

சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டைக்கு அருகில் "நீவா' நதிக்கரையில் பாடல் பெற்ற திருத்தலமாகிய திருவல்லம் அமைந்துள்ளது. தொண்டை நாட்டில் பத்தாவது திருத்தலமாக இது விளங்குகிறது. வேலூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் எழுந்தருளி அருள்புரியும் இறைவன், இறைவியை வில்வநாதீசுவரர், வல்லாம்பிகை எனப்போற்றி வழிபடுகின்றனர். மேலும் இத்தலம் "வில்வாரண்யம்' எனவும் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. வில்வ மரங்கள் நிறைந்த இக்காட்டில் புற்றுக்குள் சிவபெருமான் லிங்க வடிவிலே எழுந்தருளியிருந்தார். பசு ஒன்று நாள்தோறும் புற்றின் மீது பால் சொரிந்து வந்தது. நாளடைவில் புற்று கரைந்து சிவபெருமான் வெளிப்பட்டதாக இத்தல புராணம் கூறுகிறது. திருஞான சம்பந்தர் பெருமான் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் பெருமான் "திருவலமேவும் பெருமாளே' என்று போற்றுவதைக் காணலாம். மேலும் ஸ்ரீலஸ்ரீ சிவானந்த மௌனகுரு சுவாமிகளின் அருளாலும் திருவல்லம் புகழ் பெற்று விளங்குகிறது.
திருவல்லம் கோயிலின் தொன்மைக்குச் சான்றாக முப்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பல்லவ மன்னர்கள்அவர்களது சமகாலத்தில்ஆட்சி செய்த கங்கமன்னன் பிரிதிவிபதி, பாண அரசர்கள் ஆகியோர் இக்கோயிலின் சிறப்பான வழிபாட்டிற்கு தானம் அளித்துள்ளனர். இத்தலம் கல்வெட்டுகளில் "தீக்காலிவல்லம்' எனப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது. மேலும் ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜன், வீரபாண்டியன், விஜயகண்ட கோபாலன் போன்ற மன்னர்கள் இக்கோயிலைப் போற்றியுள்ளனர் என்பதையும் கல்வெட்டுகளில் இருந்து அறியலாம்.
திருவல்லம் கோயிலுக்கு தெற்கே கம்பராஜபுரம் என்று அழைக்கப்படும் பகுதி அமைந்துள்ளது. திருவல்லம் கோயிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் கங்க அரசன் விஜயந்தி விக்கிரமவர்மன் என்ற அரசன் குறிக்கப்படுகிறான். இம்மன்னன் பெயரால் "கங்கராஜபுரம்' என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி இன்று கம்பராஜபுரம் என அழைக்கப்படுவதை ஊகிக்க முடிகிறது.
கம்பராஜபுரம் பகுதியில் பனந்தோப்பு என்ற பகுதி உள்ளது. இங்கு விளை நிலங்களுக்கு நடுவில் சிதிலமடைந்த சிவன் கோயில் பூமியில் புதைந்த நிலையில் காணப்படுகிறது. இக்கோயிலை ஊரார் "கறுப்புக் கோயில்' என அழைக்கின்றனர். இக்கோயிலின் கற்கள் கறுப்பு நிறமாகக் காணப்படுவதால் இவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம்!
கோயிலின் மீது மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. மரங்களின் வேர்களால் கட்டடப் பகுதிகள் கீழே விழுந்து சிதறிக் கிடக்கின்றன. கருவறை முற்றிலும் அழிந்துவிட்டதால் சிவலிங்கம் இல்லை. கருவறைக்கு முன் உள்ள மண்டபத் தூண்கள் உருளை வடிவத்துடன் காணப்படுகின்றன. கோயிலுக்கு வெளியே உடைந்த நிலையில் தட்சிணாமூர்த்தி, நந்திதேவர் சிற்பங்கள் உள்ளன.
தெற்குப் பகுதியில் ஒரு வாயிலும் கிழக்குப் பகுதியில் ஒரு வாயிலும் அமைந்துள்ளன. கருவறையின் உத்திரப் பகுதியில் சிறு சிறு சிற்பங்களாக முனிவர் வழிபடும் காட்சி, நடனமாடும் நங்கை போன்றவை அழகு செய்கின்றன. ஓரிடத்தில் மன்னன் ஒருவன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற புடைப்புச் சிற்பமும் காணப்படுகிறது. இம்மன்னன் இக்கோயிலைக் கட்டியிருக்க வேண்டும். கருவறை வெளிச்சுவரில் காணப்படும் தேவகோட்டத்திற்கு மேலே அழகிய வேலைப்பாடு மிக்க மகர தோரணம் காணப்படுகிறது. இதன் நடுவே இந்திரன் சிவலிங்கத்தை வழிபடும் காட்சி, அடுத்து இசைக் கருவிகள் வாசிக்க அழகிய பெண் ஒருத்தி நடனமாடும் காட்சி அழகிய சிற்பங்களாக விளங்குகின்றன. இக்கோயிலுக்கு விக்கிரமசோழன் (கி.பி.1118 - 1135) வழிபாட்டிற்காக நிலம் தானமாக வழங்கிய செய்தியினை இரு கல்வெட்டுகள் குறிப்பிடுவதாக 1878-இல் படியெடுக்கப்பட்ட கல்வெட்டு அறிக்கை குறிப்பிடுகிறது. கல்வெட்டு பொறிக்கப்பட்ட கற்கள் தற்பொழுது உடைந்து கீழே விழுந்து கிடக்கின்றன.
அழகிய சிற்பங்கள், சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் கல்வெட்டுகள் காணப்படும் இக்கோயிலின் சில பகுதிகள் பூமிக்கு கீழே புதையுண்ட நிலையில் காணப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலைப் புதுப்பித்தால் மிகச்சிறந்த வழிபாட்டுத்தலமாக விளங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.