நான் உள்ளே நுழைந்தவுடனேயே அங்கு இருந்தது யார் தெரியுமா? கவியரசர் கண்ணதாசன், இசை இரட்டையர்களான எம்.எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி, இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர், ஏவி.எம். அதிபர்களான எம்.முருகன். எம்.குமரன், எம்.சரவணன் ஆகியோர் அமர்ந்து இருந்தார்கள். எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். கவியரசர் கண்ணதாசன் என்னைப் பார்த்து "வாம்மா வா' என்றார். அன்று தான் நாங்கள் ஒகேனக்கல் போய் எடுக்கப் போகும் பாடலை உருவாக்கும் முயற்சியில் இருந்தனர். கண்ணதாசன், பாடல் வரிகளைக் கூட எழுதத் தொடங்கவில்லை. அதற்குள் நான் அவர் முன் போய் நின்றேன். என்னைப் பார்த்தவுடன் அவர் சொன்ன வரி என்ன தெரியுமா? "ரோஜா மலரே ராஜகுமாரி' என்ற முதல் வரியை சொன்னார். அவர் பாட்டு எழுதிக் கொண்டு இருந்தார். நான் எல்லோரையும் பார்த்து வணக்கத்தை வைத்து விட்டுக் கிளம்பினேன். இன்று எல்லோரும் சச்சுவைப் பற்றிக் குறிப்பிடும் போது இந்தப் பாடலைக் கூறாமல் இருந்ததில்லை. அந்த அளவிற்கு என் உருவமும், பாடலின் வரிகளும் கலந்து விட்ட ஒன்று.