6 ஆயிரம் அடி உயரத்தில் அதிசய சிற்பங்கள்
தரையில் சிலைகள் சிற்பங்கள் வடிப்பது எளிது. ஆனால் ஆறாயிரம் அடி உயரமுள்ள மலைக்குன்றின் உச்சியில் சிற்பங்கள் வடிப்பது என்பது சாதாரண காரியமா? அதுவும் பிரம்மாண்டமான சிற்பங்கள்!


தரையில் சிலைகள் சிற்பங்கள் வடிப்பது எளிது. ஆனால் ஆறாயிரம் அடி உயரமுள்ள மலைக்குன்றின் உச்சியில் சிற்பங்கள் வடிப்பது என்பது சாதாரண காரியமா? அதுவும் பிரம்மாண்டமான சிற்பங்கள்!
அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாநிலத்தில் உள்ளது கருப்பு மலைத்தொடர். இதைப் பிளாக் மவுண்டன் என்பார்கள். இங்கே இருப்பது தான் பிரம்மாண்டமான ஆறாயிரம் அடி உயர குன்று. வெறும் கருங்கல் பாறையாக உள்ள இந்தக் குன்றின் மீது ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்சன், தியோடர் ரூஸ்வெல்ட், ஆபிரகாம் லிங்கன் ஆகிய புகழ்பெற்ற நான்கு அமெரிக்க ஜனாதிபதிகளின் முகங்களைப் பிரம்மாண்டமான அளவில் செதுக்கியிருக்கிறார்கள். இந்த மாபெரும் மலையின் பெயர் தான் "மவுண்ட் ரஷ்மோர்'.
அந்த முகம் ஒவ்வொன்றும் 465 அடி உயரம் உள்ள ஒரு மனிதனது முகம் போல் அவ்வளவு பெரியதாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. அவை நெற்றி முதல் மோவாய் வரை 62 அடி உயரம் உள்ளன.
இந்தப் பெரிய முகங்களை ஒரு மலை மீது ஆறாயிரம் அடி உயரத்தில் செதுக்கிய பெருமை கட்ஸன் என்ற அமெரிக்கச் சிற்பியைச் சாரும். ஜனநாயத்திற்கு ஒரு சின்னம் அமைக்க வேண்டும் என்ற செளத் டகோட்டா வரலாற்றுச் சங்கத்தின் நிர்வாக அதிகாரியாக இருந்த டான் ராபின்ஸன் என்ற சரித்திரப் பேராசிரியரது யோசனையை அமெரிக்காவின் மத்திய அரசும் டகோட்டா மானின் அரசும் ஏற்றுக்கொண்டன.
இதை அடுத்துக் கலிபோர்னியாவிலும், பிரான்ஸ் நாட்டிலும் சிற்பக்கலை பயின்ற சிற்பி கட்ஸன் இந்தச் சிறப்புப் பணியை ஏற்றுக்கொண்டார். இதற்காகத் தேர்தெடுக்கப்பட்ட மலை தான் மவுண்ட் ரஷ்மோர்.
இந்தப் பணி 1927-ஆம் ஆண்டுத் தொடங்கியது. டைனமைட் வெடி மருந்தையும், உபயோகித்து 40 ஆயிரம் டன் கற்களை வெட்டி எறிந்து இந்த முகச்சிற்பங்கள் உருவாகத் தொடங்கினார். அவற்றைத் தத்ரூபமாகச் செதுக்க ஐந்தடி உயரமுள்ள மாதிரி வடிவ முகங்களைச் செதுக்கி ரஷ்மோர் மலையின் உச்சிக்கு எடுத்துச் சென்று மாதிரி வடிவத்தைப் போன்று மேலும் 100 மடங்கு பிரம்மாண்டமான முகங்கள் செதுக்கப்பட்டன.
14 ஆண்டுகள் பிடித்த இந்த மாபெரும் பணி, முடிவடையும் தருவாயில் கட்ஸன் 1941-ஆம் ஆண்டுத் திடீரென்று இறந்துவிட்டார். அதனால் அவருடைய மகன் லிங்கன் தொடர்ந்து அந்தப் பணியை மேற்கொண்டு சிற்பங்களைச் செதுக்கி முடித்தார்.
பிரசித்திப்பெற்ற நான்கு ஜனாதிபதிகளின் முகங்களான மேற்படி சிற்பங்கள் 500 மில்லியன் ஆண்டுகள் பழுதடையாமல் இருக்கும் என்று புவியியல் நிபுணர்கள் கருதுகின்றனர். கால நிலையினால் லட்சம் ஆண்டுகளில் இந்த முகங்களின் மூக்கின் அளவு ஒரு அங்குலம் தேய்ந்து விடக்கூடும் என்று முன்னதாகேவே கணக்கிட்ட கட்ஸன் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் முகத்தில் அவரது மூக்கை ஒரு அடி அதிகமாக அமைத்துச் செதுக்கினாராம்.
காலநிலை மாற்றம் மற்றும் நிதி வசதி போதாத நிலை, இவற்றைத் தவிர்த்து வெறும் சிற்பப் பணிக்கு மட்டும் ஆறரை ஆண்டுகள் பிடித்தன. அன்றைய காலகட்டத்தில் இதற்குச் செலவான பத்து லட்சம் டாலர்களில் 84 சதவிகிதத்தை அமெரிக்க அரசு கொடுத்து உதவியது.
ராபிட் சிடி என்ற ஊரிலிருந்து 25 மைல்கள் மனம் கவரும் ரம்மியமான மலைகளின் நடுவே அழகான சாலையின் வழியே காரில் சென்று இந்த ரஷ்மோர் மவுண்டை அடையலாம்.
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் உதிக்கும் ஆதவனது பொற்கிரணங்கள், அந்திப் பொழுதில் தோன்றும் செங்கதிர்கள், ஜார்ஜ் வாஷிங்டன் முகத்தில் விழும்படி இந்தச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரவில் மின் விளக்கு ஒளியில் பிரகாசிக்கும் இந்தப் பிரம்மாண்டமான மலைச்சிற்பத்தைப் பகலில் 96 கி.மீ தூரத்திலிருந்தே பார்க்க முடியும்.
அமெரிக்க ஜனாதிபதிகள் பலர் இருக்க இந்த நான்கு ஜனாதிபதிகளின் முகங்களை மட்டும் பிரம்மாண்டமான மலையுச்சியில் சிற்பமாக வடிக்கக் காரணம் என்ன?
சுதந்திர அமெரிக்க நாட்டின் முதலாவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர் ஜார்ஜ் வாஷிங்டன், அடுத்த ஜனாதிபதியாகத் திகழ்ந்த தாமஸ் ஜெஃபர்ஸன் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதிய ஆசிரியர்.
அதை அடுத்துள்ள ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் அரசுக்கும், மக்களுக்கும் உள்ள உறவை மதிக்கும் முற்போக்குக் கொள்கையுள்ளவர்.
அடுத்து அடிமைத்தனத்தை அழிக்கப் பாடுபட்டவரும் அமெரிக்க உள்நாட்டுப் போரில் முனைந்திருந்த சமயம் மாநிலங்களில் கூட்டுறவு சீர் குலையாமல் பாதுகாத்த ஜனநாயகவாதி ஆபிரகாம் லிங்கனின் சிலை.
இத்தகைய நான்கு ஜனாதிபதிகளையும் என்றென்றும் மக்கள் நினைவில் நிறுத்தவே இந்த ரஷ்மோர் மலைச்சிற்பங்கள் உருவாக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...