

"முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா..? என்ற கேள்வி உலகெங்கும் பிரபலம். அதுபோலச் செடியிலிருந்து விதை வந்ததா... அல்லது விதையிலிருந்து செடி பிறந்ததா' என்ற கேள்வியும் கிட்டத்தட்ட இடியாப்ப சிக்கல்தான். இந்தச் சிக்கலுக்கு எதிர் புதிர் போடுகிறார் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ராஜரத்தினம். "விதையும் வேண்டாம்... செடியும் வேண்டாம்... இலை இருந்தால் போதும்' லட்சக்கணக்கான செடிகளை உருவாக்கலாம் என்று தனது புதிய யுக்தியினால் ராஜரத்தினம் இன்னொரு பசுமைப் புரட்சி செய்து வருகிறார்.
ஐம்பது வயதாகும் ராஜரத்தினம் தொடர்கிறார்:
"" செடியை எப்படி வளர்ப்பது என்று பள்ளியில் படித்திருப்போம். ஒன்று விதை வேண்டும். அல்லது தண்டாவது வேண்டும். விதையை அல்லது தண்டை மண்ணில் நட்டு நீர் ஊற்றி வந்தால் சில நாட்களில் செடி முளைக்கும். இதுதான் அடிப்படை விஞ்ஞானம். ஆனால், இலைகளை விதையாக்கி அதில் செடி வளர்ப்பதுதான் எனது யுக்தி. இந்த யுக்தியை மல்லிகை, வெற்றிலை செடி வகைகளுக்கும், கொய்யா, நாவல், நோனி பழமர வகைகளில் வெற்றியைத் தந்துள்ளது.
பதியம் போடுவதன் மூலம், செடிகளைப் பெருக்குவதும், தண்டுடன் இன்னொரு தண்டை இணைத்து வளர்க்கும் ஒட்டு முறையும், செல்களை அடிப்படையாக வைத்துச் செய்யப்படும் "டிஷ்யூ' கல்ச்சர் என்பதும் வெவ்வேறானவை. எனது முறையில் விதை என்ற பேச்சிற்கு இடமே இல்லை. உற்பத்தி செலவும் குறைவு. ரசாயன சேர்க்கையோ, ரசாயன உரங்களோ எதுவும் இல்லை.
நான் ஐந்தாம் தலைமுறை விவசாயி. இதுவரை விவசாயிகள், வேளாண்மை ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பின் உறுப்பினர்கள் இன்றி சுமார் ஆயிரம் பேருக்கு இலவச பயிற்சி அளித்துள்ளேன். புதுமையான செடி பெருக்க யுக்தியைக் கண்டு பிடித்ததற்காக "சின்னி கிருஷ்ணன் விருது' எனக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டது. விவசாயம் எங்களின் பாரம்பரிய தொழில் என்பதினால் பட்டப்படிப்புப் படித்திருந்தாலும் பாரம்பரியத் தொழிலுக்கே வந்துவிட்டேன். விவசாயத்தை முழு நேரத் தொழிலாகவும் ஏற்றுக் கொண்டு விட்டேன். சொந்தமாகச் செடிகளுக்குக்காக "ஈடன் நர்சரி தோட்டத்தை 1998-இல் தொடங்கினேன். இந்தியாவின் முதல் "ஆர்கானிக் நர்சரி' என்ற சான்றிதழையும் சமீபத்தில் பெற்றுள்ளது. தற்சமயம் ஆண்டிற்குப் பதினைந்து லட்சம் செடிகள் உருவாக்கும் வசதி எங்களிடம் உள்ளது. இலைகள் விதையாகும் யுக்தி இந்தியாவில் என்னால்தான் அறிமுகமானது. இந்தப் புதுமையான யுக்திக்கு காப்புரிமைக்காக மனு செய்துள்ளேன்.
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் திசு மூலம் செடி உருவாக்கும் யுக்தியைத் தெரிந்து கொள்ளப் பயிற்சி வகுப்புகளில் 2010 -இல் சேர்ந்தேன். திசுக்கள் மூலம் எளிய முறையில் பல ஆயிரம் செடிகளை உருவாக்க முடியும் என்பதைத் தெரிந்து கொண்டு நாமும் திசுக்கள் மூலம் செடிகளை உருவாக்க ஆராய்ச்சி மையம் தொடங்கலாம் என்று நினைத்த போது அதற்கான முதலீடிற்கு அதிகப் பணம் தேவைப்பட்டது. அத்தனை பண வசதி இல்லாததால் ஒதுங்கிக் கொண்டேன். குறைவான செலவில் செடிகளை உருவாக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டே இருந்தேன். திசுக்கள், விதைகள், தண்டுகள், ஒட்டு முறையினால் செடிகளை உருவாக்கலாம் என்பதையும் தாண்டி வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று முனைந்த போதுதான் இலைகளை வைத்து செடிகளை உருவாக்கினால் என்ன என்று தோன்றியது.
