ரோஜா மலரே! - 46: குமாரி சச்சு

இன்று இருக்கும் கதாநாயகர்கள் வாங்கும் சம்பளம் கோடிகளில் உள்ளது. அன்று இந்திப் படத்தில் நடித்தால்தான் அதிகமான சம்பளம் கொடுப்பார்கள்.
ரோஜா மலரே! - 46: குமாரி சச்சு
Published on
Updated on
4 min read

இன்று இருக்கும் கதாநாயகர்கள் வாங்கும் சம்பளம் கோடிகளில் உள்ளது. அன்று இந்திப் படத்தில் நடித்தால்தான் அதிகமான சம்பளம் கொடுப்பார்கள். ஆனால், இன்று அதைவிட நமது கதாநாயகர்கள் தான் அதிக சம்பளம் வாங்குவதாக செய்திகளும் வருகிறது. தமிழுக்கு இது பெருமைதானே.

ஒரு சமயம், இந்த ஹீரோ மட்டும் எனக்கு கால்ஷீட் கொடுத்தால் நான் அவருக்கு 240 கோடி சம்பளம் கொடுக்கிறேன் என்று ஒரு தயாரிப்பாளர் பகிரங்கமாக அறிவித்தார்.

ஆக, இந்திப் பட உலகில் உள்ள ஹீரோக்களை விட நமது கதாநாயகர்களுக்கு பெருமையும் புகழும் கூடியுள்ளது. கதாநாயகிகளைப் பொருத்த அளவில் அவர்களும் இன்று கோடியில் தான் நீந்துகிறார்கள். இந்திப் பட உலக நடிகைகளை விட சம்பளத்தில் நமது நடிகைகள் சில கோடிகள்தான் குறைவு என்றாலும், இன்று எல்லோரும் கோடியில் சம்பளத்தை வாங்குகின்றனர் என்பதை சந்தோஷமான செய்தியாகதான் நான் பார்க்கிறேன்.

இப்படி கோடிகளில் சம்பளத்தை வாங்கும் நடிகர் நடிகைகளுக்கு மத்தியில் என் அந்த நாளைய சம்பளத்தை சொன்னால் எல்லோரும் சிரிப்பார்கள். அதிலும் அந்த சம்பளம் எனக்கு மாதா மாதம் வரும் சம்பளம். இந்த சம்பளத்தில் வருமான வரியும் பிடித்தம் இருக்கும். எனக்கு என்ன சந்தோஷம் என்றால், எனது சகோதரர்கள் தினமும் அலுவலகம் சென்று வருகிறார்கள். நான் அவர்களைப் போல் தினமும் அலுவலகம் செல்லவில்லை என்றாலும், எனக்கும் மாத சம்பளம் வரும் இல்லையா?

அவர்களிடம் உங்களைப் போல் நானும் மாதா மாதம் சம்பளம் வாங்குகிறேன் என்று பெருமையாக கூறுவேன். எனக்கு மாதா மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா? முழுசாக ஆயிரத்து ஐநூறு ரூபாய். இப்படித்தான் ஏவிஎம். நிறுவனத்தில் நான் நுழைந்தேன். அன்று இது ஒரு மிக பெரிய சம்பளம்.

ஏவிஎம் நிறுவனம் எனக்கு மட்டுமல்ல பல கலைஞர்களுக்கு ஆலமரமாக இருந்திருக்கிறது. சுமார் 175 படங்கள் இந்த நிறுவனத்தில் தயாரித்து இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல தரப்பட்ட மொழிகளில் படங்கள் இந்த தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளி வந்திருக்கின்றன.

என்னைப் பொருத்த அளவில் இந்த மூன்றெழுத்து நிறுவனம் ஒரு பல்கலைக்கழகம் என்று தான் சொல்வேன். முதல் நாள் நான் படப்பிடிப்பிற்கு சென்றபோது பல்கலைக்கழகத்தில் நுழைந்தது போன்று இருந்தது. எல்லாரும் இங்கு ஒரே நிலைதான். சிறியவர் பெரியவர் என்ற பேதம் கிடையாது. "கடமை கண் போன்றது; நேரம் பொன் போன்றது' என்று சொல்வார்கள். அதை ஏவிஎம்.மில் நுழைந்தப் பிறகு நான் உணர்ந்து கொண்டேன்.

