ரோஜா மலரே! - 69: பாடல் ஒத்திகையில் பட்ட வேதனை! - குமாரி சச்சு
சித்ராலயா கோபு என்ன பேசினார் தெரியுமா?


சித்ராலயா கோபு என்ன பேசினார் தெரியுமா?
""நகைச்சுவை நாயகி என்று நினைத்து இந்த வாய்ப்பைத் தவிர்த்து விடாதீர்கள். படத்தில் யாருக்குமே சீரியஸ் ரோல் கிடையாது. இதில் நடிக்கும் ராஜஸ்ரீ, காஞ்சனா போல, சச்சுவும் ஓர் கதாநாயகி தான். மூன்று பேருமே இளம் வயதினர். இது மட்டுமல்ல, இது இயக்குநர் ஸ்ரீதர் எடுக்கும் நகைச்சுவை படம். இதில் பல புதுமைகள் உள்ளன. இது ஈஸ்ட்மேன் கலரில் எடுக்கும் பிரம்மாண்டமான படம். இதில் ராஜஸ்ரீ, காஞ்சனா, பாலையா, முத்துராமன், ரவிசந்திரன், வி.எஸ்.ராகவன் போன்ற பல பிரபலங்கள் நடிக்கவிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சச்சுவுக்கு அழகான பாடல் ஒன்று கூட இதில் வைத்திருக்கிறோம். இயக்குநர் ஸ்ரீதர் புதுமையான முறையில் இந்தப் படத்தை எடுக்கிறார். கண்டிப்பாக இது வெற்றிப்படமாக அமையப்போகிறது. அதனால் சச்சு, இந்தப் படத்தில் இருப்பது அவருக்கு நிச்சயம் முன்னேற்றம் உண்டாக்கும் என்று நான் கண்டிப்பாக நம்புகிறேன்'' என்றார்.
சித்ராலயா கோபு பேசியதைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் சாதக - பாதகங்களை அம்மா, பாட்டி, அக்கா நான் என நால்வருமாக கலந்து பேசினோம். எங்களுக்கு சாதகங்கள் அதிகம் இருப்பதாகத் தெரிந்தது. அதனால் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதாக முடிவு செய்தோம். அந்த நேரத்தில் தான் கோபுசாரும் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஆனாலும் தொலைபேசியில் கூறிய விஷயத்தால் மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டு படத்தில் நடிக்கத் தொடங்கினேன்.
முதல் நாளில் பாடல் காட்சி எடுக்கப்பட்டது. அந்தப் படத்தில் நானும் நாகேஷ் இருவரும் டான்ஸ் ஆடுவது போன்ற காட்சி தான் எடுத்தார்கள்.
""மலரேன்ற முகம் இன்று சிரிக்கட்டும்
மனம் என்ற கருவண்டு பறக்கட்டும்
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்
உலகத்தை ஒரு முறை மறக்கட்டும்''
எல்லோரும் இந்தப் பாடல் சிறப்பாக இருந்தது என்று சொன்னார்கள். இன்று கேட்டாலும் இந்தப் பாடல் இனிமையாகத்தான் இருக்கிறது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன். அவருடைய உதவியாளர் சுந்தரம் மாஸ்டர். நடிகர் பிரபு தேவாவின் அப்பா தான் டான்ஸ் மாஸ்டர் சுந்தரம். அவர் தான் எனக்கு டான்ஸ் ஆடிக் காட்டினார். அவருடன் உடன் வருவார் தாரா மாஸ்டர். இவர்கள் எல்லோரும் இன்று பெரிய டான்ஸ் மாஸ்டர் ஆகிவிட்டார்கள். சுந்தரம் மாஸ்டர் இந்தப் படத்திற்குப் பின்னர் எனக்கும் நாகேஷுக்கும் பல படங்களுக்கு டான்ஸ் மாஸ்டர் ஆக இருந்து, எங்கள் இருவருக்கும் நடனம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
சித்ராலயா அலுவலகத்தில் தான் இந்தப் பாட்டுக்கு நாங்கள் ஒத்திகைப் பார்த்தோம். அன்று எல்லாம் ஒத்திகை இல்லாமல் படப்பிடிப்பு இல்லை என்ற நிலையிருந்தது. இதற்குள் நாகேஷ் பிரபலமாகி விட்டாலும் ஒத்திகைக்கு வருவார். நான் முன்பே நாகேஷை பார்த்திருந்தாலும், இந்தப் படத்தில் நடிக்கிறார் என்ற முறையில் அப்பொழுதுதான் பார்த்தேன். சித்ராலயா அலுவலகத்தின் மாடியில் தான் நாங்கள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அன்று தொழில் நுட்ப கலைஞர்கள் சிலர் இருந்தனர். சில உதவி இயக்குநர்களும் இருந்தார்கள். ஒத்திகையின் போதே காட்சிகளைப் பிரித்துக் கொள்ளும் முறையும் இருந்தது.
