தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராயப்பேட்டையல்ல, கலைஞர்கள் கோட்டை! - 2

எங்களது இல்லத்தின் வலப்புறம் அவ்வை சண்முகம் சாலையில், காதிபவன் கட்டடத்தின் அருகில் தான் திரைப்பட இயக்குநர் ஏ.பி.நாகராஜன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

News image
Updated On :28 பிப்ரவரி 2021, 4:14 pm

பாடகர் டி.கே.எஸ்.கலைவாணன்


எங்களது இல்லத்தின் வலப்புறம் அவ்வை சண்முகம் சாலையில், காதிபவன் கட்டடத்தின் அருகில் தான் திரைப்பட இயக்குநர் ஏ.பி.நாகராஜன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அதே பகுதியில் பெசன்ட் தெருவில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் முதன்முதலாக சொந்த வீடு வாங்கி குடியேறினார். அந்த வீடு அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எங்கள் வீட்டிற்குப் பின்புறம் அமைந்திருந்தது. அதன் காரணமாக சிவாஜி அவருடைய வீட்டு மேல் மாடிக்கு வந்தால், எங்கள் வீட்டு மாடியில் இருந்து அவரை அடிக்கடி பார்த்து கையசைப்போம். அவரும் பதிலுக்கு கையசைத்து சிரிப்பார். 

பின்னர் ஒரு நாள் எங்கள் வீட்டின் பின்புறம் மதில் சுவரையொட்டி எங்கள் வீட்டில் இருந்த மர ஏணியை எடுத்து போடச் சொல்லி, மதில் சுவர் மேலேறி எங்கள் வீட்டுக்குள் குதித்து வந்து, எங்களுடன் கால்பந்து விளையாடினார். எங்களுக்கெல்லாம் குதூகலமாக இருந்தது. பின்னர் அவருக்குப் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் அடிக்கடி இதே போல் வந்து எங்களுடன் விளையாடுவார். தந்தையாரிடம் பேசிவிட்டு செல்வார். அவர் வீட்டு மாடியில் உடற்பயிற்சி செய்வதை நாங்கள் பல முறை பார்த்திருக்கிறோம். 

எங்கள் வளாகம் நிறைவடையும் இடத்திற்குப் பின்புறம் தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வீடும் இருந்தது. அந்த வீட்டையும் சிவாஜி வாங்கிவிட்டார். எங்கள் வீட்டின் பின்புறம் குடியிருந்த அவர், பின்னர் இந்த என்.எஸ்.கே வீட்டுக்கு குடிபெயர்ந்தார். ஏற்கெனவே பெசன்ட் தெருவில் இருந்த வீட்டை சிவாஜி பிலிம்ஸ் என்னும் பெயரில் தமது படக்கம்பெனியின் அலுவலகமாக்கிவிட்டார். 

என்.எஸ்.கே வீட்டில் இருக்கும் போதும், சிவாஜிகணேசன் அங்குள்ள மதில் சுவரில் ஏறி எங்கள் வளாகத்திற்கு வந்து எங்களுடன் கால்பந்து விளையாடுவார். எங்களுக்கு பயிற்சியும் அளிப்பார். அப்போது தலையில் தலைப்பாகை கட்டிக் கொண்டு டிராயர் பனியனுடன் இருப்பார். அந்த வீட்டின் மேல் மாடியில் ஓலைக்கூரை வேய்ந்த கூடமொன்றிருக்கும், அதில் ஓர் சிறிய திரைப்பட அரங்கம் இருந்தது. அதில் அவ்வப்போது சிவாஜி தான் நடித்த படங்களைப் போட்டுப் பார்ப்பார். அது ஒரு சிறிய டழ்ர்த்ங்ஸ்ரீற்ண்ர்ய் பட்ங்ஹற்ழ்ங் ஆக இயங்கி வந்தது.

சில சமயங்களில் சிவாஜி படப்பிடிப்புக்கு போயிருப்பார். அப்போது அவர் தாயார் ராஜாமணி அம்மாள் அந்த அரங்கில் அமர்ந்து படம் பார்ப்பார். அப்போது எங்கள் வளாகத்திற்குள் விளையாடிக் கொண்டிருக்கும் என்னையும், என் சகோதரர்களையும் அங்கு படம் பார்க்க அழைப்பார். நாங்கள் போவோம். எங்களைப் பிரியமுடன் பல வகை தின்பண்டங்களைக் சாப்பிட கொடுத்து உபசரிப்பார். அங்கு "உத்தமபுத்திரன்', "அம்பிகாவதி' போன்ற படங்களைப் பார்த்திருக்கிறோம். 

