மருத்துவர்களின் மருத்துவர்

டாக்டர்களைக் கடவுள் என்று கொண்டாடுகிறோம் உண்மைதான். டாக்டர்கள் இல்லையென்றால் சிலர் பிழைத்திருக்க முடியாது. ஆன்மிகத்தில் பரம்பரை இருப்பது போல மருத்துவத்திலும் ஒரு குரு பரம்பரை இருக்கிறது.
மருத்துவர்களின் மருத்துவர்
Updated on
3 min read

டாக்டர்களைக் கடவுள் என்று கொண்டாடுகிறோம் உண்மைதான். டாக்டர்கள் இல்லையென்றால் சிலர் பிழைத்திருக்க முடியாது. ஆன்மிகத்தில் பரம்பரை இருப்பது போல மருத்துவத்திலும் ஒரு குரு பரம்பரை இருக்கிறது. சென்னையில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த மருத்துவர் டாக்டர். ரங்காச்சாரி. அவரை அடுத்து அவரது சிஷ்யர் ராம ஐயங்கார். அவருக்குப் பின் கே.வி.டி என்று அழைக்கப்பட்ட டாக்டர் திருவேங்கடம். இவர் 11.10.1926 -இல் பிறந்தவர். தன் 94-ஆவது வயதில் 03.10.2020-இல் காலமானார்.

இவர் மருத்துவர்களின் மருத்துவர் என்று சொல்லப்படும் அளவிற்கு மூன்று தலைமுறை மருத்துவ மாணவர்களுக்குப் பேராசிரியராக இருந்தவர். அத்துடன் மருத்துவத் தொழிலும் செய்து வந்தவர். பார்த்த மாத்திரத்தில் ஒருவருக்கு என்ன வியாதி என்று சொல்லக்கூடியவர்.

இவருடன் நான் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக பழகியிருக்கிறேன். இவரைப் போன்ற இன்னொரு மருத்துவரை காண்பது அரிது என்பது வாஸ்தவமானப் பேச்சு. "ஹிந்து' நிர்வாகத்துடன் சம்பந்தப்பட்டிருந்த ரங்காச்சாரி மூலம் இவர் எனக்குப் பழக்கமானார். குடும்ப டாக்டர் என்கிற முறையில் இவர் ரங்காச்சாரி மனைவிக்கு வைத்தியம் செய்துவந்தார். அப்போது முதுமை காரணமாக மாடிப்படி ஏறி வரமுடியாது என்ற நிலையில் தன் மாணவரும், சிறந்த டாக்டருமான டாக்டர் பரத்வாஜை அறிமுகப்படுத்திவைத்தார்." என்னை நம்பும் அளவிற்கு நீங்கள் இவரை நம்பலாம்' என்று தன் மாணவரின் திறமை பற்றிப் பெருமையாகச் சொன்னார். டாக்டர் டி.பி.ஆர் பரத்வாஜ் ஒரு ரத்தத்துறை நிபுணர். இவர் டாக்டர் கே.வி.டி யின் அத்யந்த சிஷ்யர். இவர் எழுதிய "ரத்தமே உயிரின் ஆதாரம்' என்ற புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கிய டாக்டர். கே.வி.டி சென்னை புத்தகக் கண்காட்சி விழாவில் கலந்துகொண்டு, அந்தப் புத்தகத்தை வெளியிட்டார். அடுத்து வெளிவர இருக்கும் புத்தகத்திற்கும் முன்னுரை வழங்கியிருக்கிறார்.

டாக்டர். கே.வி.டி அவருடன் படித்தவர் ரகுநாதன் என்பவர். ரகுநாதனும் இவரும் ஒருமையில் பேசிக்கொள்ளும் அளவிற்கு நெருக்கமானவர்கள். ரகுநாதனும் என் நண்பர். ரகுநாதனின் மனைவி உஷா இந்தியாவின் முதல் பெண் விமானி என்ற பெருமைக்குரியவர்.

நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் குடும்ப விசேஷங்களில் நாங்கள் கே.வி.டி யையும் கண்டு பேசுவதுண்டு. அதுதவிர ஒருமுறை எனக்கு வைத்தியத்திற்காக அவரை அணுகியிருக்கிறேன். என் மகனுக்கும் வைத்தியம் செய்திருக்கிறார். என் மகனுக்கு தண்டுவட எக்ஸ்ரே எடுத்து காண்பித்தோம். எக்ஸ்ரே எடுத்தவர் அதை முழுமையாக எடுக்கவில்லை. கீழ் இரண்டு எலும்புகள் அதில் இடம் பெறவில்லை. அடுத்தாற்போல் ஒரு முழுமையான எக்ஸ்ரே எடுத்துக்கொண்டு சென்றபோது கீழ் எலும்புகள் தேய்ந்திருந்ததைக் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் இரண்டாம் எக்ஸ்ரேவைப் பார்ப்பதற்கு முன்னதாகவே டாக்டர். கே.வி.டி கீழ் எலும்பு தேய்ந்திருக்கிறது என்று சொல்லிவிட்டார். "இரண்டாம் எக்ஸ்ரேவைப் பார்க்காமல் எப்படி சார் கண்டுபிடித்தீர்கள்' என்று கேட்டேன். அவர் நிதானமாக பதில் சொன்னார், "அப்படிச் சொல்வதற்குத்தான் நாங்கள் டாக்டருக்குப் படித்திருக்கிறோம்' அவரது படிப்பே அவரது திறமை, அவரது திறமையே நோயாளிகளுக்கு வைத்தியம். ஒவ்வொரு நோயாளிக்கும் போதிய நேரம் எடுத்துக்கொள்வார். அசாத்திய பொறுமை உண்டு. நிறுத்தி நிதானமாகப் பேசுவார். எப்போதும் அவர் அப்படித்தான் என்று நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இப்போது விதம் விதமான பரிசோதனைகள் வந்துவிட்டன. அந்தக் காலத்தில் இந்த வசதிகள் இல்லை. தங்கள் படிப்பறிவினால், அனுபவத்தினால், சரியான ஊகத்தினால் வைத்தியர்கள் நோயைக் கண்டுபிடித்து முறையான வைத்தியம் செய்தார்கள். அப்போது டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் தெரிய வந்ததெல்லாம் பாதரசம் நிரம்பிய கண்ணாடி தெர்மாமீட்டர், சிரிஞ்ச், ஸ்டெதஸ்கோப், எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை அவ்வளவுதான். இன்று எத்தனை விதமான பரிசோதனைக்கருவிகள் வந்துவிட்டன. திருவேங்கடத்தின் முக்கிய கருவி அவரது கண்ணும், மனமும்தான்.

அந்தத் தலைமுறை டாக்டர்கள் அப்படித்தான். அவர்களில் இவருக்கு அந்தத் திறமை அதிகமாக இருந்தது. காரணம் இவர் பல வருட காலம் மருத்துவத்துறை பேராசிரியராக இருந்தவர்.

இவர் சென்னை ஸ்டான்லி கல்லூரியில் மருத்துவம் படித்தவர். அங்கே 1950-இல் முதன்மை மாணவராகத் தேர்ச்சி பெற்று பல பதக்கங்களையும், பரிசுகளையும் பெற்றவர். தான் படித்த அதே கல்லூரியிலும், பிற கல்லூரிகளிலும் பேராசிரியராக இருந்தவர். இவரது மாணவர்களே இன்று ஓய்வு பெற்றுவிட்டார்கள். அவர்கள் எல்லோரும் ஆசான்களின் ஆசான் என்று இன்று இவரை நினைவு கூறுகிறார்கள். டாக்டராக தொழில் நடத்துவது ஒருபுறம் இருக்க, மருத்துவப் பாடங்கள் நடத்துவதற்கு விசேஷத் திறமை வேண்டும். அது இவரிடம் இருந்தது. இப்போது ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு பேராசிரியர் உண்டு. அந்தக் காலம் மருத்துவத் துறையில் பல உட்பிரிவு பாடங்களையும் நடத்த வேண்டும். அப்படி எல்லாப் பாடங்களையும் நடத்தியவர் கே.வி.டி. படிப்பவர், படிப்பிப்பவர் என்பதனால் அவரது அனுபவமும், அனுமானமும் தனிப் பரிமாணங்களைப் பெற்றன. 1982-இல் ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைட்டி ஆஃப் ஃபிசிஷியன்ஸ் (FRCP) என்ற கெளரவத்தைப் பெற்றார். இவரது சிறப்பு என்னவென்றால் தான் பெற்ற பரிசுகளுக்கும், விருதுகளுக்கும் கெளரவம் சேர்த்தவர் என்பது.