அதற்காக மூன்று - நான்கு நாள்கள் ஒத்திகை நடந்தது. நன்றாகக் கற்றுக் கொண்ட பிறகு, ஒரு முறை ஒளிப்பதிவாளர், இயக்குநர் முன்னால் ஆடி காட்ட வேண்டும். அப்பொழுது நடிகர் நாகேஷ், டான்ஸ் மாஸ்டரிடம் சொன்னார் “""சச்சு உண்மையாகவே சிறப்பாக நடனம் ஆடுபவர். எனக்கு நடனம் தெரியாது. இந்தப் பாடல் கண்டிப்பாக ஹிட்டாகும். அதனால் எனக்கும் நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதால் புதுமையான நடன அசைவுகளைக் கேட்டு தெரிந்து கொள்கிறேன்'' என்றார். அதே போல், கஷ்டப்பட்டுப் பயிற்சியும் செய்தார். அதனால் இந்தப் பாடல், இன்றும் மக்கள் எல்லோரும் விரும்பும் பாடலாக இருந்து வருகிறது.
நான்கு நாள் ஒத்திகைக்குப் பின் வீட்டிற்குச் சென்ற போது என்னால் காரில் இருந்து இறங்கவே முடியவில்லை. அந்தளவு கால் வலி. காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் பாடலின் படப்பிடிப்பு மீண்டும் நாளை மறு நாள் இருக்கிறது என்று சொல்லி விட்டார்கள். ஒரு நாற்காலியில் உட்கார்ந்து என் காலை நானே ஆராய்ந்து பார்த்த போது, காலில் புண் இருப்பது அப்போது தான் எனக்குத் தெரிந்து.
சித்ராலயா அலுவலகத்தில் சிமெண்ட் தரை. நடனம் மீது இருந்த ஆர்வத்தால் எதையும் சிந்திக்காமல் நானும் நடனம் ஆடினேன். நான்கு நாள்கள் அந்த சிமெண்ட் தரையில் ஆடியதால் குதிகாலில் புண் ஆனது. அப்பொழுது எனக்குத் தெரியவில்லை. தொடர்ந்து ஆடியதால் கால்கள் செக்க சிவந்து கொப்பளமாகிவிட்டது.
நாம் நன்றாக ஆடவேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன் தொடர்ந்து ஆடியதால் இப்படி ஆகிவிட்டது என்று தெரிந்தது. நாளை மறுநாள் படப்பிடிப்பில், எப்படி நான் அந்தப் பாட்டுக்கு நடனம் ஆடப் போகிறேன் என்று தெரியாமல் நான் முழித்துக் கொண்டிருந்தேன்.
அம்மாவும் பாட்டியும் புண் ஆறுவதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். வலியுடன் எப்படி அந்த நடனத்தை ஆடினேன் தெரியுமா?
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...