அவர் காலை நீட்டி அமர்ந்து கொண்டு வெற்றிலை போட்டபடி படம் பார்த்துக் கொண்டிருப்பார். இதெல்லாம் அந்த வீட்டின் எங்கள் பழைய நினைவுகள். பின்னர் அந்த வீட்டை சிவாஜி தன் ஒரே தங்கை பத்மாவதிக்கு வழங்கி விட்டார். அவருடைய தங்கை கணவரின் பெயர் வேணுகோபால். அவர் சாந்தி தியேட்டரின் நிர்வாகியாக இருந்தார். சண்முகம் (முதலி) தெருவில் அவரது வீடு உள்ளது.

கலைவாணர் என்.எஸ்.கே அங்கிருந்து தி.நகரில் உள்ள வைத்தியராமன் தெருவில் வீடு வாங்கி குடியேறிவிட்டார். சிவாஜி தெற்கு போக் சாலையில் வீடு வாங்கிச் சென்றுவிட்டார். பெசன்ட் தெருவில் சிவாஜி மேலும் ஒரு இடம் வாங்கி வீடுகளைக் கட்டி அந்த வளாகத்திற்கு "அன்னை இல்லம்' என்று பெயரிட்டார். அங்குதான் அவருடைய பெண்கள் சாந்தி மற்றும் தேன்மொழி இருவரும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 

நான் ஏற்கெனவே கூறிய சண்முகம் (முதலி) தெருவில் தான் திரைப்படத் தயாரிப்பாளர் வீனஸ் பிக்சர்ஸ் அதிபர் கோவிந்தராஜன் வீடு இருந்தது. அங்கு தான் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருடைய மகன் தியாகராஜன் தான் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் மகள் செல்வியை திருமணம் செய்தவர். இந்த வீட்டில் தான் கலைவாணரின் மனைவி டி.ஏ.மதுரம் அம்மையார் (கலைவாணர் மறைந்த பிறகு) சில காலம் வாழ்ந்து வந்தார். காரணம் அவருடைய தங்கை தான் கோவிந்தராஜனின் மனைவியார் பட்டம்மாள்.

அதே தெருவும் தாண்டவராயன் தெருவும் சந்திக்கும் சந்திப்பில் திரைப்பட நடிகை எம்.என்.ராஜம் மற்றும் அவர் கணவர் பின்னணிப்பாடகர் ஏ.எல்.ராகவன் வீடும் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் என்.எஸ். நாராயண பிள்ளை குடியிருந்தார். 

அதே தாண்டவராயன் தெருவில் சிறந்த நாடக-திரைப்பட நடிகரும் சேவா ஸ்டேஜ் நாடகக்குழுவின் உரிமையாளருமான பாரதி கலைஞர் எஸ்.வி.சகஸ்ரநாமம் குடியிருந்தார். எங்கள் வீட்டு வளாகம் போன்றே சுமார் நாலரை கிரவுண்டு நிலத்தில் நான்கைந்து வீடுகளுடன் வசித்து வந்தார்.

அந்த வளாகத்திற்குள்ளேயே அவருடைய நாடகக்குழுவின் காட்சியமைப்பு செட்கள்,  உடைகள் போன்றவற்றைப் பாதுகாக்கும் குடோணும் அமைந்திருந்தன. 

அவர் வீட்டில் பல எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழா மற்றும் கலைஞர்களின் சந்திப்பு, நாடக ஒத்திகைகள் போன்றவைகளை நடத்த மாடியில் ஒரு கூடம் இருக்கும். அங்கு பல விழாக்கள் நடைபெற்றிருக்கின்றன. நாடகக் கலைஞர்கள் ஒன்று கூடி கேரம் போர்டு போன்றவைகளை பொழுதுபோக்காக விளையாடி மகிழ்வார்கள். அவர்களுடன் சகஸ்ரநாமமும் விளையாடுவார். 

எப்போதும் கலகலப்பாக இருக்கும் வீடு அது. அவரது மகளுக்குத் திருமணமும் அங்குதான் நிகழ்ந்தது. அவருடைய ஒரே மகன் சிவகுமார் என்னும் எஸ்.எஸ்.குமார் தொடக்கப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளி வரை என்னுடன் ஒன்றாகப் படித்த பள்ளித் தோழர் ஆவார்.

அந்த தெருவின் பக்கத்தில் உள்ள ரிபேரோ தெருவில் தான் திரைப்பட இயக்குநர் ப.நீலகண்டன் குடியிருந்தார். தாண்டவராயன் தெருவில் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனின் வீடு இருந்தது. ஏ.எல்.எஸ். புரொடெக்ஷன்ஸ் அலுவலகமும் அவர் வீட்டிலே இருந்தது. 

