இசைத் தூதுவர்கள்!

பாடகரா? இல்லை. இசை கோர்ப்பாளரா? இல்லை. இசைக்கலைஞரா? இல்லை. பாடலாசிரியரா? இல்லை.  இவரின் இசை அனுபவத்துக்கு
இசைத் தூதுவர்கள்!
Updated on
2 min read

பாடகரா? இல்லை. இசை கோர்ப்பாளரா? இல்லை. இசைக்கலைஞரா? இல்லை. பாடலாசிரியரா? இல்லை.  இவரின் இசை அனுபவத்துக்கு எல்லை இல்லை. ஆனால் இசைக்கும் இவருக்கும் சம்பந்தமில்லை. 

கோர்த்த இசையை ஒலிநாடாவில் லாகவமாக வார்த்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெற்றி கண்டவர்கள் தான் லஹரி சகோதரர்கள் மனோகர், துளசிராம். லஹரி ரெக்கார்டிங் கம்பெனி மூலம் திரையிசையை மட்டுமல்லாது, நாட்டுப்புற இசை, நாடக இசை, மெல்லிசை, இலக்கிய இசையை கர்நாடகத்தில் வெகு மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் இவர்கள்.  நூற்றுக்கணக்கான இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், இசைக்கலைஞர்கள் - லஹரி இசைத் தொழிற்சாலையை ரிஷிமூலமாகக் கொண்டவர்கள்.   இசை ஒலிப்பேழை தயாரிப்பு தவிர, தொலைக்காட்சி, மனைத்தொழில், சினிமா ஸ்டுடியோ போன்ற தொழில்களிலும் சகோதரர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சகோதரர்களில் ஒருவரான துளசிராம், இசைத்துறையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஹோம் ஈக்விட்டி மனைத்தொழில் நிறுவனம், பப்ளிக் தொலைக்காட்சி நிறுவனத்தை மனோகர் கவனித்து வருகிறார். இலக்கியத்தையும் இசையையும் கலவையாக்கி ரசிகர்களின் அன்பை வென்றிருக்கும் துளசிராம், கர்நாடகத்தவர்களால் லஹரிவேலு என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.  கன்னட இலக்கியவாணர்கள் குவெம்பு, கே.எஸ்.நரசிம்மசுவாமி, கோபாலகிருஷ்ண அடிகா, சென்னவீரகனவி, தா.ரா.பேந்த்ரே, ஜி.எஸ்.சிவருத்ரப்பா, டி.வி.குண்டப்பா, ஜி.பி.ராஜரத்தினம், சந்திரசேகர கம்பாரா, கே.எஸ்.நிசார் அகமது, என்.எஸ்.லட்சுமிநாராயணபட், சித்தலிங்கையா, தொட்டரங்கேகெளடா, பி.ஆர்.லட்சுமணராவ் உள்ளிட்டவர்களின் கவிதைகளை இசைப்பேழையாக்கி இலக்கிய எழுச்சிக்கு வித்திட்டிருக்கிறார். 

3500-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் இசைப்பேழைகள், 1.75 லட்சம் பாடல்களை கோடிக்கணக்கான இல்லங்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார். தென்னிந்திய இசை வரலாற்றில் இது சாதனையாகக் கருதப்படுகிறது.

புதியவர்களுக்கு முகவரி கொடுத்துவரும் லஹரி வேலு, தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்:

""எனது தந்தை பி.எஸ்.கோவிந்தசாமி, பின்னி ஆடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பெரிய அளவில் வருமானம் எதுவுமிருக்கவில்லை. எனது தாய் பாப்பம்மா, அந்த வருமானத்தில் மனோகர், ரமேஷ், ஆனந்த், நான் ஆகிய நான்கு சகோதரர்கள், 2 சகோதரிகளை வளர்த்தெடுத்தார். வறுமையால் குடும்பம் பலரின் அவமானங்களையும், கேலி கிண்டல்களை சந்தித்து வந்தது. இதனால் வாழ்க்கையில் நேர்மையாக முன்னேற வேண்டும், வளரும் போது யாரையும் புண்படுத்தக்கூடாது என்ற உறுதியும் எங்களது அடிமனத்தில் வேர் ஊன்றி வளர்ந்தது.   குடும்பத்தை நடத்த எனது அண்ணன் மனோகர், சிறிய கடையில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது கேசட் பிரபலமாகிவந்த காலம். 1974-இல் 500 ரூபாய் கடன் வாங்கி காலிகேசட்களை விற்கத் தொடங்கினார். அந்த தொழிலில் நாங்களும் ஈடுபட தொடங்கினோம்.

காலிகேசட்டில் பிரபல பாடல்களை பதிவு செய்து விற்க ஆரம்பித்தோம். அது மெல்ல விரிவடைந்து 1980-இல் இசைப்பதிவு நிறுவனமாக வடிவம் பெற்றது. ஆரம்ப காலத்தில் எதிர்கொண்ட சவால்களை இப்போது நினைத்தாலும் கண்களில் நீர் கசியும்.   கன்னடப்படங்களின் ஒலிப்பேழை உரிமையைப் பெற்று ஒலிப்பேழை விற்பனையில் ஈடுபட தொடங்கினோம். அந்த தொழில் வேகமாக வளரவே எங்கள் வளர்ச்சியும் வேகமாக அமைந்தது. 1985-இல் சங்கர்-கணேஷ் இசையில் வெளியான "அசம்பாவா' கன்னடப்படம் மற்றும் விஜயானந்த் இசையில் வெளியான "நான் அடிமை இல்லை' தமிழ்ப்படமும் கைகொடுத்தன. 1991-இல் ஏ.ஆர்.ரகுமானின் "ரோஜா' படத்தின் தெலுங்கு இசை உரிமை கிடைத்தது. தமிழில் ரஜினி நடித்து இளையராஜா இசையில் வந்த "தளபதி' இசை உரிமையைப் பெற்றோம். இதுபோன்ற பல வெற்றிப்படங்கள் எங்கள் வளர்ச்சிக்கு வித்தாக அமைந்தன.  கன்னட இலக்கியங்களை இசை வடிவில் கொண்டுவந்தோம்.   இசைத் தட்டுகளில் கிடந்த பழைய பாடல்களைக் கேசட்களாக வெளியிட்டோம். இதற்கு  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. 2 ஆயிரம் திரைப்படங்களின் இசைப் பேழைகளை வெளியிட்டுள்ளோம். ஹம்சலேகா இசையில் வந்த பிரேமலோகா கன்னடப்படத்தின் ஒலிப்பேழைகள் கர்நாடகத்தில் விற்பனையில் சாதனை படைத்தன. 36 லட்சம் கேசட்களை விற்றோம்.

எங்களது சொந்த ஊர்  குடியாத்தம்தான். வேலை காரணமாக எங்கள் தந்தை பெங்களூருவில் குடியேறினார். வறுமையில் வளர்ந்த நாங்கள், என்றைக்கும் எங்கள் ஆரம்பத்தை நினைத்து பார்க்கத் தவறுவதில்லை. கடின உழைப்பு, நேர்மை தான் எங்கள் வெற்றியின் சூத்திரங்கள். இசைக் கனவுகளோடு எங்களை நாடிவரும் இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள், கவிஞர்களின் படைப்புகளை வெளியிட்டு ஊக்குவிக்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com