ரோஜா மலரே! - 78: நான்கு மொழிகளில் நாயகி!
நான் சினிமாவில் 55 ஆண்டுகள் வெற்றிகரமாக நடிப்பு உலகில் இருந்ததால், எனக்கு ஒரு விழா எடுத்தார்கள்.


நான் சினிமாவில் 55 ஆண்டுகள் வெற்றிகரமாக நடிப்பு உலகில் இருந்ததால், எனக்கு ஒரு விழா எடுத்தார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் கூடி இருந்த அந்த விழாவில், அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், என் வாழ்க்கையில் பொன் எழுத்துகளால் போற்றி, பாதுகாக்கப்பட வேண்டிய வார்த்தைகள்.
""உங்களிடம் நிறைய விஷயங்கள் பாராட்டும் வண்ணம் உள்ளது. அதில் ஒரு விஷயத்தை, இன்று, இங்குச் சொல்லலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. "காதலிக்க நேரமில்லை' படத்தில், நீங்கள் நகைச்சுவை வேடம் ஏற்று இருந்தாலும், அதையும் உதாசீனப்படுத்தாமல் ஒப்புக்கொண்டு நடித்தீர்களே, அதை இங்குப் பாராட்டியே ஆக வேண்டும். உங்களிடம் அழகு, திறமை, எல்லாம் இருந்தும், நான் இந்த மாதிரி பாத்திரத்தில் தான் நடிப்பேன் என்று முரண்டு பிடிக்காமல், நகைச்சுவை வேடம் என்றாலும், அதிலும் உங்கள் திறமையைக் காண்பித்து நடித்துப் பெயரும் புகழும் பெற்றீர்கள். அதை நான் எவ்வளவு பாராட்டினாலும் தகும். பல்வேறு நடிகைகள், நகைச்சுவை வேடம் ஏற்று நடித்திருக்கிறார்கள். ஏன் நானும் கூட நடித்து இருக்கிறேன்'' என்று சொன்னார். அந்த விழா எடுக்கும் போது நான் நகைச்சுவை வேடத்தில், பல படங்களில் நடித்து முடித்து விட்டேன். அனுபவசாலி நடிகை அஞ்சலிதேவி சொன்னதற்கு பிறகு, நாம் எடுத்த முடிவு சரியானது தான் என்று என் மனம் அமைதியானது.
என்னுடைய திரையுலக வாழ்க்கையில் நான் தமிழில் நாகேஷுடன் தான் அதிகமான படங்களில் ஜோடியாக நடித்தேன். சுமார் 50-60 படங்களில், நாங்கள் இருவரும் இணைத்து நடித்திருப்போம். நாகேஷைப் பற்றி, இந்த இடத்தில் சொல்லியே ஆகவேண்டும். எங்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் ஜோராக அமைந்து விட்டது என்று எல்லோரும் சொல்லுவார்கள். "காதலிக்க நேரமில்லை' படத்திற்குப் பிறகு, அவர் எப்படி நடிப்பார், இந்தப் பாத்திரத்திற்கு எப்படி வசனம் பேசுவார், எப்படி உடல் அசைவு இருக்கும் என்று நான் ஒரு வகையில் தெரிந்து கொண்டேன். நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நடித்ததால், நான் நாகேஷுடன் நடிப்பில் பொருந்தி விட்டேன்.
நாகேஷ் நடிப்பிற்கு ஏற்றார் போல், என்னுடைய நடிப்பை மாற்றி, புது வழியை நானே உருவாக்கிக் கொண்டேன். அது போல, நாகேஷ் அவர்கள் நடிக்கும் போது, அவருக்கு ஏற்றார் போல நான் மாறுவதற்கு நான் தெரிந்து கொண்டேன். நகைச்சுவையில் டைமிங் சென்ஸ் மிகவும் முக்கியம். அதில் நாகேஷ் மன்னர். நான் அவருக்கு ஏற்றார் போல் படங்களில் பேசியதால் மட்டுமே, நிலைத்து நிற்க முடிந்தது.

