. இது நமது ஊரின் தட்ப வெப்பநிலைக்கு சரியாக வருமா என்று வேளாண் பல்கலைக்கழகத்துக்கு சென்று அவர்களின் உதவியுடன் 2 ஆண்டுகள் முழு பரிசோதனைச் செய்தோம். இதற்காக புதிதாக UV Treat (Ultra Voilet) நீக்கப்பட்ட (Poly Propline Bag) பாலிதீன் பைகளை உருவாக்கினோம். இதனை வேறு இடத்தில் இருந்து தயாரித்து வாங்கிக்கொண்டோம். அதில் காயார் பித்களை வைத்து முதலில் கீரை விதைகளைப் பயிரிட்டேன். ஒரு மாதத்தில் கீரை தளதளவென்று நன்றாக வளர்ந்தது. அதைப் பறிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. பசுமையாகப் பறித்தவுடனேயே சமைத்ததால் சுவையும் கூடுதலாக தெரிந்தது.
அதன் பின்னர் தக்காளி, முள்ளங்கி, கத்திரிக்காய், முட்டைக்கோஸ் என பல காய்கறிகளையும் பயிரிட்டேன். அனைத்து செடிகளும் மிக நன்றாக வளர்ந்தது. 1-3 மாதங்களுக்குள் அனைத்துச் செடியும் காய்க்கத் தொடங்கியது. கூடவே பூச்சிகளின் தொல்லையும் வந்தது. கடையில் விற்கும் கெமிக்கல், பெர்ட்டிலைசர் கலந்த பூச்சிக் கொல்லிகளையோ, உரங்களையோ தெளிக்க மனமில்லை. காரணம் அதனை வாங்கி தெளித்தால் நாம் வளர்க்கும் காய்கறிகளிலும் கெமிக்கல் கலந்து விடும். அதனால் நானே யோசித்து இயற்கையாக காய்ந்த வேம்பு, இன்னும் சில தழைகள், கடல் பாசி, பச்சைமிளகாய், கோமியம் போன்றவற்றைப் பயன்படுத்தி பூச்சி கொல்லியாக இல்லாமல் பூச்சி விரட்டியாக தயார் செய்து உரமிட்டேன்.
இதன் மூலம் பூச்சிகளின் தொல்லை நீங்கி, விளைச்சலும் அதிகரித்து காய்கள் கொத்துக் கொத்தாக காய்த்தன. பொதுவாக மண்ணில் விளையும் கத்திரிச் செடியில் நல்ல விளைச்சல் என்றால் அது மூன்று கிலோ வரை காய்க்கும். ஆனால் இந்த வகைச் செடியில் 8-10 கிலோ வரை காய்கள் காய்க்கின்றன. அதன்பிறகு மூலிகைத் தாவரங்களை பயிரிட ஆரம்பித்தேன். அதுவும் நன்றாக விளைய ஆரம்பித்தது.
அதில் இன்சுலின் செடியையும், பார்வதி இலை செடியையும் நிறையப் பயிரிட்டேன். இந்த இன்சுலின் செடியின் சிறப்பு அதன் 2 இலைகளை தினமும் காலை, மாலை இரு வேளை சாப்பிட்டு வந்தால், இன்சுலின் ஊசி எடுத்துக் கொள்ளும் நீரிழிவு நோயாளிகள் ஒரு மாதத்திற்குள் இன்சுலின் ஊசியை நிறுத்திவிடலாம். இரண்டு மாதத்தில் சர்க்கரை நோய் முழுவதுமாக குறைந்து கட்டுக்குள் வந்துவிடும். அதுபோலவே பார்வதி இலையை 17 நாள் இரு வேளை சாப்பிட்டு வந்தால் கிட்னியில் உள்ள கல்லை கரைத்துவிடுகிறது.
இன்று பெரும்பாலான வீடுகள் டைல்ஸ் வீடுகளாக மாறிவிட்டன, இதனால் சூரிய ஒளி ரிஃப்ளக்ட் ஆகி வீட்டினுள் அனல் அதிகமாக தெரியும். மாடித்தோட்டம் அமைப்பதனால் வெப்பம் குறைந்து வீட்டினுள் ஏசி போட்டது போல் குளிர்ச்சியாக இருக்கும்.
இன்னும் சில மூலிகைச் செடிகள் இருக்கின்றன, அவற்றைப் படுக்கை அறையின் ஜன்னல் ஓரங்களில் வைத்தால் நல்ல சுத்தமான ஆக்ஸிஜன் நமக்குக் கிடைக்கும். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது, மன அழுத்தம் குறைகிறது என்பதையும் ஆராய்ந்து தெரிந்து கண்டோம்.
மேலும் இந்த வகையான ஆர்கானிக் செடிகளை வளர்க்க தண்ணீரும் அதிகம் தேவையில்லை. 2 நாட்களுக்கு ஒருமுறை 1 லிட்டர் தண்ணீர் விட்டால் போதும். தேங்காய் நார்க் கழிவு தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு ஈரப்பதத்தை நீண்ட நேரம் வைத்திருக்கும். அதுபோன்று இதனை ஓர் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதும் சுலபம். இந்த பாலிதீன் பைகள் நான்கு ஆண்டுகள் வரை உழைக்கும். ஒரே பையில் அடுத்தடுத்து வேறு பயிர்களை வைத்துக் கொள்ளலாம். புதினா, பொன்னாங்கன்னி, வல்லாரை போன்ற கீரைகளை ஒரு முறை விதைத்தால் மூன்று ஆண்டுகள் வரை விளைச்சல் எடுக்கலாம். இதனால் பண விரயம், நேர விரயம் குறைந்து மன நிறைவும் கிடைக்கிறது.
இதற்கு இருந்த வரவேற்பை பார்த்து "ஏசியன் ஆர்கானிக் காய்கறித் தோட்டம்' அமைக்கும் தொழிலைத் தொடங்கினேன். கடந்த 4 நான்கு ஆண்டுகளாக செய்து வருகிறேன். தற்போது அயர்லாந்து, நெதர்லாந்து, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறேன். இதன் மூலம் 140க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பும் வழங்கி இருக்கிறேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...