

மாமி எங்க வீட்டிலே கொலு வெச்சிருக்காங்க, அவசியம் எல்லாரும் வரணும்'' என்று என் தாயார் ஜீவாட்சரி சொல்லிக் கொடுத்த வாசகங்களைத் தவறில்லாமல் சொல்லுவேன்.
தாழம்பூவை அழகாகக் கத்தரித்து என் சடையில் வைத்துத் தைத்து, அணிகலன்களை அணிவித்து, பட்டுப்பாவாடை, சட்டை, அதன்மீது பின்களை வைத்து ஒரு டிஷ்யு துணியை முக்காடாக்கி விட, ராதையாகி விடுவேன். என் அண்ணனுக்கு கிருஷ்ணன் வேஷம். அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் சென்று எங்கள் வீட்டு கொலுவுக்கு வரச்சொல்லி அழைப்போம். மொத்தம் பதினோரு படிக்கட்டுகளில், பொம்மைகள் கொலுவிருக்கும். இவற்றுக்குப் பக்கத்தில் தரையில் ஆற்று மணலைப் பரப்பி, கடுகைத் தெளித்து விடுவார் என் தந்தை சுப்ரமணியன். பிறகு குளம் கட்டி, மலைபோல் எழுப்பி அதன்மீது பொம்மை கோயிலை வைப்பார். கொலு ஆரம்பிப்பதற்கு முன் கடுகு அழகாக வளர்ந்து இலைகளைப் பரப்பி நிற்கும். ஒரு கிராமத்தில் மலைமீது கோயில் என்று அமைந்திருக்கும்.
ஒன்பது நாட்களுக்கும் எங்கள் வீட்டு கொலுவைக்காண நண்பர்களும், உற்றார் உறவினர்களும் வருவார்கள். என் அருமை பெரிய அன்னை ராணியம்மாள், தங்க மனசுக்காரி. அறுசுவை உணவுகளை அன்போடு சமைத்துப் பரிமாறும் தங்கக் கைகளுக்குச் சொந்தக்காரி. ஒவ்வொரு நாளும் விதவிதமான சுண்டல்களைச் செய்து வருபவர்களுக்கு எல்லாம் தேங்காய், மஞ்சள், வெற்றிலை பாக்கோடு கொடுப்பார்கள்.
"சொல்லுக் கடங்காவே - பராசக்தி
சூரத்தனங்க ளெல்லாம்
வல்லமை தந்திடுவாள் - பராசக்தி
வாழி யென்றே துதிப்போம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் - பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.'
என்ற பாரதியாரின் பாடலை என் தந்தையார் மனப்பாடம் பண்ணி பாடச்சொல்ல அதை நாங்கள் ஓங்கிக் குரல் கொடுத்துப் பாடுவோம்.
இப்படித் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் கொலுவை சிறுவயது முதல் ஆத்மார்த்தமாக அனுபவித்த எனக்கு இந்தியாவில் மற்ற மாநிலங்களில் கொண்டாடப்படும் நவராத்தியைக் காண வேண்டும் என்ற ஆவல் நீறுபூத்த நெருப்பாக நெஞ்சில் கனன்றுகொண்டே இருந்தது.
தமிழ்நாட்டில் கொலு என்றும், மைசூரில் தசரா, வடநாட்டில் நவராத்திரி என்றும் கொண்டாடப்படும் பண்டிகைக்கு மூலம் ஒன்றுதான். நவ என்றால் ஒன்பது ராத்திரி என்றால் இரவு. இப்படி ஒன்பது ராத்திரிகள் சக்தியை வழிபட்டு நன்மை பெறுவதே இந்த நவராத்திரி திருவிழாவின் குறிக்கோளாகும்.
தன்னையே நினைத்து பலகாலம் தவம் இயற்றிய மகிஷாசுரனின் பக்தியை மெச்சி தேவர்கள் மற்றும் அசுரர்களால் அவனுக்கு அழிவில்லை என்ற வரத்தை சிவபெருமான் தந்துவிட, பிறகு அவனுடைய அட்டகாசத்தைப் பொறுக்கமுடியாமல் பிரம்மா, விஷ்ணு, சிவனுடைய சக்திகளை ஒன்றாகச் சேர்த்து உருவான துர்காதேவி, அந்த மகிஷாசுரனை அழித்த நாளை விஜயதசமி என்று கொண்டாடுகிறோம். இப்படி கெட்டதை அழித்து நல்லதை நிலைநாட்டிட சக்தியை, துர்கையைப் போற்றி அவளுடைய எட்டு வடிவங்களை, முன்வருகின்ற எட்டு நாட்களுக்கும் ஆராதனை செய்கிறோம்.