செடியிலிருந்து இலைகளைப் பறித்தால் சில நிமிடங்களில் வாடத் தொடங்கிவிடும் இலைகளிலிருந்து எப்படிச் செடிகளை உருவாக்குவது..? மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கலாம். இலையில் எந்த மந்திரம் சொல்லி செடியை உருவாக்குவது என்ற கேள்வி என் முன் சவாலாக விசுவரூபம் எடுத்தது.. “செடிகளில் இலைகளுக்குப் பஞ்சமில்லை. சில இலைகளைப் பறித்தாலும் தாய் செடியின் அமைப்பில் அல்லது வளர்ச்சியில் பெரிய மாற்றமோ.. பாதிப்போ வந்து விடாது என்பதை மனதில் கொண்டு தொடக்கத்தில் குண்டுமல்லி செடியில் எனது முயற்சியைத் தொடங்கினேன்.
மல்லிகைக்குத் தமிழ்நாட்டில் எப்பவும் மவுசு அதிகம். நான் பயன்படுத்தும் முறை எளிமையாகவும் இருக்க வேண்டும். அதிக செலவும் வரக் கூடாது. சாதாரணமானவர்களும் அவர்களாகச் செய்து கொள்ளும்படியும் இருக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். இலைக் காம்பிலிருந்து வேரை வரவழைக்க வேண்டும். அதற்கு இயற்கை முறையை ஆரம்பத்தில் பயன்படுத்தவில்லை. மாறாக வேர் வளர உந்துதல் கொடுக்கும் ஹார்மோன்களை மண்ணில் சேர்த்தேன். மண்ணில் தேவையான ஈரம் வெளியே இலை வாடாமல் இருக்கக் காற்றில் போதுமான ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன். பல தோல்விகளுக்குப் பிறகு வெற்றி கிடைத்தது.
இலைக் காம்பிலிருந்து வேர்கள் வளர...மேல் நோக்கி முளையும் விரிந்தது. இதற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன. வந்திருப்பது முளைதான் காம்பில் வந்திருப்பது வேர்தான் என்று கோவை வேளாண் கல்லூரியில் காட்டி உறுதி செய்தேன். இலையிலிருந்து செடியை உருவாக்கலாம் என்பது நிரூபணமாகியது. அடுத்தக் கட்டமாக இலைக் காம்பிலிருந்து வேர் விட உந்தும் ஹார்மோனைப் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் செய்ய ஒரு ஆர்வத்தில் இளநீர் நீரில் இலைகளை அரை மணி நேரம் ஊறவைத்தேன். பிறகு அவற்றைப் பிளாஸ்டிக் உறைகளில் நிரப்பப்பட்ட மண்ணில் இலைக் காம்பு மண்ணுக்குள் இருக்கும் விதமாக ஊன்றினேன். இளநீர், ஹார்மோன் செய்த வேலையைக் கச்சிதமாகச் செய்தது. இலைகளிலிருந்து செடிகளை வரச் செய்ய போதுமான ஈரமும், ஈரப்பதமும் தேவை. அதற்காக வடிவமைக்கப்பட்ட பாலிதீன் கூடாரங்கள் உண்டு. கூடாரத்திற்குள் இருக்கும் இலைகளை ஐந்து நாளுக்கு ஒரு முறை கண்காணிப்போம்.
இலைக் காம்பிலிருந்து வேர் வெளி வர ஆரம்பிக்க நான்கு ஐந்து வாரங்கள் ஆகும். அடுத்த சில வாரங்களில் முளையும் வர ஆரம்பிக்கும். அப்போது அவற்றை எடுத்து வெயிலில் வைத்தால் செடி வளர ஆரம்பித்துவிடும். ஆரோக்கியமான செடிகளை இனம் கண்டு மண்ணில் மறுபடியும் நட்டு வளர்க்க ஆரம்பிப்போம். சத்தியமங்கலம், கரூர், திருச்சி வட்டார விவசாயிகள் என்னிடம் மரக்கன்றுகளை வாங்கிச் செல்கிறார்கள். அவர்கள் அடைந்த திருப்தியின் விளைவாக எனக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் நிதி உதவியும் கிடைத்துள்ளது. பெங்களூருவில் செயல்படும் பழ மரங்களின் இந்திய ஆராய்ச்சி நிலையம், உள்ளே இளஞ்சிவப்பு நிறம் கொண்டிருக்கும் கொய்யா மரங்களைத் தமிழ் நாட்டில் பிரபலப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை என்னுடன் செய்து கொண்டுள்ளது...இந்த வகைக் கொய்யாக்கள் இதர கொய்யாக்களை விட அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இப்போதைக்கு மல்லிகை குடும்பத்தில் பலவித இனச் செடிகள், கொய்யா, நாவல், நோனி, அத்திப்பழ மரங்களை இனப் பெருக்கம் செய்வதில் கவனங்களைச் செலுத்தி வருகிறேன்..தமிழ்நாட்டில் இவற்றிற்கு நல்ல வரவேற்பும் உள்ளது'' என்கிறார் ராஜரத்தினம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.