நாகேஷ் அசராத உழைப்பாளி. என்னதான் கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள், எங்களுக்கு எழுதிக் கொடுத்தாலும், நாங்கள் நடிக்கும் போது, எங்களுடைய கற்பனையை சிறிது சேர்த்து கொண்டால் தான் அது சோபிக்கும். அந்த கற்பனைத்திறன் அதிகம் கொண்டவர். பல படங்களில், நானும், அவரும், நாங்கள் விரும்பும் வசனங்கள் பேசியே, அந்தக் காட்சியைச் சிறப்பாகச் செய்திருக்கிறோம். அவர் சொல்லும் வசனத்திற்கு நான் பதில் கொடுப்பேன். இயக்குநர் ஒத்துக்கொண்டால் அந்த வசனங்கள் படங்களில் இடம் பெறும்.
அந்தக் காலத்தில் எம்.என்.ராஜம், ராஜசுலோச்சனா ஆகியோர் எல்லா விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தார்கள். அதற்குப் பிறகு நான் வந்தேன். ஆனால் எல்லோரும் என்னைப் பார்த்தவுடன், "நீ கதாநாயகியாக நடிக்க வேண்டியவள்' என்று தான் கூறினார்கள். திரையுலகில் உள்ள பலர், "எதற்காக நீ நகைச்சுவை நாயகியாக நடிக்கிறாய் என்று கேட்டார்கள். நீ அழகாக இருக்கிறாய், ஏன் அவசரப்பட்டு நகைச்சுவை நாயகி ஆகிவிட்டாய்' என்று கூறினார்கள்.
ஒரு சில படங்களில் நகைச்சுவை கதாநாயகியாக வேடம் கொடுத்தும் என்னை நடிக்க வைத்தார்கள். பாட்டுக்கும், நடனத்திற்கும் முக்கியத்துவம் உள்ள வேடங்களைக் கொடுத்தும் நடிக்க வைத்தார்கள். ஆனால் மலையாளத் திரைப்பட உலகில் எனக்கு கதாநாயகியாக வேடங்கள் கொடுத்து நடிக்க வைத்தனர். அதில் ஒரு படத்தின் பெயர் "சுபைதா'. அதைத் தொடர்ந்து மேலும் சில மலையாளப் படங்களில் நான் கதாயநாயகியாக நடித்தேன். கன்னடத் திரையுலகிலும் கதாநாயகியாக அங்கீகரித்தார்கள். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். அதே போல் தெலுங்கு பட உலகில், நடிகர் காந்தாராவுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் நாயகியாக அந்தக் காலத்திலேயே நடித்துப் புகழ் பெற்றேன்.
நாகேஷ் எங்களோடு இருக்கும் போது "ஜோக்' அடிப்பார். சில சமயம் தத்துவமாகப் பேசுவார். அவர் சும்மா இருந்து நான் பார்த்த இல்லை. இந்த நகைச்சுவை நடிகர்களுக்கே எப்பவும் பிரச்னைகள், சோதனைகள் அதிகம் வரும். அதற்கு உதாரணம், நாகேஷ், சந்திரபாபு ஆகியோரை சொல்லலாம். ஆனால் சோதனைகள் உள்ளத்தில் இருந்தாலும், படப்பிடிப்புக்கு வந்து விட்டால், காமிரா முன்னால் நின்று விட்டால், கருமமே கண்ணாக இருந்து, அந்தப் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து விட்டுத்தான், செல்வார்கள்.
சோகக் காட்சிகள் வேறு, நகைச்சுவை காட்சிகள் வேறு. சோகக் காட்சிகள் நடிக்கும் போது வீட்டில் நடந்த ஒரு சோகச் சம்பவத்தை நினைத்து, சோக முகத்தை வர வழைத்துக் கொள்ளலாம். ஆனால் நகைச்சுவையை எப்படி வரவழைக்க முடியும்?
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...