

"ஆறு எனக்குப் பிடித்தமான ஒன்று, ஏனெனில் அது வாழ்க்கையின் தத்துவத்தைப் போதிக்கின்றது. மிக உயர்ந்த வாழ்க்கைப் பயணத்தின் சின்னமாக திகழ்கின்றது. ஆறு ஒரு மூலத்தில் தொடங்குகின்றது, பிறகு தவறாமல் அந்த மூலத்திற்கே திரும்புகின்றது. இது ஒவ்வொரு முறையும் நடக்கிறது. நாமும் இதிலிருந்து மாறுபட்டவர்கள் அல்ல'.
- ஜெப்ரி ஆர். ஆண்டர்சன்
(Jeffrey R. Anderson)
""வளைந்து ஓடும் பெரிய ஆறுகளையும், விரிந்து பரந்த கடல்களையும் பார்த்தால் என் மனம் எல்லையில்லா ஆனந்தத்தில் திளைத்துவிடும். பசுபிக் பெருங்கடல், இன்டியன் ஓஷன், கருங்கடல், டெட் சீ என்று எண்ணிக்கையில் அடங்காத கடல்களையும் ரெயின், நைல், ஜீலம், தேம்ஸ், கங்கை, காவேரி, கோதாவரி என்று பட்டியல் இட்டால் நீளும் ஆறுகளையும் பார்க்கும் பெரிய பாக்கியத்தை இறையருளால் கிடைக்கப்பெற்றேன். சந்தர்ப்பம் கிடைத்தால் மாற்று உடையைப் பற்றிய கவலையைப் புறம் தள்ளி, குளித்து மகிழ்ந்திருக்கிறேன். குளிக்கும் சந்தர்ப்பம் சீதோஷ்ண நிலை காரணமாக அமையாவிட்டால், சிறிது தண்ணீரை குவிந்த என் கரங்களினால் முகர்ந்து தலையில் தெளித்துக் கொண்டிருக்கிறேன்.
ஜீவ நதிகள், மனித குலத்தின் ஜீவனை மட்டும் அல்ல, உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. இந்தப் பிரபஞ்சம், அது தாங்கும், கிரகங்கள் நம்முடைய சூரிய குடும்பம், அதில் வாழும் உயிரினங்கள் நம்முடைய உடல் இவையாவையுமே ஐந்து மூலப் பொருட்களாக உருவாக்கப் பட்டுள்ளது. தண்ணீர், வானம், பூமி, காற்று நெருப்பு என்ற இவற்றை பஞ்சபூதங்கள் என்கிறோம். இதையே, அண்டத்தில் உள்ளது. பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர் ஞானிகள்.
பூமியில் 30% நிலம் என்றால் மீதி 70% நீரால் சூழ்ந்திருக்கிறது. நம் உடலில் தண்ணீரே பிரதானமாக 60% ஆக்கிரமித்து இருக்கிறது. உணவு இல்லாமல்கூட சிறிது காலம் வாழலாம். ஆனால் தண்ணீரில்லாமல் வாழமுடியாது என்பதை மனிதகுலம் நன்றாக உணர்ந்திருந்தது. அதனால் உலகின் தலைசிறந்த நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரைகளின் ஓரமாகவே அமைந்திருந்தன.
டைகரிஸ் நதியின் கரையில் மெசபோடேமியன் நாகரிகம், நைல் நதி ஓரம் எகிப்திய நாகரிகம், யாங்ட்சி (வஹய்ஞ்ற்க்ஷ்ங்) நதியின் பகுதிகளில் சீனத்து நாகரிகமும் வளர்ந்தன.
7,000 ஆண்டுகள் பழமையான எல்லா நாகரிகத்திற்கும் முதன்மையாகத் திகழ்வது இன்டஸ் பள்ளத்தாக்கு நாகரிகம். இந்தியாவின் தென்முனையாக குமரிக்கண்டம், கடலால் அரிக்கப்பட்டபொழுது, அங்கு வாழ்ந்த தமிழர்கள் அங்கிருந்து குடிபெயர்ந்து சிந்து நதிக்கரையில் குடியேறினர். அதனால்தான் உலகிலேயே முதுமையான மொழி தமிழ் மொழி என்கிறார்கள்.
உலகின் தலைசிறந்த நாகரிகத்தைச் சேர்ந்த நம் இந்திய மக்கள், இயற்கை வழங்கிய எல்லா பரிசுகளையும், கடவுள் தந்த பரிசாகப் போற்றி வணங்கினர். அதிலும் ஜீவாதாரமான நீர்நிலைகளை, ஆறுகளை "மா' என்று பெற்ற அன்னைக்கு இணையாகக் கொண்டாடினர். இந்தியாவில் 400-க்கும் அதிகமான ஆறுகள் ஓடுகின்றன. அதில் பல வற்றாத ஜீவ நதிகள். நம்முடைய சனாதன தர்மத்தின்படி ஒரு நதி அல்ல. தண்ணீரைச் சுமக்கும் எல்லா நிலைகளுமே வருண தேவனின் வடிவமாக வழிபட வழிவகுத்திருக்கப்பட்டிருக்கிறது. இது கீழ்கண்ட ஸ்லோகத்தின் மூலம் உறுதியாகிறது.
