/

இணையம் மூலம் தமிழ்!

சிவகாசியைச் சேர்ந்த பொறியாளர் ரா.வெங்கடேஷ் அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார்.

News image
Updated On :25 ஜூலை 2015, 11:45 am

சிவகாசியைச் சேர்ந்த பொறியாளர் ரா.வெங்கடேஷ் அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார். அங்குள்ள தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழைக் கற்றுக்கொடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினார். அதன் விளைவால் "கூகுள் ஸ்ப்ரெட் ஷீட்' என்ற மென் பொருளை உருவாக்கினார்.

அதன் மூலமாக, கடந்த 5ஆண்டுகளாக இதன் மூலம் வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் குழந்தைகளுக்கும், வெளிமாநிலத்தில் உள்ள குழந்தைகளுக்கும் இணையம் வழியே தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.

சிவகாசியில் செயல்பட்டுவரும் தமிழ் கல்விக் கழகத்தை நிர்வாகம் செய்து வரும் அருண்குமார் மற்றும் மாரியம்மாள் கூறியதாவது:

""தமிழில் திறன் பெற்று பேசவும், எழுதவும் கற்பிக்கிறோம். அமெரிக்கா, ஜப்பான், சீனா,ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், கனடா, நார்வே, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டிலும், கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள் எங்களிடம் தமிழ் மொழியைக் கற்று வருகிறார்கள்.

வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறோம்.

வாரத்தில் அவர்கள் விரும்பும் நாள்களில், ஒரு மணி நேரம் கற்றுத் தரப்படுகிறது.

உயிரெழுத்துக்கள், நிறங்கள், பழங்கள், விலங்குகள், காய்கனி, படமும் பாடமும், ஒலிகள், எண்கள், விளையாட்டுகள் உள்ளிட்டவை அனைத்தும் கற்பிக்கப்படுகின்றன.

மாணவர்கள் எழுதியதை அவர்களின் கணினியில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா மூலம் காண்பிப்பார்கள். அதில் திருத்தம் இருந்தால் வீடியோ கான்பரன்சிங் மூலம் கூறுவோம்.

மாதத் தேர்வு, ஆண்டு தேர்வுகள் நடத்துகிறோம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறோம்.

மேலும் பல வெளிநாடுகளில் தமிழ்ச் சங்கங்கள் உள்ளன. அவர்கள் திருக்குறள் போட்டி, பாரதியார் பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவற்றை நடத்துகிறார்கள். அதில் கலந்து கொள்ள விரும்பும் பிள்ளைகள் எங்களை அணுகி போட்டிக்கு தயார்படுத்திக் கொள்கிறார்கள்.

வருங்காலத்தில் எங்கள் பாடத்திட்டத்தில் தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம், மொழியின் சிறப்பு, வாழ்க்கை முறைகளைச் சேர்த்துக் கொள்ளவிருக்கிறோம்.

பல நாடுகளில் காலை வேளையாக இருந்தால் நமதுநாட்டில் இரவாக இருக்கும். எனவே நாங்கள் தினசரி அதிகாலை 4 மணிக்கு பாடங்களை நடத்த தொடங்கிவிடுவோம். பிற்பகல் இரண்டு மணிவரை பாடங்களை நடத்துவோம்.

அந்நிய மண்ணில் வசிப்பவர்களுக்கு தமிழ் மொழியைக் கற்றுக் கொடுக்கும் பணி மனநிறைவைத் தருகிறது'' என்றார்கள் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.