சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 67: பலூன் திருவிழா

பலூன்களைப் பார்க்கும்பொழுது எல்லாம் நான் என் வயதைத் தொலைக்கின்றேன். இந்தப் பலூன்களும் அதன் வண்ணங்களும் மாறுபட்ட உருவங்களும் என்னை,  தன்நிலை இழக்கச் செய்கின்றன.
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 67: பலூன் திருவிழா
Updated on
2 min read

""பலூனைப் பார்த்து மகிழ்ச்சி அடையாதவர்கள் என்று யாரும் இருக்கமுடியாது''

 - ஏ.ஏ. மில்னே

பலூன்களைப் பார்க்கும்பொழுது எல்லாம் நான் என் வயதைத் தொலைக்கின்றேன். இந்தப் பலூன்களும் அதன் வண்ணங்களும் மாறுபட்ட உருவங்களும் என்னை,  தன்நிலை இழக்கச் செய்கின்றன. அன்பு, சந்தோஷம், நட்பு, நன்றி, மகிழ்ச்சி, விரியும், புன்னகை, ஆர்வம், உயிர்ப்பு, இதயத்தை நிரப்பும் ஊக்கம், வேடிக்கை என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய பலவிதமான உணர்வுகளை மனிதர்களுக்குள் எழும்பச் செய்யும் சக்தியை பலூன்கள் தன்னகத்தே கொண்டுள்ளன என்று சொன்னால் அது மிகையாகாது.

ஐந்து வயது சிறுமியாகப் பலூன்களைக்கைகளில் ஏந்தி மகிழ்ந்து, அவை வெடித்தபொழுது பயந்து அழுது, வளர்ந்த பிறகு வானில் காற்றின் வீச்சுக்கேற்ப பறந்து செல்லும் ஹீலியம் பலூன்களைப் பார்த்து கைகளைத் தட்டி குதித்து, இன்றளவும் புத்தாண்டு பிறப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு, கதீட்ரல் தெருக்களில் கொலுவிருக்கும் பல தேவாலயங்களுக்கு அருகில் விற்கப்படும் பல உருவ பலூன்களை வாங்கி, காரின் ஜன்னல் வழியே, கடந்து செல்வோரை நோக்கி அந்த பலூன்களை ஆட்டி, "ஹேப்பி நியூ இயர்' என்று சத்தமிட்டு வாழ்த்தும் பெண்ணாகவே வாழ்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் குழந்தைத் தன்மையை இந்தப் பலூன்கள் வெளிக்கொண்டு வருகின்றன.

முதல்முதலில் வெப்பக்காற்று (hot air balloon) பலூன்களின் தரிசனம் எனக்குக் கிட்டிய இடம் ஐரோப்பிய நாடான பெல்ஜியமாக இருந்தது. என்னுடைய முதல் ஐரோப்பிய பயணம்.  அப்பொழுது எல்லாம் செங்கன் விசா என்று ஒரு விசாவோடு பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் வசதி எல்லாம் கிடையாது. ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிற்கும் தனியாக விசா என்ற வகையில் மொத்தம் நாங்கள் 13 விசாக்களை எடுத்துச் சென்றோம். இப்படி பெல்ஜியத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது,  இரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம். "அம்மா அங்கே பாருங்கள்'  என்று எங்களுடைய மகன் காட்டிய திசையில் பார்வையைச் செலுத்திய நான், மறுவிநாடி கைகளைத் தட்டி, குதிக்க ஆரம்பித்து விட்டேன்.