எல்லோரும் அங்கு திட்டமிட்டுதான் வேலை செய்வார்கள். ஒரு நாளைக்கு இந்த காட்சிகளைப் படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அதை முடிக்காமல் விடமாட்டார்கள். இன்ன காட்சிகளை எடுத்துவிட்டோம் என்று மாலையில் செட்டியாருக்கு தகவல் சொல்லிவிட வேண்டும். அது மட்டுமல்ல இந்தக் காட்சிகளை நாளைக்கு எடுக்க இருக்கிறோம் என்றும் தெரிவிக்க வேண்டும். அந்த அளவிற்கு திட்டமிடல் இங்கு உண்டு. அப்படி திட்டமிட்டபடி காட்சிகளை எடுக்க முடியவில்லை என்றால் அதற்கான காரணத்தையும் செட்டியாருக்கு தெரிவிக்க வேண்டும்.

செட்டியார் இருந்தவரை இப்படிதான் எல்லாம் போய் கொண்டிருந்தது. அவருக்கு பிறகு அவரது பிள்ளைகளான எம்.முருகன், எம்.குமரன், எம்.சரவணன், எம்.பாலசுப்ரமணியன் இந்த பெரும் நிறுவனத்தைப் பார்த்து கொண்டார்கள். அதில் கடை குட்டியான எம்.பாலசுப்ரமணியன் அன்று தயாரிப்பு பக்கம் வரவில்லை. படித்துக் கொண்டிருந்தார்.

ஏவிஎம். செட்டியாரை பற்றி நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவர் ஒரு உன்னதமான மனிதர். நான் புதுமுகம் என்றாலும் எனக்கு அவர்கள் காட்டிய அக்கறை; வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போடும் அன்று, அவரே வந்து என்னிடம் பேசி இருக்கத் தேவை இல்லை. அதை மட்டும் செய்யாமல், தனது நிலையை விளக்கி சொல்லி இருக்க தேவையில்லை. அது மட்டும் அல்ல; ஏதாவது பிரச்னை என்றால் என்னிடம் தெரிவித்து விடு. நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லியிருக்கத் தேவையில்லை. எனக்கு சரியான உடை, அதற்கு ஏற்றாற் போல் நகைகள் போட்டு, நான் திரையில் மிக அழகாக தோன்ற எல்லா முயற்சியும் எடுத்துக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இது எனக்கு மட்டும் என்று எண்ண வேண்டாம். அவரது கதாநாயகிகள் அனைவருக்கும் இப்படி தான் செய்வார்கள் என்று கேள்விப்பட்டவுடன் அவர்கள் மேல் இருந்த மரியாதை பலமடங்கு உயர்ந்தது.

ஒரு காட்சியில் என் முகத்தை எனது முந்தானையில் மறைத்து இருப்பேன். முதல்நாள் எடுத்த காட்சியை, மறுநாள் செட்டியார் பார்ப்பாராம். அந்த காட்சியைப் பார்த்து விட்டு, அந்த படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஆகியோரை அழைத்து இந்த நடிகை புதுமுகம். சிறிய வயசு. இந்த முகம் சிறப்பாக திரையில் தெரிய வேண்டும். அப்படி தெரிய வைப்பது நமது பொறுப்பு. அதனால் இன்னொருமுறை இதே காட்சியை திரும்பவும் எடுங்கள் என்றாராம்.

என்னை கூப்பிட்டு, உனக்கு இளம் வயது என்பதனால் சொல்கிறேன். உன் முகம் திரையில் தோன்றும்போது அழகாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் தான் மக்கள் விரும்புவார்கள். நீங்கள் பேரும் புகழும் பெறலாம். நீங்களே உங்களை பற்றிய அக்கறை எடுத்து கொள்ளவேண்டும். உங்கள் முகம் எந்த கோணத்தில் பார்த்தால் அழகாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு இது போகப்போக தெரியும் என்று சொல்லி, மேக்-கப் எப்படி செய்து கொள்ள வேண்டும் என்று மிக விரிவாக சொன்னார்.