தற்போது அங்கு அவரது மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் வசித்து வருகிறார். அதன் பக்கத்து வீடு பழம்பெரும் திரைப்பட இயக்குநர் பி.புல்லையாவுடையது.
 அவர் மனைவியும் திரைப்பட நடிகையுமான சாந்தகுமாரி அங்குதான் வசித்து வந்தார். அந்தத் தெருவிலும் சிவாஜிக்கு ஓர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. "சிவாஜி என்கிளேவ்' என்று அக்குடியிருப்புக்குப் பெயர்.

பெசன்ட் தெருவில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் பிரண்ட் ராமசாமி குடியிருந்தார். அவர் டி.கே.எஸ்.நாடகக்குழுவில் சீனியர் நடிகர். அச்சந்திப்பில் இருந்து நாம் வடக்கே சென்றால் நகைச்சுவை நடிகர் டி.என்.சிவதாணுவின் வீடு. சீனிவாச பெருமாள் 3-ஆவது தெருவில் உள்ளது. "மீனாட்சி கலா நிலையம்' என்பது அவரது வீட்டின் பெயர். அவர் டி..கே.எஸ் நாடகக்குழுவின் சீனியர் நடிகர் மட்டுமல்ல. டி.கே.எஸ் சகோதரர்களின் மைத்துனரும் கூட.  

அதற்கு பக்கத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் 2-ஆவது தெருவில் நகைச்சுவை நடிகர் பி.டி..சம்பந்தம் குடியிருந்தார். அருகில் உள்ள பொன்னுசாமி (நாயக்கன்) தெருவில் நடிகைகள் எஸ்.ஆர்.ஜானகி, கே.ஜி. கோமளம் (இவர் டி.கே.எஸ் நாடக சபை நடிகை)  திரைப்படப் பின்னணி பாடகர் எஸ்.வி.பொன்னுசாமி ஆகியோரும் அருகில் சீனிவாசப்பெருமாள் 2-ஆவது தெருவில் குண்டு கருப்பையாவும் (குண்டு கல்யாணத்தின் தந்தை. இவர் டி.கே.எஸ். நாடக சபையில் நடிகராகப் பணியாற்றியவர்) வசித்து வந்தனர்.

"எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்' என்ற ஒரே வசனத்தை முதல் மரியாதை படத்தில் பேசி புகழ் பெற்ற ஏ.கே.வீராசாமி அம்மையப்பன் (முதலி) தெருவில் குடியிருந்தார். 

அதே தெருவில் தான் எம்.ஜி.ஆர் நடித்த "காவல்காரன்' படத்தில் வசன கர்த்தாவாக விளங்கியவரும் டி.கே.எஸ் நாடக சபைக்கு "சித்தர் மகள்' என்னும் புகழ் பெற்ற நாடகத்தை எழுதியவரும், சென்னை புதுக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றிவருமான நா.பாண்டுரங்கன் வசித்து வந்தார். 

அருகில் உள்ள சீனிவாசப்பெருமாள் சந்நிதி தெருவில் ராக்கெட் ராமநாதன் என்ற பழம்பெரும் நடிகர் இருந்தார். முத்து (முதலி) தெருவில் டி.கே.எஸ். சந்திரன் என்னும் பழம்பெரும் நடிகர் வசித்து வந்தார். இவரும் டி.கே.எஸ் நாடக சபையில் நடிகராக இருந்தவர். 

அதே தெருவில் புகழ்பெற்ற ஒப்பனைக் கலைஞர் பி.ஏ.பெருமாள் இருந்தார். இவர் பின்னாளில் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் தலைமை ஒப்பனையாளராகப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தான் தந்தையாருக்கு அவ்வையார் ஒப்பனை செய்தவர்.

பாலாஜி நகர் என்றழைக்கப்படும் பகுதியில், பட அதிபர் ஏ.வி.எம்.செட்டியாரின் ஒரே மகளின் கணவரும், சிறந்த திரைப்பட இயக்குநரும், தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளருமான அருண் வீரப்பன் வசிக்கிறார். அவருக்கு சொந்தமாக ஓர் டப்பிங் தியேட்டரும் இருக்கிறது. மீடியா ஆர்ட்டிஸ்ட்ஸ் என்று அந்த தியோட்டருக்குப் பெயர். அந்த தியேட்டரின் ஒலிப்பதிவாளர் ஸ்ரீதர் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஒலிப்பதிவில் வலதுகரமாக இருந்தவர். 

(அடுத்த இதழில் நிறைவுறும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.