ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

ரோஜா மலரே! - 33: குமாரி சச்சு

கண்காட்சியின்  மேலாளர், நிகழ்ச்சிக்காக எங்களை நினைவுபடுத்த தொலைபேசியில் அழைத்தார். என் பாட்டிதான் பேசினார். ""நீங்கள் குறிப்பிடும் தேதியில் நடிகை சச்சு நடனமாட உங்கள் ஊருக்கு வரமுடியாத

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 4:11 pm

கண்காட்சியின் மேலாளர், நிகழ்ச்சிக்காக எங்களை நினைவுபடுத்த தொலைபேசியில் அழைத்தார். என் பாட்டிதான் பேசினார். ""நீங்கள் குறிப்பிடும் தேதியில் நடிகை சச்சு நடனமாட உங்கள் ஊருக்கு வரமுடியாத நிலையில் இருக்கிறார். வேறு தேதி சொல்லுங்கள், நாங்கள் கண்டிப்பாக வந்து இந்த நடன நிகழ்ச்சியை நடத்தி கொடுக்கிறோம்''”, என்று சொன்னார். விடாப்பிடியாக, முன்னரே ஒப்புக்கொண்ட தேதியில் தான் நடன நிகழ்ச்சியை நடத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பாட்டி, கோரிக்கையை வலியுறுத்த அவர்களோ தாங்கள் சொன்னதில் உறுதியாக இருந்தார்கள். மீண்டும் சொல்ல, அவர் தங்களின் பதிலில் உறுதியாக நின்றார். வேறு வழி எதுவும் எங்களுக்கு தெரியவில்லை. சச்சுவிற்கு உடல் நிலை சரியில்லை என்றும் பாட்டி சொல்லிப் பார்த்தார். ""நாங்கள் இங்கு மிகவும் செலவு செய்து பெரிய அளவில் விளம்பரம் செய்து இருக்கிறோம். அதனால் நீங்கள் கண்டிப்பாக வந்தே ஆகவேண்டும்'' என்று மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.

இதற்கு மேல் என் பாட்டியும், அம்மாவும் உண்மையை சொல்லாமல் இருக்க முடியவில்லை. காரணம், பேச்சு வேறு மாதிரி போவது போல் தோன்றியது. அது மட்டுமல்ல, ஏதோ பெரிய தொகையை வாங்கிக் கொண்டு வேறு நிகழ்ச்சிக்குப் போகப் போவது போல் அவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அது எங்களை வருத்தப்பட வைத்தது.

இதற்கு மேலும் நாங்கள் காரணத்தை சொல்லாமல் இருந்தால் அது சரியாக இருக்காது என்று என் பாட்டி முடிவு செய்தார். அதனால் உண்மையை சொல்லிவிடலாம் என்று நினைத்து, உண்மையான காரணத்தை பாட்டி சொன்னார். "" வேறு தேதி கிடைக்காது, காரணம் கண்காட்சியே முடியும் நிலையில் உள்ளது. அதனால் முன்பே ஒப்புக்கொண்ட தேதியான நாளை மறுநாள் வந்து ஆடிவிட்டுப் போங்கள்'' என்று அவர்கள் கூறியதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.

இவர்களுக்கு எங்கள் நிலைமையை எப்படி நிரூபிப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை. காரணம் எனக்கு அன்று வந்திருந்தது அம்மை நோய். ஆனால் இன்று போல் விஞ்ஞானம் அன்று அப்படி வளரவில்லை. அதனால் அவர்களுக்கு எப்படி நாங்கள் நிரூபிப்பது என்று தெரியவில்லை. நாங்கள் கூறியது உண்மைதான் என்று நிரூபிக்க நாங்களே அவர்கள் முன் சென்று நின்றால் தான் சரியாக இருக்கும் என்று தோன்றியது. சரி அதையும் செய்வோம் என்று பாட்டியும், அம்மாவும் முடிவு செய்தார்கள். சரி, நாங்கள் வருகிறோம், அப்பொழுதுதான் நீங்கள் எங்கள் நிலைமையை உணர்வீர்கள் என்று அவர்களுக்கு சொல்லிவிட்டு, தொலைபேசியை வைத்தார்.