தன் மருத்துவத்துறைப் பணிச் சிறப்புக்காக பத்மஸ்ரீ விருதையும். பி.சி.ராய் விருதையும் பெற்றவர். படிப்பு என்பது தொடர் முனைவு என்பதை அறிந்திருந்தவர் அதனால் மருத்துவராகவும், மருத்துவப் பேராசிரியராகவும் இருந்த போது நெஞ்சக நோய்கள் பற்றி படிப்பதற்காக இங்கிலாந்தில் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றார்.

டாக்டர் கே.வி.டி அதிகம் பேசமாட்டார். அவரிடம் மெலிதான நகைச்சுவை உணர்வு உண்டு. ஒருமுறை டாக்டர் திருவேங்கடம் பிரபல நாதஸ்வர வித்வான் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனுக்கு வைத்தியம் செய்ய வேண்டியிருந்தது. "நீங்கள் இன்னின்ன உணவு சாப்பிடலாம், இன்னின்ன உணவு சாப்பிடக்கூடாது என்று ஒரு பட்டியல் கொடுத்தார். அடுத்த சில மாதங்களில் ஒரு ஹோட்டலில் திருவேங்கடம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அங்கு வந்தார், அவரைப் பார்த்துக் கேட்டார், "நான் என்னென்ன சாப்பிடக்கூடாது என்று சொன்னீர்களோ அதை நீங்கள் சாப்பிடுகிறீர்களே!' டாக்டர் பட்டென்று பதில் சொன்னார், நீங்கள் தான் பேஷன்ட் நான் அல்லவே.

தான் வகித்த பதவிகள் மூலம் அரசாங்கத்திலும், அரசியலிலும், தொழில் மற்றும் பொதுத்துறையிலும் பல பெரிய மனிதர்கள் இவருக்குப் பழக்கம் ஆனவர்கள். இருந்தாலும் இவர் எந்தக் காரணம் கொண்டும் சிபாரிசுகளை ஏற்றதில்லை. ஒருவருக்குத் தகுதி இருக்கிறது என்றால் நிச்சயம் தேர்வு பெறுவார். தகுதியில்லாதவர்கள் தேர்வு பெறாதது பற்றி கவலைப்படலாமோ என்று கேட்டார். அதிலுள்ள நியாயத்தை உணர்ந்துகொண்டு சிபாரிசு செய்தவர்களே தங்கள் சிபாரிசை வற்புறுத்தியதில்லை.

அதே நேரம் தான் யாரிடமாவது சட்டப்படியான சகாயம் பெற வேண்டும் என்றால் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை அணுகுவார். தன் கோரிக்கையை மென்மையாக எடுத்து வைப்பார். காரியம் சாதகமானதும் அவர்களுக்கு ஆத்மார்த்தமான முறையில் நன்றி தெரிவிப்பார். இது அவரது பழக்கம். மருத்துவரை பல நோயாளிகள் மட்டுமே நினைவு வைத்திருக்கிறார்கள். ஒரு மருத்துவப் பேராசிரியரை நூற்றுக்கணக்கான மருத்துவத் துறை மாணவர்கள் நினைவில் வைத்துக்கொள்கிறார்கள். அப்படி இன்றைய பல சீனியர் மருத்துவர்களால் மறக்கப்பட முடியாத மருத்துவர் டாக்டர். கே.வி.டி. ஆசான் என்பது பெருமை. ஆசான்களின் ஆசான் என்பது அதைவிடப் பெருமை அல்லவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com