

முல்லை பெரியார் அணை இன்றைக்கும் பென்னி குயிக்கின் நினைவுச் சின்னமாக இந்தப் பகுதி மக்களின் இதயங்களில் வாழுகிறது. பிறக்கும் குழந்தைகளுக்கு பென்னி குயிக் என்று பெயரை இன்னும் வைக்கிறார்கள்.
கர்னல் ஜான் பென்னி குயிக்கிற்கு தேனிப் பகுதியில் பல இடங்களில் சிலை வைக்கப்பட்டு மரியாதை செய்து வந்தாலும் "இங்கிலாந்தின் மைந்தனான'
பென்னி குயிக்கிற்கு இங்கிலாந்தில் சிலை ஒன்றும் இல்லை. பல முயற்சிகளுக்குப் பின் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரால் பென்னி குயிக்கின் மார்பளவு சிலை ஒன்று சமீபத்தில் 12 ஜனவரி 2019 அன்று லண்டன் நகரத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை அமைய முக்கிய காரணமாக இருந்தவர் சந்தன இப்ராஹிம் பீர் ஒலி. தேனிக்கு அருகே அமைந்திருக்கும் உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர். படிப்பதற்காக இங்கிலாந்து சென்றிருப்பவர். அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்:
"அடிப்படையில் பொறியாளராக இருந்தாலும் பென்னி குயிக் கிரிக்கெட் ஆட்டத்தில் பட்டையைக் கிளப்பியவர். அசராமல் கிரிக்கெட் ஆடி வந்ததால், பென்னி குயிக் சென்னை கிரிக்கெட் கிளப்பின் செயலாளராகவும் இருந்திருக்கிறார். 1875-இல் நடந்த ஒரு மாட்சில் இரு இன்னிங்ஸிலும் தலா ஐந்து விக்கெட் எடுத்து அப்போது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர். இலங்கையில் "காலே' நகரில் ஒரு முக்கியத் தெருவிற்கு பென்னி குயிக்கின் பெயரைச் சூட்டி இருக்கிறார்கள்.'
"ஜான் பென்னி குயிக்கின் 178 -ஆவது பிறந்த நாளை ஒட்டி இங்கிலாந்தின் "ஃபர்ம்லி' நகரில் பென்னி குயிக்கின் கல்லறை அமைந்துள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில் பென்னியின் மார்பளவு சிலையை 12 ஜனவரி அன்று திறந்துள்ளோம். "ராயல் எஞ்சீனியர்ஸ் அசோஷியேசன்' அமைப்பின் தலைவரான மேத்யூ முன்னிலை வகிக்க, இந்திய தூதரக அதிகாரியான ஏ.எஸ் ராஜன் சிலையைத் திறந்து வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் நாள், பென்னியின் சிலை,தேனி மாவட்டம் கூடலூர் நகரில் உள்ள கே.எஸ் திருமண மண்டபத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு மரியாதை செய்த பிறகே சிலை இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவரது கல்லறையைக் கண்டு வந்தேன். பென்னி குயிக்கின் வம்சாவளியினரைக் கண்டுபிடித்து தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டேன். சென்ற ஆண்டு எனது அழைப்பை ஏற்று பென்னி வம்சாவளியினர் முல்லை பெரியார் வந்தனர். கம்பம் தேனி பகுதிகளைச் சுற்றி பார்த்தனர். பென்னி குயிக்கிற்கு இந்தப் பகுதியில் இருக்கும் மதிப்பு மரியாதை குறித்து நேரில் தெரிந்து கொண்டதும் அதிசயித்துப் போனார்கள்.
தாத்தா இங்கே பிரபலமாக இருந்தாலும், அவரது சொந்த ஊரில் அவரைப் பற்றி அதிகம் தெரியாது. அவர் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கல்லறைக்குப் பக்கத்தில் அவருக்குச் சிலை அமைக்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினார்கள். பென்னியின் வம்சாவளியினர் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்தார்கள்.”
"சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே விஸ்வநாதன் பங்களிப்பினை மறக்க முடியாது. ஈரான் நாட்டிலிருந்து வரும் தரமான சலவைக் கல்லில் இரண்டு அடி உயரமுள்ள சிலையை கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிற்பி ஒருவர் வடிவமைத்தார். சிலை செய்யும் செலவை விஸ்வநாதன் ஏற்றுக் கொண்டார். தற்சமயம் இங்கிலாந்தில் இலையுதிர் காலம். மார்ச் ஏப்ரலில் வசந்த காலம். அப்போது சிலையைச் சுற்றி மலர்ச் செடிகளை நட்டு பூங்கா ஒன்றினை உருவாக்குவோம். பென்னி குயிக்கின் ஆவணப் படத் தயாரிப்பு முடிவடைந்ததும் "இந்திய ஆறுகள்' குறித்த ஆவணப் படம் ஒன்றைத் தயாரிக்க இருக்கிறேன்'' என்கிறார் சந்தன இப்ராஹிம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.