அம்மை போட்டால் குறிப்பிட்ட காலத்திற்கு வெளியே வரவே கூடாது. மூன்றாவது தண்ணீர், தலைக்கு ஊற்றினால் தான் வெளியே வரவே முடியும். அது மட்டும் அல்ல ஏதாவது ஒரு அம்மன் கோயிலுக்கு சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்த, மஞ்சள் நீரை வாங்கி வந்து, முதலில் அதை ஊற்றி விட்டு, பிறகுதான் குளிக்கவேண்டும் என்று நமது முன்னோர்கள் சில சம்பிரதாயங்களை வகுத்திருக்கிறார்கள்.

வழி வழியாக வந்த அதை, நாம் எப்பவும் மாற்ற மாட்டோம் இல்லையா? எனக்கு வந்த அம்மை நோய், நான் நாட்டியமாட ஒப்புக்கொண்ட சில தினங்களுக்கு முன்னர் தான் வந்தது. அதனால் 7-ஆம் அல்லது பத்தாம் நாள் தான் தலைக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். இது அம்மனுடன் சேர்ந்து வழிபடும் நோய் என்பதால் இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று எல்லோருக்கும் தெரிந்தது தான். அம்மன் கோயில்களில் சென்று அம்மை நோய் என்ற விஷயத்தை சொல்லி, அம்மன் மேல் விட்ட அபிஷேக நீரை அந்தக் கோயில் பூசாரி தருவார். அதைத்தான் நாம் எடுத்து கொண்டு வந்து முதல் தண்ணீராக, அந்த மஞ்சள் நீரைத்தான் தான் ஊற்ற வேண்டும்.

ஆனால், இதை எல்லாம் நாங்கள் செய்ய முடியாதவாறு எங்கள் நிலைமை இருந்தது. என்ன செய்வது என்று எங்கள் வீட்டு நடு ஹாலில் ஒரு குட்டி வட்ட மேஜை மாநாடு நடை பெற்றது. பாட்டிதான் தலைமை, அம்மா, சகோதரிகள் எல்லோரும் கலந்து கொண்டனர். அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பார்க்கும் நிலையில் நான் காத்திருந்தேன். கிட்டத்தட்ட அரைமணிநேர விவாதத்திற்குப் பிறகு, பாட்டி சொல்லும் யோசனையை எல்லோரும் ஒப்புக் கொண்டோம்.

முடிவு என்ன தெரியுமா? இந்த நிலையிலேயே நான் நாளை மறுநாள் கோவைக்கு சென்று கண்காட்சி நடன நிகழ்ச்சியில் ஆட வேண்டும். ஆனால் அதற்கு முன்னால் பாட்டி சொல்லும் வழி முறைகளை தவறாது பின் பற்ற வேண்டும். பாட்டி நாங்கள் பின்பற்ற வேண்டியவைகளை சொல்லத் தொடங்கினார். நாங்கள் பூர்வீகமாக வழிபடும் மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு முண்டக கன்னியம்மன் ஆலயத்திற்கு முதலில் செல்ல வேண்டும். எங்கள் அம்மா, பாட்டி அவர்களுக்கு முந்தைய தலைமுறை வணங்கிய கோயில் இது. இந்த அம்மன் சிலை சுயம்பு. இந்த அம்மன் சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். அம்பாள் சந்நிதிக்கு பின்புறம் ஒரு ஆலமரம் இருக்கிறது.

அந்த ஆலமரத்திற்குள் ஒரு பாம்பு புற்றும் இருக்கிறது. இந்த அம்மனின் சந்நிதியில் வேண்டிக்கொண்டால், அம்மை நோய் இருந்த இடம் தெரியாமல் சில நாட்களிலேயே மறைந்து, உடல் நிலை குணமாகிவிடும். இப்படி எனது பாட்டி சொல்லிக் கொண்டே போனார். நாங்களும் முண்டக கன்னியம்மனின் புகழை கேட்டுக்கொண்டே வந்தோம். இந்த இடத்தில் நிறுத்தி விட்டு, அன்று எனக்கு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதையும் பாட்டி சொல்லத்தொடங்கினார்.