"கங்கே சே, யமுனே, சைவ கோதாவரி, சரஸ்வதி, நர்மதே, சிந்து, காவேரி ஜலேஸ்மின் சன்னிதிம் குரு'.
ஒரு சொம்பில் தண்ணீரை வைத்துக்கொண்டு, கங்கா, யமுனா, நர்மதா, சிந்து, கோதாவரி, காவேரி தாய்களே புனித காரியத்திற்காக உபயோகப்படுத்த இருக்கும் இந்த நீரில் வந்து சேர்ந்து இதனை புனிதமாக்குங்கள் என்று வேண்டுவது பிறகு அந்த நீரைக் கொண்டு புனிதநீராடுவது அல்லது புனித காரியங்களுக்காக பயன்படுத்துவது என்று செயல்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவின், தென்பகுதியைச் சேர்ந்த நதி என்று இல்லாமல், வடக்கு, கிழக்கு, மேற்கு நதிகளை சம அந்தஸ்து கொடுத்து சேர்த்துக் கொண்டதனால் தான், இந்தியாவைப் பல சமயத்தைச் சேர்ந்தவர் தாக்கி, வென்று ஆண்டபொழுதும் நம்முடைய கலாசாரத்தை அழிக்க முடியவில்லை.
உலகிலேயே மிகவும் பெரிய இந்து சமய விழாவும், பல பிரிவுகளைச் சேர்ந்த சந்நியாசிகளும் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றுகூடி கொண்டாடி மகிழ்கின்ற வட இந்திய திருவிழாவான கும்பமேளாவும் ஆற்றின் கரைகளிலேயே கொண்டாடப்படுகின்றன. நாசிக் நகரத்தின் கோதாவரி ஆற்றின் கரையிலும், உஜ்ஜயினியின்ஷிப்ரா (Shipra) ஆற்றிலும், ஹரித்துவாரின் கங்கையிலும், கங்கை, யமுனா, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் அலகாபாத்தின் பிரயாகிலும் கும்பமேளா நடந்தேறுகிறது. இந்த சமயத்தில் இந்த புனித நதிகளில் எல்லாம் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி தங்கள் பாவங்களைத் தொலைக்கிறார்கள். பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு இடம் என்ற சுழற்சி முறையில், இந்த கும்பமேளா அரங்கேறுகின்றது.
அதுபோன்று, மகாமக பெருவிழாவும், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழகத்தில் உள்ள கும்பகோணத்தில், கும்பேசுரர் குடிகொண்டு இருக்கும் ஆலயத்திற்கு எதிரில் உள்ள மகாமக குளத்தில் அரங்கேறுகிறது. இங்கும் குளத்தின் தண்ணீரே பிரதானமாக விளங்குகின்றது. குளத்தில் இருக்கும் 21 கிணறுகளுக்கும் இந்தியாவின் புனித நதிகளின் பெயரே சூட்டப்பட்டிருக்கிறது. மகாமகத்தின்பொழுது, இந்த குளத்து நீரில் நீராடினால் தங்கள் பாவங்கள் தொலைந்துபோகும், புதுவாழ்வு தொடங்கும் என்று இந்து சமயத்தவர் நம்புகிறார்கள்.
ஜோதிட, நாட்குறிப்பில் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குருபகவான் சிம்ம ராசியில் இருக்கும் பொழுது வருவது மகாமகமாக இருக்கிறது.
இதைப் போன்று குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது.
மேஷம் - கங்கை
ரிஷபம் - நர்மதா
மிதுனம் - சரஸ்வதி
கடகம் - யமுனா
சிம்மம் - கோதாவரி
கன்னி - கிருஷ்ணா, தமிழ்நாட்டில் வேதகிரீஸ்வரர் கோயில் சங்கு தீர்த்த குளம்,
துலாம் - காவேரி
விருச்சிகம் - பீமா, தமிழ்நாட்டில் தாமிரபரணி,
தனுசு - தப்தி (Tapti) , பிரம்மபுத்திரா
மகரம் - துங்கபத்திரா,
கும்பம் - சிந்து (Indus)
மீனம் - பிரஹிடா (Pranhita)
இப்படி பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்தந்த ராசிக்கு ஏற்ற நதியில் புஷ்கர திருவிழா நடைபெறுகிறது. இப்படி 12 வருடங்களுக்குப் பிறகு, இந்த வருடம் 2018, குருபகவான் விருச்சிக ராசிக்கு வந்தபொழுது, தமிழ்நாட்டில் தாமிரபரணி நதியில் புஷ்கரம் கொண்டாடப்பட்டது. இதில் அது 144 -ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாபுஷ்கரமாக அமைந்துபோனது, இந்த சமயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு ஜாக்பாட் என்றால் மிகையாகாது.
- தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.