பல வண்ண வெப்பக்காற்றுப் பலூன்கள், வானில் சிதறிய வண்ணப் பந்துகளாக மிதந்து கொண்டிருந்தன. அந்தப் பந்துகளின் வாய் பகுதிகளில் தொங்கிக் கொண்டிருந்த, மூங்கில் தொட்டிகளில் மனிதர்கள் நின்றுகொண்டிருந்தனர். டிரேகனின் வாயிலிருந்து வரும் நெருப்பைப் போல, பர்னரில் இருந்து தீக்கதிர்கள் மேல்நோக்கி சென்றுகொண்டிருந்தன. இந்தப் பர்னர்கள் மூலம் சூடான காற்று உற்பத்தியாகி பலூனை நிரப்புகிறது. சூடேறிய காற்று, வெளியிலிருக்கும் காற்றைவிட அடர்த்தியில் (Density) குறைந்து இருப்பதினால், அது பந்தை அதாவது பலூனை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது. இந்தப் பலூனுக்கு மேல் பாகத்தில்  ஓட்டை (vent) இருக்கிறது. இதைத் திறந்து மூடுவதன் மூலம், பலூனுக்குள் இருக்கும் வெப்பக் காற்றின் அளவு மாறுபடுகிறது. அதிகமான வெப்பக்காற்றை வெளிவிடும்பொழுது பலூன் கீழ்நோக்கி இறங்குகிறது. 

பர்னரிலிருந்து வெளியேறும் தீ, பலூனை எரிக்காத வகையில் நோமேக்ஸ் (Nomex)  என்று அழைக்கப்படும் அதிக வெப்பத்தினால் எரியாத, உருவாக பொருளினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வெப்பக்காற்றுப் பலூனில் பறக்கவேண்டும் என்ற என்னுடைய ஆசை ஆஸ்திரேலியாவில் நிறைவேறியது. உலகப்புகழ் பெற்ற கோல் கோஸ்ட் மற்றும் ஹின்டர் லேண்ட் (Hinter land) மீது வெப்பக்காற்றுப் பலூனில் சென்று அதிகாலை சூரிய உதயத்தைப் பார்க்கலாம்.

இதைத் தவிர (Lamington) லேமிங்டன் தேசிய பூங்காவின் மீதும் பறந்து செல்லும்பொழுது பலவிதமான பறவைகளையும், கங்காருவையும் பார்க்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றதும், நானும் என் கணவரும் ஆர்வத்தோடு அத்தகைய பயணத்தை மேற்கொள்வதற்கான டிக்கட்டுகளை வாங்கிக் கொண்டோம். மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு ஓர் ஊர்தியில் 45 மணித்துளிகள் பயணித்து, வெப்பக்காற்றுப் பலூனை பறக்கவிடும் இடத்தை அடைந்தோம். பல வண்ண வெப்பக்காற்று பலூன்களுக்குள் காற்றை நிரப்பிக் கொண்டிருந்தனர்.  மற்ற பயணிகளோடு நாங்களும், கூடையில் ஏறிக்கொண்டோம். தரையிலிருந்து கூடையின் உயரம் அதிகமாக இருந்ததால் சிலர் அதில் ஏற சிரமப்பட்டனர். "புஸ், புஸ்' என்று நாகப்பாம்பு சீறுவதுபோல பர்னர் ஓசை எழுப்பி வெப்பக் காற்றைப் பலூனுக்குள் செலுத்த, பலூன் மெதுவாக மேலே எழும்பியது.

என் உள்ளத்தை எல்லை இல்லாத ஆனந்தம் பற்றிக் கொண்டது. எங்களுக்குக் கீழே உதயசூரியனின் அழகிய தோற்றம், மேகங்கள் தங்கள் தலைவனைக் கண்ட நாணத்தினால் சிவப்பு வண்ணத்தைச் சூடிக்கொண்டிருந்தன. பத்து, பதினைந்து நாரைகள் தங்கள் சிறகுகளை விரித்துக் குழுவாகப் பறந்து சென்று கொண்டிருந்தன, கீழே லேமிங்டன் தேசிய பூங்காவில், வானத்தில் வெப்ப பலூன்களைக் கண்ட கங்காருகள், தாவிக் குதித்து மறைவிடத்தை நோக்கிச் சென்றன. சிலு, சிலு என்ற காற்று எங்கள் உடல்களைத் தழுவிக் கொண்டன. கண்கள் கண்ட காட்சிகள் வெப்பக்காற்று பலூன் சவாரி தந்த ஆனந்தம் என்னுள் அந்தப் பலூன்களின் மீது தீராத காதலை வளர்த்துவிட்டது. ஜப்பானின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றான சாகாவில் சர்வதேச வெப்பக்காற்று பலூன்களின் திருவிழா நடக்கப் போகிறது என்று அறிந்தவுடன், சாகாவை நோக்கி எங்கள் பயணம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com