சச்சுவிற்கு அம்மை வந்து இரண்டே நாள்தான் ஆகிறது. உண்மையாக பார்த்தால் வீட்டை விட்டு எங்கேயும் அழைத்து செல்லக் கூடாது. ஆனால் அவளது உடல் நிலை அப்படி இருந்தாலும், இன்றுள்ள நிலைமை வேறு மாதிரியாக இருக்கிறது.

அம்மனின் மேல் பாரத்தை போட்டு விட்டு, நாம் சென்றே ஆகவேண்டிய தருணம் இது. அம்மனின் அபிஷேக மஞ்சள் நீரை வாங்கி வந்து, சச்சுவின் தலையில் ஊற்றி விட்டு, சக்தி வாய்ந்த முண்டகக் கன்னியம்மனின் மேல் பாரத்தை போட்டு விட்டு, நாம் இந்த நடன நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லலாம். அங்கு அவள் ஆடட்டும்” என்றார் பாட்டி. அவர் சொன்னதை அம்மாவும் ஏற்று கொண்டார்.

அது மட்டுமல்ல, அம்மா என்ன சொன்னார் தெரியுமா? வீட்டை விட்டே வெளியே வரக்கூடாது. இந்த நிலையில் பல ஆயிரம் கண்கள் பார்க்க, ஒரு கண்காட்சியில் என் பெண் நடனம் ஆட போகிறாள். உன்மேல் பாரத்தை போட்டு, அவளை நீ தான் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அம்மா, நீதான் அவளுக்குத் துணையாகச் சென்று, எந்த வில்லங்கமும் வராமல் பாதுகாக்க வேண்டும் என்று அம்மனிடம் வேண்டி கொள்ள, அருள்மிகு முண்டக கன்னியம்மன் ஆலயத்திற்கு சென்று வேண்டிக் கொண்டார்கள். இதில் சிறப்பு என்னவென்றால், என்னையும் அழைத்து கொண்டு போய் அம்மனுக்கு முன்னால் நிறுத்தி விட்டு ரயிலில் ஏற செய்தார்கள்.

கோவை ரயில் நிலையத்தை அடைந்தவுடன், எங்களை அழைத்து போக அந்தக் கண்காட்சி மேலாளரும் வந்திருந்தார். என்னைப் பார்த்தவுடன் அவர் ஆடிப் போய் விட்டார். எங்களிடம் அவர், “""அம்மா, என்ன இப்படி இருக்கு. நான் தான் உங்களை நம்பாமல் தப்பாக பேசிவிட்டேன். தெய்வ குத்தம் செய்து விட்டேன் என்று எனக்குப் பயமாக இருக்கிறது. இதனால் எனக்கு அம்மன் கூலி கொடுத்து விட போகிறார்''”, என்று பயத்துடன் பேசினார்.

அப்பொழுது, என் அம்மா, “""நாங்கள் எல்லாம் பொய் சொல்ல மாட்டோம். நாங்கள் சொன்னதை நீங்கள் நம்பவில்லை அல்லது ஏற்றுக் கொள்ளவில்லை. வாக்குக் கொடுத்தால் நாங்கள் என்றைக்கும் காப்பாற்றியே தீருவோம். என் குழந்தைகளுக்கு எதுவும் ஆகாது. அதே போல் தான் உங்களுக்கும். அம்மன் மேல் பாரத்தைப் போட்டு நான் அவர்களை இங்குக் கூட்டிக்கொண்டு வந்து இருக்கிறேன்''”, என்றார்.

அம்மை இருந்ததால் என்னால் சில நகைகளைப் போட்டுக் கொள்ள முடியவில்லை. எப்படி ஆடுவேனோ என்று மனதில் ஒரு வித சஞ்சலம் இருந்தது உண்மைதான். நான் அன்று எப்படி நடனம் ஆடினேன் என்று அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.