ஒரு காட்சிக்கு எப்படி நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதோ இவர்கள் கொடுத்தார்கள், அதனால் நான் அணிந்து கொண்டு போகிறேன் என்று இல்லாமல், நீங்களும் அதில் அக்கறை கொள்ள வேண்டும் என்று சொல்லி அனுப்பினார். அவரது நிறுவனமும் ஒரு புகழ் பெற்ற நிறுவனம், அதில் என்னைத் தவிர மற்ற எல்லாரும் பல படங்களில் வேலை செய்த அனுபவசாலிகள் என்றாலும், இப்படி உங்களை நீங்களே அக்கறை கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னது, அவரை போன்ற ஜாம்பவான் வாயில் இருந்து வந்த ஆசீர்வாதம் என்று நான் நினைக்கிறேன்.

அதுபோன்று, ஏவிஎம். நிறுவனத்தில் ஒழுக்கம், நேரம் தவறாமை போன்ற வாழ்க்கையின் அத்தியாவசியமான பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்ள முடியும். நானும் தெரிந்து கொண்டேன்.

காலை 7 மணி கால்ஷீட் என்றால், நாங்கள் எல்லாம் 5 மணிக்கே படப்பிடிப்பு தளத்தில் இருக்க வேண்டும். அதுவும் ராஜா ராணி கதை என்றால் மேக்கப் போட்டு தயாராவதற்கு மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் பிடிக்கும்.

தெலுங்குப் படங்களில் நடித்து பின் அந்த ஆந்திராவின் முதல்வராக பொறுப்பேற்ற என்.டி.ராமராவ், மிகவும் புகழ் பெற்றது கிருஷ்ணர் வேடத்தில் நடித்ததனால்தான். அந்த வேடப் பொருத்தம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியது என்று எல்லாருக்கும் தெரியும். அவருக்கு 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் அதிகாலை 2 மணிக்கு எழுந்து மேக்கப் போட ஆரம்பித்தால்தான் அவரால் காலை ஏழுமணிக்கு சரியாக படப்பிடிப்பில் இருக்க முடியும் என்று சொல்வார்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் அப்படிதான் நேரம் தவறாமை கண்டிப்பாக கடைப்பிடிப்பார் என்று எல்லோருக்கும் தெரியும்.

இந்த நேரம் தவறாமைக்கு தானே ஒரு உதாரணமாக திகழ வேண்டும் என்பதால் செட்டியார் தனது வீட்டையே மாற்றினார் என்று கூட சொல்வார்கள்.

அன்று செட்டியார் மயிலாப்பூரில் குடியிருந்தார். அந்தக் காலத்தில் மயிலாப்பூரில் இருந்து வடபழனிக்கு வர இடையில், ஒரு ரயில்வே கேட் உண்டு. அதைக் கடந்துதான் வரவேண்டும். அதனால் சில நேரங்களில் தாமதமாகிவிடும். அதனால் ஏவிஎம் ஸ்டூடியோவிலேயே ஒரு வீட்டைக் கட்டி அதில் குடியேற முடிவு செய்து கட்டியதுதான் ஸ்டூடியோவில் இருக்கும் கார்டன் வீடு. எப்பவுமே காலையில் எழுந்து ஒருமுறை ஸ்டூடியோவை வலம் வரும் பழக்கம் அவருக்கு இருந்தது.

ஒருநாள் நாங்கள் எல்லோரும், சுமார் அரை டஜன் பேர் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தோம். அதில் ஒருவர் எங்களிடம் வந்து கத்திப் பேசாதீர்கள். செட்டியார் வரும் நேரம் என்று சொன்னார். அப்பொழுது எனக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருந்த ஒரு மேக்கப் கலைஞர், ""அப்பாச்சி இப்பொழுதுதான் போகிறார்'' என்று சொன்னார். அவர் பல வருடம் ஏவிஎம் ஸ்டூடியோவில் வேலை செய்து வருபவர். அப்படி காலை, மாலை ஸ்டூடியோவை சுற்றி வரும் பழக்கம் உள்ளவர் செட்டியார்.

ஏவிஎம் மட்டுமல்ல அதே போல் மாடர்ன் தியேட்டர் கூட நேரம் தவறாமைக்கு ஒரு உதாரணமாக அன்று இருந்தது என்று சொல்லலாம். செட்டியார் எப்பொழுதுமே தேவைக்கேற்ப செலவு செய்வார். வீண்செலவு செய்யமாட்டார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றிருந்த சமயம் என்ன நடந்தது என்று அவரது மகன் எம். சரவணன் சொல்லி இருக்கிறார். அதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

- (தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com