புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

எடிட்டிங் துறைக்கு பெண்கள் வரவேண்டும்!

பெண்கள் போட்டோ ப்ராஸஸிங் கற்றுக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதால் எடிட்டிங் துறைக்கு வந்தேன். நேற்றுதான் ஃபீல்டுக்கு வந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ளேயே 15 ஆண்டுகள் ஓடிப்போச்சு'' என்கிறார் ராஜ் டிவியில் எடிட்டராக வேலை செய்யும் சாந்தி ஆனந்தன்.

News image
Updated On :14 ஜூன் 2015, 12:58 pm

ஸ்ரீதேவி குமரேசன

பெண்கள் போட்டோ ப்ராஸஸிங் கற்றுக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதால் எடிட்டிங் துறைக்கு வந்தேன். நேற்றுதான் ஃபீல்டுக்கு வந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ளேயே 15 ஆண்டுகள் ஓடிப்போச்சு'' என்கிறார் ராஜ் டிவியில் எடிட்டராக வேலை செய்யும் சாந்தி ஆனந்தன். இவர் தொலைக்காட்சித் துறையில் எடிட்டராக வந்த முதல் பெண் என்கிற பெருமை பெற்றவர். பல துறைகளில் பெண்கள் வந்துவிட்ட போதிலும் எடிட்டிங் துறையில் மட்டும் மிக குறைவாகவே பெண்கள் பணியில் இருக்கிறார்கள். இது குறித்து அவரிடம் பேசினோம்:

""எனக்கு பூர்வீகம் வேலூர் அருகில் உள்ள காட்பாடி. ஆனால் அப்பாவுக்கு ஊட்டியில் உள்ள "இந்துஸ்தான் போட்டோ பிலிம்' நிறுவனத்தில் வேலை என்பதால் சிறுவயது முதல் வளர்ந்ததெல்லாம் ஊட்டியில்தான். திடீரென அவருக்கு சென்னை அம்பத்தூரில் உள்ள கிளைக்கு மாற்றம் தந்தார்கள். அதனால் சென்னை வந்தோம்.

அப்போது நான் ப்ளஸ் 2 முடித்துவிட்டு, அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்த நேரம். அப்பா போட்டோ பிலிம் ப்ராஸஸிங் கற்றுக்கொள்ளும்படி அவரது நிறுவனத்திற்கே அழைத்துச் சென்றார். ஆனால் போட்டோ ப்ராஸஸிங் என்பது இருட்டறையில் செய்ய வேண்டிய வேலை. அதனால் பெண்களுக்கு அனுமதி இல்லை என்றனர். பிறகு எடிட்டிங் கற்றுக்கொள்ளும்படி திரைப்படக் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.

அதுவரை பிலிம் பற்றியோ, எடிட்டிங் பற்றியோ எதுவுமே எனக்குத் தெரியாது. எடிட்டிங் துறைபற்றி படிக்க ஆரம்பித்தவுடன் அதில் ஆர்வம் ஏற்பட்டது. நிறைய புது புது உத்திகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும் வந்தது. இந்தத் துறையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அந்த நேரத்தில்தான் தொலைக்காட்சிகள் தோன்றிக் கொண்டிருந்த நேரம்.

1994-இல் படித்து முடித்ததும் ஃப்ரிலேன்ஸராக சில சேனல்களில் வேலை பார்த்தேன். நிரந்தர வேலையில் ஏதாவது ஒரு மீடியாவில் சேர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்தகால கட்டத்தில் எடிட்டிங் துறையிலோ, டெக்னிக்கல் துறையிலோ அவ்வளவாகப் பெண்கள் இல்லை. காரணம், பெண்கள் இரவு நேரங்களில் வேலை செய்ய மாட்டார்கள். அவர்களை இருக்கும்படி சொல்லவும் முடியாது என்று யோசித்தார்கள். எளிதில் எந்த மீடியாவிலும் வேலை கிடைக்கவில்லை.

அந்த நேரத்தில்தான் ராஜ் டிவியில் வேலை கேட்டு சென்றேன். என் திறமையைப் பார்த்து பொறுப்பாக வேலை செய்வேன் என்ற நம்பிக்கையில் வேலை கொடுத்தார்கள்.

ஆரம்ப காலத்தில் சில நாள் எடிட் ஷூட் இருந்தால் இரவு நேரத்தில் தங்கி வேலை செய்ய வேண்டியது வரும். அந்த நேரங்களில் என் வீட்டில் இருந்து என் அண்ணனாவது அல்லது வேறு யாராவது எனக்குத் துணையாக வந்து இருப்பார்கள். அதுபோன்ற சமயத்தில்தான் மிகவும் சிரமமாகவும், சவாலாகவும் இருக்கும். இதைத் தவிர தொழில் சார்ந்து வேறு எந்த பிரச்னையும் நான் சந்திக்கவில்லை.

ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த "ஊர் வம்பு', "அகட விகடம்', "ராஜ் கீதம்' போன்ற நிகழ்ச்சிகளை எடிட் செய்திருக்கிறேன். தற்போது "ராஜ் கீதம்' கவனித்து வருகிறேன். இது தவிர பிரபலங்களின் நேர் காணலும் அவ்வப்போது கவனிப்பேன். சமீபத்தில் "ஐ' படத்திற்காக நடிகர் விக்ரமின் நேர்காணல் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியிருந்தோம். அதனை பார்த்துவிட்டு நிறையபேர் பாராட்டு தெரிவித்தார்கள்.

அந்தக் காலத்தில் செல்லுலாய்டில் வேலை செய்வது ரொம்ப சவாலாக இருக்கும். ஆனால் இப்போது எல்லாமே டிஜிட்டல் மயம் ஆகிவிட்டதால் சுலபமாகத்தான் இருக்கிறது.

தற்போது நிறையப் பெண்கள் விஸ்காம் படிக்கிறார்கள். ஆனாலும் எடிட்டிங் துறையில் பெண்கள் அவ்வளவாக வராதது வருத்தமாகவே இருக்கிறது. சில பெண்கள் விஸ்காம் படிப்பின் மீது புரிதலே இல்லாமல் எடுத்து படிக்கிறார்கள். பின்பு புரிதல் ஏற்படும்பொழுது திருமணம் ஆகி செட்டிலாகி விடுவதால் வேலைக்கு வரத் தயங்குகிறார்கள்.

அதே சமயம் மீடியா நிறுவனங்களும் டெக்னிக்கல் சைடில் பெண்களை வேலைக்கு அமர்த்தத் தயங்குகிறார்கள். காரணம் ஷிப்ட் மாறி மாறி வரும் என்பதால், அந்த நிலைமாறி பெண்களும் டெக்னிக்கல் துறையில் நிறைய வரவேண்டும் என்பது எனது ஆசை'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.