நானும் நடிகை ராஜஸ்ரீயும், மறைவில் இருந்து வெளியே வந்தோம். நடிகை காஞ்சனா ஒரு புறம் இருந்து வெளியே வர, "ஏன் இந்தக் கூச்சல் குழப்பம்', என தெரிந்தவர்களிடம் கேட்டேன். "நாங்கள் எல்லோரும் படத்தையும் பார்த்து விட்டு, நடித்த நடிகையர்களைப் பார்க்க வந்தோம். எங்களைத் தடுத்து நிறுத்திவிட்டால் எப்படி' என்றனர். அதற்கு நிகழ்ச்சி நடத்துவோர், "நாங்கள் நடிகர், நடிகையர் எல்லோரையும் வாசலுக்கு வரவழைத்து விட்டு, நிகழ்ச்சியை நடத்துகிறோம்' என்று தமிழிலும், கன்னடத்திலும் சொன்னார்கள். நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடத்த நீங்கள் ஒத்துழையுங்கள்,என்று கேட்டு கொண்டார்கள். சொன்னது போலவே நாங்கள் எல்லோரும் வெளியே போய் நின்று, அவர்களுக்குக் கை அசைத்து விட்டு, அவர்கள் கேட்ட ஒன்று இரண்டு கேள்விகளுக்குப் பதில் அளித்து விட்டு, உள்ளே வந்தோம். அப்புறம் தான், அங்குக்கூடி இருந்த மக்கள் நாங்கள் நிகழ்ச்சியை நடத்த அனுமதித்தார்கள்.