வடநாட்டில் துர்காதேவியை வழிபடுவதோடு, ராமரையும் வணங்குகிறார்கள். விஜயதசமி அன்று தேவியின் அருளோடு ராமர், ராவணனை வதம் செய்தபின் மறுநாள் அவர் சீதையோடு அயோத்தியா திரும்பியதாகச் சொல்லப்படுகிறது. ஆகையினால் விஜயதசமி அன்று பெரிய மைதானங்களில் பத்து தலைகளைக் கொண்ட ராவணனின் மிகப்பெரிய உருவ பொம்மைகளை நிறுவி, ராமர் விடும் அம்பு (அதில் தீப்பந்தம் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும்) ராவணைனைத் துளைக்க, துணிபோன்ற பலவிதமான எரியும் தன்மைகொண்ட பொருட்களால் ஆன அந்த ராவணனின் உருவம் பற்றி எரிந்து அழிய சுற்றித் திரண்டிருக்கும் மக்கள், தீயதை, நல்லது வெற்றிகொள்வதைப் பார்த்து கைகளைத் தட்டி மகிழ்வார்கள். "ராமலீலா' என்று அரங்கேறும் இந்த நிகழ்ச்சியை 170 வருடங்களுக்கு முன் தொடங்கி வைத்தவர் மொகலாயப் பேரரசர் பகதூர்ஷா ஜாபர் என்கின்ற தகவல் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு ஏற்ப இந்தியாவின் 29 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும் வாழும் மக்கள் பலவிதமான மொழிகளைப் பேசினாலும், பல சமயங்களைப் பின்பற்றினாலும் இந்து சமயத்தவர்கள் என்று வரும்போது நவராத்திரியை பாகுபாடுகளைக் கடந்து கொண்டாடுவதைக் கண்டு அதிசயித்திருக்கிறேன்.
மைசூரில் நான் கண்டு ரசித்த தசரா பெருவிழாவும், அகமதாபாத்தில் மக்களோடு மக்களாக சேர்ந்து நவராத்திரியின்பொழுது ஆடி மகிழ்ந்த தாண்டியா நடனமும், இந்த இரண்டு இடங்களில் எனக்குக் கிடைத்த நெஞ்சை விட்டு என்றும் நீங்காத அனுபவங்களும் இந்த விழாக்களைப் பற்றி எழுத என்னைத் தூண்டுகிறது.
மைசூருக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அழகான இயற்கையின் வெளிப்பாடுகள், அன்பான மக்கள், சரித்திரப் புகழ் பெற்ற இடங்கள், இவற்றுக்குமேல் மைசூர் மசால்தோசை, மெதுவடை, இந்த வடை சென்னையில் கிடைக்கும் மெதுவடையைவிட மூன்று மடங்கு பெரியதாக இருக்கும். சுவையிலும் மென்மையிலும் நாக்கின் சுவை மொட்டுக்களை சும்மா அதிருது இல்லே என்று அதிர வைக்கும். பிறகு என்ன மைசூர் என்றாலே குஷியோடு புறப்பட்டு விடுவேன்.
மைசூர் தசராவைப் பார்க்க வேண்டும் என்ற என்னுடைய நெடுநாளைய ஆசை 2015-ஆம் வருடம் நிறைவேறியது. மைசூர் தசராவின் முடிவில் நடக்கும் பிரம்மாண்டமான ஊர்வலத்தையும், டார்ச்லைட்டு பரேடையும் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்து, தசரா வைபவத்தின் ஐந்தாவது நாள் சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு சென்று அங்கிருந்து காரில் மைசூருக்குப் பயணப்பட்டோம்.
நாங்கள் மைசூர் நகரத்தின் மத்திய பகுதியில் இருந்த, எங்களுக்காக புக் செய்யப்பட்டிருந்த ஹோட்டலை நோக்கி சென்றபோது கண்ட காட்சிகள்...
(தொடரும்...)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.